மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே கருணாநிதிக்கு கிடையாது: ஜெயலலிதா

jeyi
ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 18 தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் பேசியுள்ளார்.

ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் எனது தலைமையிலான அரசு ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.

தி.மு.க முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையில் தி.மு.க. பொய்ப்பிரச்சாரம் செய்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை, கச்சத்தீவை தாரை வார்த்தது ஆகியவற்றிற்கு தி.மு.க.வே காரணம். வெள்ள பாதிப்பின்போது எனது தலைமையிலான அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு பற்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தற்போது பேசி வருகின்றனர். நான் ஏற்கனவே கூறியதுபோல், மதுவிலக்கு பற்றி பேசுவதற்கு கருணாநிதிக்கோ, தி.மு.க.வுக்கோ தகுதி கிடையாது.

தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர். பூரண மதுவிலக்கு தி.மு.க.வின் கொள்கை என்றால் அதுபற்றி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மதுவிலக்கு சட்டம் இயற்றப்படும் என்றும், டாஸ்மாக் கலைக்கப்பட்டு மதுவிற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

பூரண என்ற வார்த்தை அதில் இல்லை. எனவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே கருணாநிதிக்கும், தி.மு.க.வுக்கும் கிடையாது.

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற இலக்கு எய்தப்படும் என பேசியுள்ளார்.

Copyright © 7291 Mukadu · All rights reserved · designed by Speed IT net