புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கு. 12ம் சந்தேக நபர் வாக்குமூலம்

viththiyaaa 1
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியம் என மன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர் தனக்கு கொலை தொடர்பில் எதுவும் தெரியாது என நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் சந்தேக நபர்கள் இன்று புதன் கிழமை ஊர்காவற் துறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியாழ் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அதில் பன்னிரெண்டாம் சந்தேக நபரான ரவீந்திரன் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளதாகவும், அவர் கொலை தொடர்பிலான வாக்கு மூலத்தை மன்றில் அளிக்க தயாராக உள்ளதாகவும் நீதவானிடம் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து வாக்கு மூலம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னர் பன்னிரெண்டாம் சந்தேக நபரிடம் நீதவான் வாக்கு மூலத்தை திறந்த நீதிமன்றில் அளிக்க போகின்றீரா இல்லை, இரகசியமான முறையில் அளிக்க போகீறீரா என சந்தேக நபரிடம் நீதவான் வினாவினார்.

அதற்கு சந்தேக நபர் கொலை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. ஊரில் உள்ள ஏனையவர்களுக்கு என்ன தகவல் தெரியுமோ அதே தகவல் தான் எனக்கும் தெரியும் வேறு எந்த தகவலும் தெரியாது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர், மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தேக நபர்கள் குறித்த பன்னிரெண்டாம் சந்தேக நபரிடம் தான் மாணவி பாடசாலை செல்லும் நேரம் வீடு திரும்பும் நேரம் என்பனவற்றை கேட்டு அறிந்து கொண்டனர் என தெரிவித்தனர்.

அதனை பன்னிரெண்டாம் சந்தேக நபர் மறுத்தார். தன்னிடம் யாரும் மாணவி தொடர்பிலான தகவல்கள் எதனையும் கேட்டறிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.
குளோபல் தமிழ்

Copyright © 8736 Mukadu · All rights reserved · designed by Speed IT net