முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை- அஇமகா

இலங்கையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது.

acmc_rishad
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம்

அப்படியான ஒரு நிர்வாக மாவட்டம் தற்போது நாட்டில் இருக்கும் 25 நிர்வாக மாவட்டங்களுக்கு அப்பாற்பட்டு 26-ஆவதாகவோ அல்லது தென்கிழக்கு கரையோரம் தனியான நிர்வாக மாவட்டமாகவோ இருக்கலாம் என்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நிர்வாக நடவடிக்கைகள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே நடைபெறுவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த அக்கட்சியின் ருஸ்தி ஹபீப், தென்கிழக்கு கரையோர மாவட்ட மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுமாயின், அங்குள்ள மக்கள் இலகுவாக தமிழ் மொழியில் நிர்வாகத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறினார்.

கிழக்கு மாகாணம் தனி மாகாணமாக இருக்க வேண்டும் என்று சில முஸ்லிம் கட்சிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கிழக்கு பிரதேசங்கள் இணைந்த ஒரு மாகாணமாக இருக்க வேண்டும் என வட மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஒருதலைபட்சமானது என விமர்சித்துள்ள முஸ்லிம் கட்சிகள் சில, அவை தனித்தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும் எனக் கூறி வருகின்றன.
பிபிசி

Copyright © 3975 Mukadu · All rights reserved · designed by Speed IT net