எழுதித் தீராப் பக்கங்கள்…ரவீந்திரன். ப

Screenshot_20160425-000755
காலம் செல்வத்தின் «எழுதித் தீராப் பக்கங்கள்» கல்லும் பஞ்சும் இசைந்து உருவாகிய உள்ளடக்கம் கொண்டது. நகைச்சுவையான எழுத்துநடை சிரிப்பைத் தூவுகிறது. புகலிட வாழ்வின் ஆரம்ப காலம் தந்த துயரங்களின் மேலால் ஒரு காற்றில் ஆடியசைந்துவரும் பனிச் செதில்கள் போல வார்த்தைகள் வந்தமர்கிறது.

83 கலவரத்தின் பின்னரான இடப்பெயர்வு எண்ணற்ற அகதிகளாக பலரையும் மேற்குலகுக்கு கொண்டுவந்து சேர்த்தது. காலம் செல்வமோ இந்தக் கலவரத்துக்கு முன்னரே வந்துசேர்ந்த நூற்றுக்கணக்கான அகதிகளில் ஒருவர். இலங்கையையே வரைபடத்தில் அடையாளப்படுத்த சிரமமாக இருந்த சந்தர்ப்பங்களில் இந்தியா அல்லது «இந்தியாவுக்குக் கீழை» என அடையாளப்படுத்த வேண்டியிருந்தது.
இலங்கையின் கிராமிய வாழ்வில் உலாத்தித் திரிந்த எமக்கு கொழும்பு என்றாலே வெளிநாடு மாதிரி இருந்த காலமொன்றுண்டு. மேற்குலகுக்குள் விடப்பட்டால் எப்படியிருக்கும். எமது உடற் தோற்றம், நிறம், மொழி என எல்லாமே இந்த மண்ணுக்கு புதிசாய் வந்திறங்கியதான புதிரான பார்வை எம்மேல் விழுந்தபடி இருந்தது. திக்குத்தெரியாமல் விடப்பட்டோம். எமக்கு முன்னரான ஒரு தமிழ்த் தலைமுறை இல்லாத நிலையில் அகதித் தமிழரின் அல்லாட்டத்தை «எழுதித் தீராப் பக்கங்கள்» இல் செல்வம் அதற்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். கனடாவுக்கு இன்னுமொரு இடப்பெயர்வை செய்யும்வரையான அவரது பிரான்சின் அகதிவாழ்வு ஒரு «செற் அப்» க்குள் வரும்வரையான அவரது அனுபவங்களை பதிவுசெய்கிறது இந்த நூல். சுவாரசியமாக அவற்றை எழுதியிருக்கிறார். அதற்குப் பின்னால் ஒரு வலி அடங்கியிருக்கிறதை வாசகர் உணர்ந்தபடியே இருப்பர்.
புகலிட இலக்கியம் என்பது உண்மையில் இன்னமும் புகலிட வாழ்வின் எழுதாத பல பக்கங்களை கொண்டிருக்கிறது.

முக்கியமாக புலம்பெயர்தலில் நாடுகளுக்கூடாக அவர்களது நிச்சயமற்ற பயணங்கள் அதன்போது சந்தித்த மனிதர்கள் ஏஜென்சிக்காரரின் அட்டகாசங்கள் காடுகள் மலைகள் ஆறுகள் என விறைக்கும் குளிரிலும் கடந்தவர்கள் மாண்டுபோனவர்கள் என்றெல்லாம் பேசப்படாத பக்கங்கள் நிறையவே இருக்கின்றன. இந்த நூல் அதன் அர்த்தத்தைச் சுமந்து «எழுதித் தீராப் பக்கங்கள்» என பெயரிடப்பட்டது பொருத்தமானதுதான்.

அதுவும் பிரான்ஸ் தேசம் அகதிகளைக் கையாளுகிற முறைமை சுவிஸ், யேர்மன் போன்றோ ஸ்கன்டிநேவியன் நாடுகளைப் போன்றோ இல்லை. சுவிசைப் பொறுத்தவரை அகதித் தஞ்சம் கோருகிறவர்கள் அதற்கான முகாம்களில் எல்லா நாட்டவருடனும் தங்கவைக்கப்படுவர். ஒதுக்குப் புறங்களாகவோ மலைகளிலோ அவை பெரும்பாலும் இருந்தன. உறவினர் வேறு மாநிலங்களில் (கன்ரோன்) இருந்தாலும்கூட அதை கணக்கிலெடுக்காது, வெவ்வேறு மாநிலங்களுக்கும் அகதிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர். 6 மாதங்கள் அங்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் மொழி படிப்பதற்கென வகுப்பும் இருக்கும்.

பின்னர் வேலைசெய்வதாற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படும். வேலையை அந்தந்த மாநிலங்களுக்குள் மட்டும் தேட முடியும். உணவு விடுதிகளின் குசினிகள் எமக்கான கதவுகளைத் திறந்து வைத்திருந்தன. அதனால் மலையுச்சிவரை குக்கிராமங்களுக்கள்கூட நுழையவேண்டி ஏற்பட்டது. இந்த சமூகங்களுக்குள் ஒருவித நிர்ப்பந்தத்தில் விடப்பட்டபோது இந்த முறைமை மீது மிகக் கடும் விசனம் கொண்டிருந்தோம். ஆனால் இந்த முறைமைதான் இந்த நாட்டு சமூகங்களுடன் இயைந்து வாழ்வதற்கும் சமூகத்தின் ஜனநாயகப் பெறுமதிகளை கொஞ்சமேனும் உள்வாங்கிக் கொள்வதற்கும் உதவியிருக்கிறது.

ஆனால் அதற்கு நாம் கொடுத்த விலை உளவியல் ரீதியில் சுமையாகவே இருந்தது. நிறவாத கருத்தியலின் பார்வைக்குள் வெள்ளை மேலாதிக்கக் கருத்தியலை நாம் பல வடிவங்களில் சந்தித்தோம். அதை சந்திப்பதில் ஆபிரிக்கர்களைப் போல எம்மிடம் எதிர்ப்புணர்வு இருந்தது என சொல்ல முடியாது. அதே வெள்ளை நிற மேலாதிக்கக் கருத்தியலை எம்முள் நாம் ஏற்றிவைத்திருந்ததால் எம்மவர்கள் நிறவாதத்தை எதிர்ப்புணர்வுடன் அணுகுவதற்குப் பதில் கூனிக்குறுகிவிடுவதுதான் நடந்தது. இத்தோடு சேர்த்து அந்நியமான மொழியும் எமது சுயாதீனமான வாழ்வியக்கத்தை தடைசெய்திருந்தன. காலநிலை, உணவு என எல்லாமுமே புதிசாய் இருந்தன. 80 களின் இறுதிவரை இது மன இறுக்கமான நிலைமையையே பேணியது.

இந்த சமூகங்களுடன் காலநிலைகளுடன் இயைந்துவாழுகிற சந்தர்ப்பங்களின் காலநீட்சியும், தகவமைதலும், அறிகைகளும் சேர்ந்து பின்னரான காலங்களில் பெண்களின் வரவும், குடும்பமும், பிள்ளைகளும், அவர்களின் சமூக ஊடாட்டமும் என படிப்படியாக நிலை இப்போ பெரியளவில் மாறிப்போயிருக்கிறது. 90 களின்பின் வந்த தமிழர்களுக்கு உறவினர், நண்பர், ஊரவர் என ஒரு அறிமுக வட்டம் இருந்தது. வழிகாட்டல் இருந்தது. அதனால் அவர்களில் பலரும் இந்த முன்துயரை அனுபவித்தில்லை. அவர்களின் பிரச்சினை மற்றைய தளங்களில் ஒத்ததாக இருந்தது.
இந்த முன்துயரை செல்வம் பாரிஸ் நிலைமைகளுள் வைத்து பதிவுசெய்கிறார். எமது வாய்மொழியை விடவும் உடல்மொழியே அதிகமும் கைகொடுத்தபோதான சுவாரசியங்களுக்கு அளவே கிடையாது. செல்வம் அவற்றை அழகாகப் பதிவுசெய்திருக்கிறார்.
இப்படியே ஆரம்ப காலங்கள் பற்றிய பல சுவாரசியமான வாய்வழிக் கதைகள் இப்போதும் பேசிச் சிரிக்கிற விடயங்களாக உள்ளன. அதை செல்வம் ஒரு இலக்கியமாக இந்நூலில் அந்தச் சுவை குன்றாது எழுதியிருக்கிறார்.
எனது ஆரம்பகால நினைவுகள் பலவற்றை இந் நூல் கிளறியிருக்கிறது.

சப்பாத்துக் கடையில் சப்பாத்தை அளவு பார்த்து ஒன்றை கண்டடைந்தார் தமிழ் அகதியொருவர். ஆரம்ப நிலையிலிருந்தது அவரது மொழியறிவு. சப்பாத்தை கையிலெடுத்தவர் மற்றையதை தேடிப் பார்த்தார். காணவில்லை. அதை ஒரு கையில் உயர்த்திப் பிடித்தபடி அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணிடம் உதவி கேட்ட அவரது கேள்வியை (Wo ist andere Kollege?) அப்படியே மொழிபெயர்த்தால் »எங்கே மற்றக் கூட்டாளி» என்று வரும். அவள் புரிந்துகொண்டாள்தான் என்பது வேறுவிசயம்.

இப்படியேதான் 1985 இல் அத்தார் என எம்மால் ஆசையோடு அழைக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் எமது முகாமில் இருந்தார். அந்த அறைக்குள் ஆறாவது ஆளாக நான் புதிசாக உள்நுழைந்திருந்தேன். இலங்கையிலிருந்து வந்திருந்த கடிதத்தை வாசித்துவிட்டு «எடுக்கில் எடுத்துப் பார்» என்று பல்லை நெருமினார் அத்தார். பக்கத்தில் அவர் உறிஞ்சிக்கொண்டிருந்த பியர் போத்தல் இருந்தது. அதைத்தான் சொல்கிறார் என நினைத்தபடி நான் தூங்கிப் போய்விட்டேன். மறுநாளும் அதே கடிதத்தை முதலிலிருந்து கடைசிவரை அத்தார் வாசித்திருக்க வேண்டும். முடிந்ததும் இன்றும் «எடுக்கில் எடுத்துப் பார்» என்றார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இப்போ பியர் போத்தல் அருகில் இல்லையே. எனவே அத்தாரிடமே நேரில் கேட்டேன். ஏன் அத்தார் «எடுக்கில் எடுத்துப் பார்» எண்டிறியள். என்னத்தை? என கேட்டேன். «தம்பி. முன்னாலை ஆறுமுகத்தாற்றை பெடியனும் போட்டான். பின்னாலை பரஞ்சோதியற்றை பெடியனும் போட்டான். நீயும் போவனப்பா எண்டு மனிசி சொன்னது மட்டுமில்லை தாலிக்கொடியை அடைவு வைச்சு காசையும் புரட்டித் தந்தாள். ஒரு மூண்டு மாசத்திலை உழைச்சு தாலிக்கொடியை எடுத்திடலாம்தானே எண்டு வேறை சொல்லி அனுப்பினாள். நான் வந்து 5 மாசமாச்சு. வேலைசெய்யக்கூட விவிலிக்கமும் (அனுமதி) இல்லை. இதுக்கை தாலிக்கொடியை 3 மாசத்திலை எடுக்கலாம் எண்டு சொன்னனியோ மலர். எடுக்கில் எடுத்துப் பார்» என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தபோதுதான் புதிர் அவிழ்ந்தது.
இப்படியாய் பூனை நாய்க்;கு விற்கிற இறைச்சியை சமைச்சுத் தின்ற கதைகள் அவையளுக்கான பிஸ்கெற்றை வாங்கித் தின்ற கதைகள் என்றெல்லாம் இருக்கிறது. செல்வம் சொல்வது போலவே எழுதித் தீராப் பக்கங்களாக அவை உள்ளன.

இந் நூலை வாசிக்கிறபோதும் வாசித்து முடிக்கிறபோதும் பல கிளைக் கதைகள் உருவாகி எம்போன்ற அந்தக் காலத்தின் அகதிநாயகர்களை படைப்பாளியாக்குகிறது.

Copyright © 7355 Mukadu · All rights reserved · designed by Speed IT net