எவ்-16 யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய நோர்வே மருத்துவர்கள்

16217norway-2எவ்- –16 யுத்த விமானங்கள் தாக்குதல்களுக்குத்தான் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், நோர்வேயைச் சேர்ந்த மருத்துவர்கள் எவ்.-16 ரக யுத்த விமானத்தின் உதவியுடன் நோயாளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

நோர்வேயின் மத்திய பிராந்திய நகரான போடோவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவருக்கு Extracorporeal membrane oxygenation (எக்ஸ்ட்ராகேர்பரெல் மெம்பரன்ஸ்ஒக்ஸிஜினேஷன்) எனும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது.

இதயம், நுரையீரல் செயலிழந்த வர்களை உயிர்பிழைக்க வைப்பதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் இதய – நுரையீரல் சிகிச்சை இது. இச்சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மேற்படி நோயாளி உயிரிழந்துவிடுவார் என்ற நிலை இருந்தது.

ஆனால், இதற்கான கருவி போடோ நகர வைத்தியசாலையில் இருக்கவில்லை. விசாரித்தபோது. போடோ நகருக்கு தெற்கே 450 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ட்ரோன்ட்ஹெய்ம் எனும் நகரிலுள்ள வைத்தியசாலையில் இக்கருவி இருப்பது தெரியவந்தது.

விரைவாக சிந்தித்த மருத்துவர்கள், இக்கருவியை அவசரமாக போடோ நகருக்கு கொண்டு செல்வதற்காக நோர்வே விமானப் படையினரின் உதவியை நாடினர்.

அதையடுத்து அதிவிரைவாக பயணம் செய்யக்கூடிய எவ்–16 ரக யுத்த விமானத்தில் இக்கருவியை கொண்டுசெல் வதற்கு நோர்வே விமானப்படை அதிகாரிகள் இணங்கினர்.

இதனால், 25 நிமிடங்களில் மேற்படி கருவியை போடோ நருக்கு கொண்டு செல்ல முடிந்தது. சாதாரணமான விமானப் பயணத்தில் இதற்கு 35 நிமிட நேரம் சென்றிருக்கும்.

கடந்த 4 ஆம் திகதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக ட்ரோன்ட் ஹெய்ம் செயின்ற் ஒலாவ் வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் அன்டெர்ஸ் வெட்டிங் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் கோரிக்கை தகவல் விமானப்படையிருக்கு கிடைத்த வேளையில், ட்ரோன்ட்ஹெய்ம் நகருக்கு அருகிலுள்ள விமானப்படைத் தளத்திலிருந்து வேறு ஒரு நடவடிக்கைக்காக இரு எவ்–16 ரக விமானங்கள் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தன. அந்த விமானங்களில் ஒன்றை போடோ நகருக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.

“விமானப் படை அதிகாரிகள் அதிக கேள்விகளை கேட்கவில்லை. எந்த அளவான பொருள் என மாத்திரம் கேட்டார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு எவ் –16 யுத்த விமானத்தில் இறக்கையின் அடியில் பொருட்களை ஏற்றக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் எமது பொதியை வைத்து போடோ நகருக்கு அனுப்பினோம்” என டாக்டர் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

Copyright © 0816 Mukadu · All rights reserved · designed by Speed IT net