‘ஆப்ரேஷன் அ.தி.மு.க.’ – அமித் ஷா வகுத்த பி.ஜேபி. வியூகம்.

amithshanewonetwoமத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு, தமிழக அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றி வருகிறது. அதன் ஒரு கட்டம்தான், தேர்தல் நேரத்தில் பறக்கும் படை ரெய்டு நடத்தி கைப்பற்றும் பணக்குவியல்கள். இதுவரை இந்தியாவிலேயே முதல்முறையாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் வருமானவரித்துறை அதிகாரிகளும் இணைந்தே ரெய்டு நடத்த களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த மாதத்தில் இதுவரை 55 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கணக்கு காட்ட முடியாத பணம் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 125 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது மத்திய நிதித்துறைச் செயலகம். இவர்களின் தலைமையின் கீழ் சுமார் 300 அதிகாரிகள் களத்தில் உள்ளனர். இவர்களுக்கு மத்திய உளவுத்துறை (ஐ.பி), பணம் பதுக்கல் பேர்வழிகளைப்பற்றிய ரகசிய தகவல்களை உடனுக்குடன் அனுப்புகிறது. இதனால் மத்திய உளவுத்துறையின் தமிழக தலைவர் வர்மா ஐ.பி.எஸ்., தற்போது மிகப் பரபரப்பாக இருக்கிறார்.

தமிழகத்தில் முக்கியத் துறைகளைக் கவனித்த அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள், முதல்வரின் தோழி சசிகலாவின் உறவினர்கள் யார் யார், அவர்களின் பினாமிகள் யார்? எங்கெங்கே பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்? என்கிற அனைத்து விவரங்களும் உளவுத்துறையின் கையில் உள்ளது. இந்தவகையில், கரூரில் அன்புநாதன் என்பவரின் குடோனில் ஐந்து கோடியை பறிமுதல் செய்தனர். இவரின் பின்னணியில் தமிழக அமைச்சர் ஒருவர் இருந்ததை அம்பலப்படுத்தினர்.

அடுத்து, எழும்பூரில் விஜயகுமார் என்பவரின் அபார்ட்மெண்டில் ஐந்து கோடி பிடிபட்டது. இந்த விஜயகுமார், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு நெருங்கிய உறவினர்.

‘மத்திய அரசு திடீரென ஏன் கோபத்தை காட்டுகிறது?’ என்று அ.தி.மு.கழக முன்னணி தலைவரிடம் கேட்டபோது, ”இதெல்லாமே பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா செய்யும் தேர்தல் மாயஜாலம். தேர்தலில் கூட்டணி அமைக்க பல வகையில் அணுகினர். ஆனால், நாங்கள் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. அடுத்தகட்டமாக, மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழக அரசின் மீது விமர்சன மழை பொழிந்தனர். மூன்றாவது கட்டமாக, பி.ஜே.பி-யின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, ’டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மே 10-ம் தேதிக்குள் தீர்ப்பு வரும். அது, ஜெயலலிதாவுக்கு எதிராக அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

நான்காவது கட்டமாகத்தான் தற்போது வருமானவரித்துறையை எங்கள் மீது ஏவி விட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். எங்களிடம் 10 ராஜ்யசபா எம்.பிக்கள், 38 பாராளுன்ற எம்.பிக் கள் இருக்கிறார்கள். எங்களின் பலத்தை நிச்சயமாக டெல்லியில் காட்டுவோம்” என்றார்.

சென்னை எழும்பூரில் பிடிப்பட்ட 5 கோடி ரூபாய் பணத்தின் பின்னணி தற்போது அம்பலமாகியிருக்கிறது. அபார்ட்மெண்ட் வீடு விஜயகுமார் என்பவருக்கு சொந்தமானது. இவரின் மாமா மகன்தான் ராஜராஜன். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் ராஜராஜன். சென்னை வீட்டில் ரெய்டு நடந்தபோது, விஜயகுமாரின் மகன்கள் விஜய், ஆனந்த் இருவரும் அங்கிருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா தற்போது பயன்படுத்தும் தேர்தல் பிரசார வேனில் எல்.இ.டி. லைட்டிங் ஏற்பாடுகளை செய்தவர்களாம். தற்போது வருமானவரித்துறை பிடியில் இருக்கும் விஜய், ஆனந்த் இருவரும் உரிய ஆவணங்களை காட்ட முடியாமல் தவிக்கிறார்களாம்.
விகடன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net