“பிக்பென்” கடிகாரப் பழுதுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவிடுகிறது பிரித்தானிய அரசு

bigben
”பிக்பென்” கடிகாரப் பழுதுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவிடுகிறது பிரித்தானிய அரசு

உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான “பிக்பென்’ ஐப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என பிரித்தானிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தப் பணிகளுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவாகும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

பிக் பென் கடிகாரமும் அது அமைக்கப்பட்டுள்ள எலிஸபெத் கோபுரமும் முற்றிலும் பழுது பார்க்கப்படவுள்ளது.

இதற்கு 3 ஆண்டு காலமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடிகாரம் ஓடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டாலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிக்க மணி அடிக்கும்படி ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனின் அடையாளமாக இருந்து வருகிறது பிக்பென் கடிகாரம்.

முன்னதாக பழுது பார்க்கும் பணிக்கு 40 மில்லியன் பவுண்ட் செலவாகும் என்று பிரித்தானிய பாராளுமன்ற நிதிக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 29 மில்லியன் பவுண்டில் பராமரிப்பு நடைபெறவுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்தில் உள்ள கோபுர கடிகாரம் 1859 இல் அமைக்கப்பட்டது. கடிகாரம் அமைந்துள்ள எலிஸபெத் கோபுரத்தின் உயரம் 315 அடி. கடிகாரத்தை அடைய கோபுரத்தினுள் தற்போது 334 படிகள் உள்ளன. புதிதாக அங்கு லிஃப்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1976 இல் நடைபெற்ற பழுது பார்க்கும் பணியின்போது 26 நாட்களுக்கு மாத்திரம் கடிகாரம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net