“இரகசிய விசாரணை” ..ஒரு குறிப்பு.அமல்ராஜ் பிரன்சிஸ்

13007302_1327480527278579_1690523007516677677_n
பொதுவாக நண்பர்களின் கவிதைத்தொகுப்புக்களை பொது வெளியில் விமர்சனம் செய்வதில்லை என்கின்ற சத்திய வேள்வியில் சுமார் மூன்று ஆண்டுகளைப் போக்கிவிட்டேன். மனதில் பட்டதை எழுதியதற்காக என்னைப்பற்றி வசைபாடி நட்பை முறித்துக்கொண்டுபோன அந்த ‘கவிஞர்’ போல இன்னும் பல நண்பர்களை இழப்பதற்கு நான் தயாராக இல்லை. விமர்சனம் என்று வருகின்றபோது வெறும் அண்டப்புழுகனாய் இருப்பதற்கு நான் விரும்புவதில்லை. உண்மையை கறாராகச் சொல்லுவதற்கு எதற்குப் பயப்படவேண்டும்? பிறகு எதற்கு இப்பொழுது இந்த பாதரின் கவிதைப்புத்தகத்தை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேன் என நீங்கள் கேட்கலாம். காரணமிருக்கிறது.
முதலாவதாக அருட்பணி.யேசுதாஸ் என்னுடைய ஊர்க்காறர். நாங்கள் இருவரும் ஒரே குளத்தில் நீச்சலடித்தவர்கள். ஒரே பனைமரத்தில் நுங்கு தோண்டியவர்கள். ஒரே வீதி, ஒரே கோவில், ஒரே மறைக்கல்வி, ஒரே பாடசாலை.. இப்படி நெருக்கம் ஏராளம். நமது ஊர் சிறுவன் ஒருவனை ஓர்நாளில் குருவாகப் பார்க்கக் கிடைத்தால் நம் கண்களில் வழியும் விஸ்மிதம் எப்படியிருக்கும் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. யேசுதாஸை முதல் முறையாக வெள்ளையில் பார்த்தபோது அப்படித்தானிருந்தது. பெருமையை தலைபூராகவும் தடவிக்கொண்டேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரனின் முதல் முயற்சியை தட்டிக்கொடுக்க வேண்டாமா?
இரண்டாவது, இந்த நூலிற்காக அணிந்துரை எழுதுமாறு அருட்பணி.யேசுதாஸ் என்னைக் அணுகிய காலகட்டத்தில் நான் ஆப்கானிஸ்தானின் குண்டுகளுக்குள் வாழ்க்கையை துரத்திக்கொண்டிருந்தேன். தவிர்க்க முடியாத காரணங்கள் அதைச் செய்ய அனுமதிக்கவில்லை. அதையிட்டு இப்பொழுதும் நான் மனம் வருந்துவதுண்டு. அந்த பாவத்திற்கும் இது பரிகாரமாய் அமைந்துவிடுமல்லவா?
இவற்றிற்கெல்லாம் மேலாக, இது ஒரு நூல் விமர்சனம் என்று விளங்கிக்கொள்ளாதவாறு உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம் இது விமர்சனம் அல்ல. இது வெறும் வாசக அனுபவப் பகிர்வு. இரகசிய விசாரணையை கையில் எடுத்து, பிரித்து, ஒவ்வொரு பக்கங்களாக புரட்டியபோது என்னுடைய மனதில் என்ன தோன்றிற்று அல்லது என்னுடைய கவிதை பிரியன் என்கின்ற ஆன்மா என்ன பேசினான் என்பது தொடர்பான வெளிப்பாடுதான் இது. ஆக, இது, ‘இரகசிய விசாரணை’ மீதான அமல்ராஜ் எனப்படும் ஒரு தொடக்கநிலை வாசகனின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவம். அவ்வளவுதான்.
அருட்பணி.யேசுதாஸ் அவர்களின் முதல் கவிதைத்தொகுப்பு இது. தனது முதல் தொகுப்பின் சிருஷ்டிப்பு தொடர்பாக அவரிடமிருந்த அல்லது இருந்துகொண்டிருக்கும் மனக்கிளர்ச்சியை நான் நன்கு அறிவேன். இதே மாதிரியானதொரு மனக்கிளர்ச்சியில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி நானும் தவித்தபடியிருந்தது நன்றாகவே ஞாபகமிருக்கிறது. அது வார்த்தைகளால் நெருங்க முடியாத ஒரு உணர்வு. பத்துப்பிள்ளைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்து தன்னைச் சுற்றி கிடத்தியிருக்கும் ஒரு தாயின் திகைப்பு அது. பெருமகிழ்வின் கிளர்ச்சி.
கடந்த 21 ஆம் திகதி மன்னார் பேராலய மண்டபத்தில் இந்த தொகுப்பு வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே நாளில் ஜோர்தானிலிருக்கும் எனது கையிலும் இரகசிய விசாரணை கிடைக்கப்பெற்றது. முதலில் அதற்கு நன்றி பாதர். எடுத்து ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன். அந்த அனுபவங்களை ஒவ்வொரு கவிதையாக முன்னிறுத்தி நான் சொல்லப்போவதில்லை. அதை அருட்பணி தமிழ்நேசன் புத்தக மதிப்புரையில் அழகாகவே சொல்லியிருக்கிறார். ஆதலால் என்னைக் நெருங்கிப்பற்றிய விடயங்களை மட்டும் சொல்லியபடி என் வேலையைத் தொடரலாம் என்றிருக்கிறேன். இந்த இரகசிய விசாரணையில் மொத்தமாக 50 கவிதைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் புதுக்கவிதைகள், அதுவும் இலகுக்கவிதைகள். அவை அனைத்தினதும் பல்வகைமைத்துவம் அட்டகாசம். ஒவ்வொன்றும் வித்தியாசமான தளங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது. அதுவும் நம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்ற, அன்றாட வாழ்க்கையில் கடந்துவருகின்ற சமாச்சாரங்கள். இதுவே இந்நூலின் ‘வெயிட்!’.
ஒரு குருவானவர் கவிதை சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். தன்னிலை சாராத, அறிவுரைகள் நிறைந்த, இடத்துக்கிடம் ஒரு விவிலிய வார்த்தையை இலக்கங்களோடு முன்னிறுத்தி, காதல்-காமம் இவை இரண்டும் வலிந்து தவிர்க்கப்பட்டு… இப்படித்தானே!. ஆனால் இதே மனநிலையோடு உள்ளேசென்ற என்னை இந்த இரகசிய விசாரணை முகத்தில் அறைந்தது. இதுவே அருட்பணி.யேசுதாசிற்கு முதல் கைதட்டலைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். பல கவிதைகிளில் சாதாரண சமூக விலங்கு போன்று தன்னிலை சார்ந்து பேசுகிறார். சாகடிக்கும் அறிவுரைகள் இல்லை, அல்லது அந்த அறிவுரைகளை ‘நறுக்’ என்று நமக்குள் இறக்குகிறார். கிறீஸ்தவர் அல்லாத வாசகர்களுக்கு அலுப்படிக்காத கிறீஸ்தவ போதனை இதில் இருக்கிறது. இலகு தமிழ், இலகு நடை போன்றவற்றில் சமகால கடும்போக்குக் கவிதை நடைகளிலிருந்து விலகி எல்லா வாசகர்களுக்கும் புரியும்படி இருக்கிறது. இந்தக் கவிதைகள் தனது ‘target audience’ ஐ தடையின்றி போயடைகிறது. ஒரு கவிஞனின் கவிதைப் பொருள் தெரிவுகள் யார் அதன் வாசகர்கள் என்பதைப் பொறுத்ததுதான் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி இது தன்வேலையை சரியாகச் செய்திருக்கிறது. பாதரின் கவிதை கத்தோலிக்க போதனையாகத்தான் இருக்கும் என்கின்ற சமய மையவாத மனநிலை தவிர்த்து சகலரும் இதை வாசித்துப் புரியலாம். இது நடைமுறை வாழ்க்கை பற்றிய பொதுவான போதனைகள்!
பொதுவாக நான் ஒரு புத்தகத்தை கையில் தூக்கினால் அதை படித்து முடித்துவிட்டு கடைசியில்தான் அதன் முன்சேர்கைகளைப் படிப்பேன். அதாவது அந்த அணிந்துரை, ஆசியுரை, நயப்புரை போன்ற வஸ்துக்கள். காரணம் என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் வேறுயாருமே செல்வாக்குச் செலுத்தக்கூடாது என்று நினைப்பேன். அவரவர் கருத்துக்களை கேட்பதற்கு முன்னர் அந்த பிரதி தொடர்பான எனது சொந்த அபிப்பிராயமே முக்கியம் என்பதான தேடல் அது. ஆதலால் 29 பக்கங்கள் கொண்ட முன்சேர்க்கைகளை இறுதியில்தான் படித்தேன். முதலாவதாக ஒரு நூலிற்கு 8 உரைகள் தேவைதானா என்று யோசித்தேன். இது தொடர்பான விதிமுறைகள் ஏதும் இல்லையென்றாலும் இப்படியான நீண்ட உரைகள் புத்தகத்தின் கனதியை கூட்டும் என்கின்ற கற்பிதம் உண்மையானதல்ல. மாறாக வாசகர்களிடத்தில் அலுப்பையே சம்பாதிக்கும். ஒரு புத்தகத்தின் பிரதான பிரதியை வாசித்தலை விட அது சார்ந்த எந்த நயப்பும் விமர்சனமும் பெரியதேயல்ல. அதிலும் கருத்துரை (அருட்பணி தமிழ்நேசன்), அணிந்துரை (மேமன் கவி), நயப்புரை (ஹேமச்சந்திர பத்திரண) என்கின்ற மூன்றும் நிச்சயம் ‘too much!’ என்பேன். ஒரேயொரு ‘நச்’ நயப்போடு முடித்திருக்கலாம். நிறைந்திருக்கும்.
அடுத்தாக கவிதைகளின் தலைப்புக்களில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. கவிதையின் தலைப்புக்களிலும் கவிதை தொக்கி நிற்கும் என அப்துல் ரகுமான் சொல்லுவார். கவிதைத் தலைப்புக்கள் உணர்ச்சிசார் பொருளோடு (emotive meaning), குறிப்பால் உணர்த்துவதாகவும் (gesture indication) இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நான் சொன்ன இந்த ரகத்தில் ஒரு தலைப்பு இதில் இருக்கிறது. ‘அழுக்குப்படிந்த சவர்க்காரக்கட்டிகள்’. இந்த நூலில் எனக்குப் பிடித்த தலைப்பு இது. அந்த சவர்க்காரக்கட்டியிலிருக்கும் அழுக்குத்தான் அதன் அழகு.
கவிதையின் போக்கு, மொழியின் நடை, புதுக்கவிதையின் பெருள் வீச்சு, பொருள் அளிக்கை மற்றும் உருவகித்தல் நிலை என அனைத்தும் நூலாசிரியரிற்கு சரளமாக வருகிறது. இதற்கு நான் கீழே தந்திருக்கும் வரிகள் உதாரணமானவை. (வேறு வேறு கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு வரிகள் இவை.) இக்கவிதைத் தொகுப்பில் எனக்கு பிடித்தமான வரிகள் இவை என்றும் சொல்ல முடியும்.
சுவாசித்துப் பாருங்கள்
குடிக்கும் தேநீரிற்குள்
எம் வியர்வையும்
இரத்தமும் சேர்ந்து மணக்கும்.
..
விஞ்ஞானபாட ஆசிரியரே
நீர்தானே சொன்னீர்
‘உயிரற்றவை வளராது’.
வந்து பாரும்
வளர்ந்து கொண்டிருக்கம்
புத்தர் சிலைகள்.
..
ஒன்றை மட்டும்
நினைவிற்கொள்!
தேவைக்கு அதிகமாய்
தேடிப் பதுக்கி வைக்கும்
எப்பொருளும்
உனக்குரியதல்ல
..
எழுதும் மூலப்பிரதியை
எவர் வேண்டுமானாலும்
எடுத்துப் படிக்கட்டும்
எழுதுகோல் மாத்திரம்
உன்கையில் இருக்கட்டும்.
..
நான் அழுவது
யாருக்கும் தெரியக்கூடாது
என்பதற்காக
குளிக்கும்வரை
காத்திருக்கிறேன்.
..
அறிவுப்பசி கொண்டு
நூலகத்தை அலசி ஆராய்ந்து
கூடு கட்டிய ஆன்மாக்களுக்கு
அளித்த சிரைச்சேதம்.
..
இத்தோடு ‘இரகசிய விசாரணை’ என்கின்ற முழுக்கவிதையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கவிதையின் தொழில்னுட்ப அளிக்கை என்னை மிகவும் கவர்ந்தது.
எனக்குப் மிக மிகப் பிடித்த வரிகளை கோடிடு என்றால் மேலே சொன்ன இத்தனைக்கும் கோடு போடுவேன். அத்தோடு இப்பிரதி தொடர்பான அழகியல். இதைவிடவும் அழகான கவிதைகளை அருட்பணி.யேசுதாசினால் படைக்க முடியும் என்று நம்புகிறேன்.

கவிதைச்சூழலில் அம்மா, விலைமாது ஆகிய இரண்டு பேசுபொருள்கள் இல்லாத கவிதைத் தொகுப்புகளை காண்டெடுப்பது அரிது. ஏன், என்னுடைய தொகுப்பிலும் இவை இரண்டும் இருக்கிறது. இந்த தொகுப்பிலும் இருக்கிறது. இவை இரண்டும் கவிதையில் பொதுவான விடயப்பரப்புக்கள் என்றாலும் அதை கவிதையாக கையாழும் ஒவ்வொருத்தரின் பேச்சுப்பரப்பின் வீச்சும், பேசப்படும் விதமும் வித்தியாசப்படுகின்றன. இதில்தான் அவரவர் தனித்துவம் இருக்கிறது. அருட்பணி. யேசுதாசின் தனித்துவம் இரண்டையும் இரசித்து வாசிக்கும்போது புரிந்தது. சொல்லின் வகை புதிது. புழைய தலைப்பில் கவிதை புதிதாயிருக்கிறது.
நாவல் பற்றிய கவிதை. இது பதிய பேசுபொருள் என்று நினைக்கிறேன். நான் இதுவரை எந்தக் கவிதைத் தொகுப்பிலும் ‘நாவல்’ பற்றி கவிதை வாசித்ததில்லை. ஆச்சரியமாக இருந்தது. புதிய முயற்சிகள் இந் நூலில் பல இருக்கின்றன. அவற்றில் இது முக்கியமானதொன்று. அதேபோல ‘எதிர்ப்பால்’ என்கின்ற ஓரினச்சேர்க்கை பற்றிய கவிதை. இதுவும் ஒரு புதிய பேசுதளத்தை கவிதையில் கொண்டுவந்திருக்கிறது. நிச்சயமாக பேசப்படவேண்டிய விடயம்தான்.
ஓவ்வொரு கவிதையும், அதன் கவிதையின்பத்தைத்தாண்டி அது பேசவரும் கருத்தியல்கள் முக்கியமானவை. ஒவ்வொரு கவிதையும் நாம் எம்மொடு எடுத்துச்செல்லவேண்டிய ஏதோவொரு விடயத்தை இறுதியில் கையில் கொடுக்கிறது. அந்தவகையில் இந்தக் கவிதைகள் இறுதியில் சொல்லும் ‘target messages’ கள் முக்கியமானவை. உதாரணமாக இந்த விடயத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதையும் அது சொல்லும் டார்க்கட் மெசேச்சையும் இங்கு குறிப்பிட முடியும். ‘கையெழுத்து’ என்கின்ற கவிதையின் இறுதியில் ஆசிரியர் இப்படி முடிக்கிறார்.
‘வெளித் தோற்றத்தில்
மயங்கிய நான்
அவை வெளிப்படுத்தும்
கருத்துக்களைக் கவனிக்கவில்லை’.
புதுக்கவிதைகளில் இருக்கம் ஒரு அழகான வகை ‘கதை சொல்லிக் கவிதைகள்’. ஒரு குறுங்கதையை கவிதை மொழியில் சொல்வது. ஆரம்ப காலங்களில் வெண்பாக்களிலும் இதை முயற்சித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எனக்கு கவிதைகளில் மிகவும் பிடித்த ஒரு பாங்கு இது. கவிக்கோ, மேத்தா, காசி ஆனந்தன் போன்றோர் இதன் கடவுள்கள். இந்த கவிதைத்தொகுப்பிலும் இப்படியொரு வகை இருக்கிறது. அது ‘நவீன அறுவடை’ என்கின்ற ஒரு கவிதை. பாரம்பரிய விவசாயத்தை விழுங்கிவிட்டிருக்கின்ற தொழில்நுட்ப அவதாரங்களால் ஏற்படும் விளைவுகளை சுருக்கமாக ஒரு சாமான்ய உளவனின் கண்கள் கொண்டு பார்க்கப்படுகின்ற கவிதை. இந்த வகைக் கவிதைக்கான ஆரம்ப முயற்சியில் ஆசிரியர் அடித்தாடியிருக்கிறார் என்பது மகிழ்சியாயிருக்கிறது.
இதிலுள்ள இன்னுமொரு கவிதையை வாசித்துவிட்டு எடுத்த எடுப்பில் அடுத்த பக்கத்தை பிரட்ட முடியாமல் போனது. இதற்கு காரணம், அந்த முழுக் கவிதையுமல்ல; அந்தக் கவிதையின் கடைசி நான்கு வரிகள். அந்த நெருடல் கலைந்து போவதற்கு முன்னரே இதை எழுதிவிடுகிறேன். இதுதான் ‘வலியின் வடுக்கள்’ என்கின்ற கவிதையின் அந்த கடைசி வரிகள்.
நல்ல காலம்
எங்களது விளையாட்டைப்போலவே
விடுதலைப்போராட்டமும்
முடிந்துபோனது.
இது தொடர்பான எனது அல்லது ஒரு வாசகனின் புரிதல் எப்படி இருக்கவேண்டும்? அதில் எங்களுடைய எந்த விளையாட்டு விடுதலைப்போராட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது? எனக்கு இந்த வரிகளில் ஏதோ ஒட்டாமல் இருப்பது போலத்தோன்றியது. ஆனால் எதுவாக இருந்தாலும் எதையும் எப்படியும் விமர்சிக்க ஒரு எழுத்தாளனிற்கு உரிமை இருக்கிறது என்பதால் புரிதலின்றியே அடுத்த பக்கத்திற்கு கடந்துபோனேன். இவைதான் அந்த நெருடல்கள். இதற்குள் இருக்கும் அந்த நுண்ணிய அரசியலை எனக்கு அந்த வரிகள் சரியாகக்காட்டவில்லை என்பது எனது தவறாகக்கூட இருக்கலாம்.
இரகசிய விசாரணை, அருட்பணி.யேசுதாசின் சிறந்த முதல் முயற்சி. நிலைத்தல் என்கின்ற தளத்தில் கவிதை இலக்கிய வெளி அவ்வளவு இலகுவானதல்ல. எழுத்தின் தரம் எப்பொழுதும் ஆர்முடுகிக்கொண்டேயிருக்க வேண்டும். நான்காவது கவிதைத் தொகுதியை ஆசிரியர் போடும்போது இந்த முதல் தொகுதி ஒரு குப்பை என அவரிற்குத் தோன்ற வேண்டும். இதுதான் வளர்ச்சி. இந்த கவிதை இலக்கியப் பரப்பில் அருட்பணி. யேசுதாசினால் நிலைக்க முடியும் என்பதை அவரது கன்னி எழுத்துக்களே அடித்துச் சொல்லியிருக்கின்றன. தொடர்ந்தும் கவிதை என்கின்ற ஒரு மகா பிரளயத்தில் உளன்று, அதன் மத்திய இயக்கத்தில் தொடர்ச்சியாக சுழன்று, நிலைத்து, இன்னும் எழுத்துச் சாதனைகள் பல படைக்க இந்த ‘ஊர்க்காறனின்’ அன்பான வாழ்த்துக்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net