அமெரிக்காவில் 5 மாகாணங்களில் நடந்த உட்கட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், இரு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளின்டனுக்கு அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறு கிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாகாண வாரியாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார், பென்சில் வேனியா மற்றும் ரோட் தீவு ஆகிய 5 மாகாணங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 5 மாகாணத்திலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப். இதன்மூலம் இது வரை இவருக்கு ஆதரவளித்துள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு மொத்தம் 1,237 பிரதிநிதிகள் ஆதரவு தேவை. அதாவது இன்னும் சுமார் 300 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, “இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதன்மூலம் நான் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது” என்றார்.
ஆளும் ஜனநாயகக் கட்சியில் முன்னிலை வகித்து வரும் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் நடந்த 5 மாகாண தேர்தலில், மேரிலேண்ட், கனெக்டிகட், தெலவார் மற்றும் பென்சில்வேனியா ஆகிய 4-ல் வெற்றி பெற்றுள்ளார். ரோட் தீவில், இவரது சக போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார்.ஹிலாரி கிளின்டன் இதுவரை 2,141 பிரதிநிதிகளின் ஆதரவையும் இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சாண்டர்ஸ் 1,321 பேரின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இதனால் கிளின்டன் அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அனாஹீம் நகரில் உள்ள சிட்டி அரங்குக்கு வெளியே, டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டக் காரர்கள் மிளகாய் பொடி தூவியதில் 2 சிறுமிகள் உட்பட 5 பேர் பாதிக் கப்பட்டனர். எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.