அமெரிக்க ஜனாதிபதி நகைச்சுவைமிகுந்த தனது உரையை ஆற்றினார்.

06-obama212-300அமெரிக்க ஜனாதிபதிகள், ஆண்டுதோறும் உரையாற்றும் வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இறுதியாகக் கலந்துகொண்டார்.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்நிகழ்வில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், பிரபலங்களெனப் பலர் கலந்துகொண்டனர். வழக்கத்தைப் போலவே, அமெரிக்க ஜனாதிபதி, நகைச்சுவைமிகுந்த தனது உரையை ஆற்றினார்.

8ஆவது முறையாக உரையாற்றின ஜனாதிபதி ஒபாமா, கடந்த காலங்களில் தான் உரையாற்றின புகைப்படங்களைக் காண்பித்து, தனக்கு வயதாகிவிட்டது என்பதை வெளிப்படுத்தியதோடு, முன்னெரெப்போதுமில்லாததைப் போன்று, அவருக்கான ஆதரவு, அமெரிக்காவில் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களை விட, இப்போது மாறுதலாக எவற்றையும் செய்யவில்லை எனக்குறிப்பிட்ட அவர், அவற்றுக்கு மத்தியிலும் ஆதரவு உயர்வடைகின்றது எனத் தெரிவித்ததோடு, ‘இவ்வளவுக்கு உயர்வாக நான் இறுதியாக இருந்தபோது, முதுகலைமாணிப் பட்டத்தை முடிவுசெய்வதற்கு நான் முயன்றுகொண்டிருந்தேன்” என, கல்லூரி நாட்களில் போதைப்பொருள் (மரிஉவானா) பயன்படுத்துவதை ஞாபகமூட்டினார்.

8ஆவது ஆண்டாக உரையாற்றுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ஒபாமா, அடுத்த ஆண்டு இதேநேரத்தில், இன்னொருவர் உரையாற்றிக் கொண்டிருப்பார் எனத் தெரிவித்ததோடு, ‘அவள் யாராகவும் இருக்கலாம்” என, அடுத்த ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனே தெரிவாகுவார் என மறைமுகமாகத் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பேர்ணி சான்டர்ஸ், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நிலையில், அவரையும் அவர் நகைச்சுவைக்கு உட்படுத்தினார். ‘ஜனநாயகக் கட்சியின் புத்திசாலியான, புதிய முகம் இங்கேயுள்ளார். திரு. பேர்ணி சான்டர்ஸ். பேர்ணி, நீங்கள் மில்லியன் பணம் போலவுள்ளீர்கள். இல்லாவிடில், உங்களுக்குப் புரியும் வார்த்தைகளில் சொல்வதானால், 27 டொலர் பெறுமதியிலான 37,000 நன்கொடைகள்” என, சிறியளவு நன்கொடைகளை அதிகமாகப் பெற்று, அவற்றைக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டுவரும் பேர்ணி சான்டர்ஸை அவர் வரவேற்றார்.

தொடர்ந்த ஜனாதிபதி ஒபாமா, ‘என்னிடமிருந்து உங்களை நீங்கள் விலத்துவது குறித்து நான் வருத்தடைகிறேன், பேர்ணி. சக தோழர் (கொம்றேட்) ஒருவருக்குச் செய்யும் விடயமல்ல இது” என, கம்யூனிசத்தைப் பின்பற்றுவோர் போன்று அவர் தெரிவித்தார். ஒபாமா ஒரு சமூகவுடைமைவாதி என அவரது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டும் நிலையில், தன்னைச் சமூகவுடைமைவாதி என வெளிப்படையாகவே வெளிப்படுத்திவரும் பேர்ணி சான்டர்ஸிடமே அவர் இவ்வாறு நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், 2011ஆம் ஆண்டின் வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் விருந்தில் கலந்துகொண்டு, அதில் ஜனாதிபதி ஒபாமாவின் நகைச்சுவைக்கு உள்ளாகியிருந்த நிலையில், இம்முறை அவர் கலந்துகொண்டிருக்கவில்லை.

அவரைக் குறிப்பிட்டுப் பேசிய ஒபாமா, ‘அவர் இங்கு இல்லையென்பது எனக்கு வருத்தம் தருகிறது. இறுதியாக, நாம் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியாகக் களித்தோம்” எனத் தெரிவித்த ஜனாதிபதி ஒபாமா, ‘அது வியப்புத் தருகிறது. அறை நிறைந்த செய்தியாளர்கள், பிரபலங்கள், கமெராக்கள் ஆகியன இருக்கையில், அவர் இல்லையெனச் சொல்கிறார்” என, பிரபலத்தன்மையை நாடும் ட்ரம்ப்பைக் கேலிசெய்தார்.

அவ்வப்போது காத்திரமான விடயங்களையும் பகிர்ந்த ஜனாதிபதி ஒபாமாவின் 32 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த உரையின் இறுதியில், ‘சொல்வதற்கு என்னிடம் இன்னும் இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒபாமா வெளியே” எனத் தெரிவித்து, ஒலிவாங்கியைக் கீழே வீழ்த்தி, விடைபெற்றார் ஜனாதிபதி ஒபாமா.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net