மெஸ்ஸியை கவர்ந்த ஆப்கன் சிறுவனின் குடும்பம் பாகிஸ்தானில் தஞ்சம்.

messi-_jpg_2838390_2838412f
சிறுவன் முர்டஸா அகமதி | படம்: ராய்ட்டர்ஸ்
தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக மெஸ்ஸியை கவர்ந்த ஆப்கன் சிறுவன் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.

இது குறித்து ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு சிறுவனின் தந்தை தொலைபேசியில் பேசியபோது, “இணையதளங்களில் முர்டஸா அகமதி பிரபலமானதால் அவர் கடத்தப்படக் கூடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. எங்களுக்கு தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் வந்தது.

இதனால், பாதுகாப்பு கருதி ஆப்கனில் இருந்து வெளியேறி பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தஞ்சமடைந்துள்ளோம். எங்கள் வாழ்க்கை துயரமானதாக மாறிவிட்டது” என்றார்.

ஆப்கானிஸ்தானின் காபூல் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் முர்டஸா அகமதி. கால்பந்தில் ஆர்வம் கொண்ட முர்டஸா, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்ஸியை போன்ற ஒரு பிளாஸ்டிக் பையில் மெஸ்ஸி 10 என எழுதப்பட்ட ஜெர்ஸி அணிந்து கால்பந்து விளையாடுவது போன்ற படங்கள் முகநூலில் வெளியானது.

இதையடுத்து இந்த படமும் அதுதொடர்பான செய்திகளும் இணைத்தளங்களில் ‘வைரல்’ ஆனது. அவற்றைப் பார்த்த கால்பந்து வீரர் மெஸ்ஸி முர்டஸா அகமதிக்கு தனது கையெழுத்திட்ட சட்டைகளையும், கால்பந்தையும் அனுப்பி வைத்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net