மாணவி வித்தியா D.N.A. அறிக்கை தாமதமாக காரணம் பணம் செலுத்தாமையே.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை தாமதமாக காரணம் பணம் செலுத்தப்படாமையே என ஜின்டேக் நிறுவனம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

vithiyaa
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 11ம் மற்றும் 12ம் சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது கடந்த 20ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , மரபணு பரிசோதனை அறிக்கை தாமதமாவதற்கான காரணத்தை ஜின்டேக் நிறுவனத்தின் பொறுப்புக் கூறும் அதிகாரி மன்றில் முன்னிலையாகி தெரியப்படுத்த வேண்டும் என நீதவான் அழைப்பாணை விடுத்து இருந்தார்.

அதற்கு குறித்த நிறுவனத்தின் அதிகாரி மன்றில் ஆஜாராகாமல் தாமதத்திற்கு ஆன காரணத்தை குற்றத்தடுப்பு புலனாய்வு துறை அதிகாரி ஊடாக அறிக்கை மூலம் மன்றில் சமர்ப்பித்தனர்.

அதில் மரபணு பரிசோதனைக்கான செலவுக்கு உரிய பணத்தினை கொடுப்பதில் ஏற்பட்ட தாமதமே அறிக்கை சமர்ப்பிக்க தாமதமானது என குறிப்பிடப்பட்டு இருந்தது. அத்துடன் அடுத்த தவணையில் அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து சந்தேக நபர்களிடம் நீங்கள் சட்டத்தரணி ஒருவரையும் உங்கள் சார்பாக ஆஜராக கோரவில்லையா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர்கள் இந்த வழக்கில் ஆஜராக சட்டத்தரணிகள் முன்வருகின்றார்கள் இல்லை என நீதவானிடம் கூறினார்கள்.

அதனை செவிமடுத்த நீதவான் , மன்றில் இருந்த சட்டத்தரணிகள் இடம் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் சட்டத்தரணிகள் ஆஜராக தேவை தானே எனவே இது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு கோரினார்.

அத்துடன் சந்தேக நபர்களிடம் நீதிமன்றில் ஏதேனும் கோரிக்கை முன் வைக்க வேண்டும் எனில் சட்டத்தரணி ஊடாக முன்வைக்க வேண்டும்.என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் இரு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

அதேவேளை கடந்த தவணையில் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பத்து சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் யாழ்ப்பாண பொலிசாரிடம் பொதுமக்களால் கையளிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு இட்டு இருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது அந்த அறிக்கை தொடர்பில் மன்றில் பிரஸ்தாபிக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net