பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியானார் ‘கிழக்கின் ட்ரம்ப்’

article_1462887757-LEADeasduratbeகிழக்கின் ட்ரம்ப் (Trump of the East) என விமர்சகர்களால் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அதிகமான வாக்குகளைப் பெற்றதையடுத்தே, இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார்.

அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியாக 4 ஆண்டுகள் பதவி வகித்த ஒருவர், அப்பதவிக்கு மீளப் போட்டியிட முடியாது என்பததால், தற்போதைய ஜனாதிபதியான பெனிக்னோ அக்கினோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட 71 வயதான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, ஒரு சட்டத்தரணியென்பதோடு, 1,449,296 பேரைக் கொண்ட டாவோ நகரத்தில் 7 தடவைகள் மேயராகவும் பதவி வகித்தவராவார்.

இந்நிலையிலேயே, தேர்தல் முடிவுகளின்படி, 38 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற டிட்டேர்ட்டே, வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் மார் றொக்ஸஸ் 23 சதவீத வாக்குகளையும் கிறேஸ் போ 21 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

பிலிப்பைன்ஸின் தேர்தல் விதிகளின்படி, தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றாலே, ஜனாதிபதியாக வரமுடியுமென்பதால், புதிய ஜனாதிபதியாக, எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியன்று, டிட்டேர்ட்டோ பதவியேற்கவுள்ளார். எனினும், உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்னும் ஒரு வாரத்துக்கு வெளிவராது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிரசாரத்தை முன்னெடுத்திருந்த டிட்டேர்ட்டோ, வன்முறையான கருத்துகளையும் பெண்களுக்கும் சமபாலுறவாளர்களுக்குமெதிரான கருத்துகளையும் வெளிப்படுத்தியிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸை, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதன் மூலம், உலகளாவிய கவனத்தை ஈர்த்த அவர், மேயராகப் பதவி வகித்த 22 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், சட்டத்துக்குப் புறம்பான கொலைகளை மேற்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த அவர், அவ்வாறான சம்பவங்களில் தான் ஈடுபட்டதையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

அத்தோடு, தேர்தல் பிரசாரமொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த அவர், தான் மேயராக இருந்த நகரத்தில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகராக இருந்த பெண்ணொருவர், கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது, நகரத்தின் மேயர் என்ற அடிப்படையில், வன்புணர்வில் தனக்கு முதலாவது இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்தமை, அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.

இவற்றுக்கு மத்தியிலும், அவருக்கான ஆதரவு தொடர்ந்தும் நீடித்திருந்த நிலையிலேயே, தற்போது இத்தேர்தலில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும்போதே கருத்துத் தெரிவித்த அவர், மக்களின் ஆணையை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

Copyright © 2657 Mukadu · All rights reserved · designed by Speed IT net