முள்ளிவாய்க்கால் மண்ணே உனக்கு வீரவணக்கம்…வேலன்

1936109_1099223673472352_584004700553803060_n
முள்ளிவாய்க்கால் நினைவுகள் 2009 ம் ஆண்டு மனித ஓலங்கள் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அன்றையக் காலத்தில் தொலைக்காட்சிகள், இணையதளங்கள்,பேட்டிகள்,கட்டுரைகள் என பின்தொடர்ந்து வாசித்த அன்றைய காலங்களை மனிதநேயம் கொண்ட மனிதர் யாராலும் எளிதில் மறக்க முடியாது என்பது யதார்த்தமே. இழவு விழுந்து கொண்டிருந்த நிகழ்வை உணராத மனிதர்கள் அன்றைய காலத்தில் இருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் பகுதியெங்கும் கொத்துக் கொத்தாக மனிதர்கள் இறந்து கொண்டிருந்த காலம். சட்டரீதியான அரசு என்ற மகுடத்தை அணிந்த பெருந்தேசிய வெறியைக் கொண்ட அரசு, அலகு உரிமைக்காக போராடும் இன்னொரு பிரிவினர் மீது தொடுத்த யுத்தமாகும். போராடும் மனிதர்கள் எப்பவும் சட்டத்திற்கு முரணாவர்கள் எனவும் ஆனால் சட்டரீதியான அரசு சுதந்திரத்திற்கான யுத்தம், சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் சர்வதேசத்தின் உதவியுடன் முள்ளிவாய்க்காலில் அப்பாவிமக்களை குழந்தைகள், இளையோர் முதியோர் என வேறுபாடின்றி படுகொலைகளைபுரிந்து கொண்றொழித்தது. 149000 மக்கள், ஆயிரக்கணக்கான போராளிகள் காணால் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு மக்கள் கூட்டத்தின் மீது நடைபெற்ற இனவழிப்புப் போரை இனவழிப்பு என்று பிரகடனப்படுத்த வேண்டாம் என்று வெவ்வேறு வடிவங்களில் கருத்துருவாக்கப்படுகின்றது.

தமிழ் தேசத்தின் இறைமைக்காய் நடைபெற்ற போராட்டத்தினை ஒவ்வொருவரும் தமது சிந்தனையின் படி வெவ்வேறு வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டது. உலகின் ஆட்சியாளர்கள், உள்ளூர் ஆட்சியாளர்கள், இடதுசந்தர்ப்பவாதிகள், புலியெதிர்ப்பாளர்கள், தலித்தியவாதிகள் எல்லோரும் பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகள் வெற்றி கொள்ளப்பட்டதாய் குதூகலித்திருந்தார்கள். அன்று மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக்கொண்டிருந்த போது மௌனிகளாக இருந்த இவர்கள் இன்று ஜனநாயகத்தையும் அன்பையும் மக்களுக்குப் போதிக்கும் புத்தக பகவான்களாக தங்களை காட்சிப்படுத்தி பாவனை செய்கிறார்கள். இந்த பிணந்தின்னிக் கழுகுகள் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது ஜனநாயகத்தையும், நியாயத்தைத்தையும் சித்தாத்தங்களிலும் புத்தக வரிகளிலும், தேடிக் கொண்டிருந்தார்கள் இந்த புனித ஜனநாயகவாதிகள். இவர்கள் எல்லோருக்கும் பிரச்சனையாக இருந்தது விடுதலைப்புலிகளும் அதன் தலைவரும்தான். அவர்களை அழித்தாகிவிட்டது, இப்போது தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை உயர்ந்த ஜனநாயக வடிவத்தை கொண்டதாக முன்வைக்க வேண்டிய நிலையில் அதை மறுத்துக் கொண்டு ஜனநாயகத்தையும் நியாயத்தைத்தையும் புத்தக வரிகளில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். தேசத்தின் உரிமைக்காக போராடியவர்களை சர்வதேச உதவியுடன் கொண்றொழித்து தமிழ் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில் வடமாகாணமுதலமைச்சர் – பிரபாகன் மீண்டும் தோன்றுவார் என்ற அவரது கூற்றை அரச ஒத்தோடிகளும், ஒடுக்கும் அரச இயந்திரமும் தமக்கு இசைவாக கருத்தூருவாகம் செய்கின்றது.

ஆம் லங்கா என்ற ஒடுக்கும் தேசமும் அதன் அதிகார வர்க்கமும் தொடர்ந்து தமிழ் தேசத்தினை அடக்க முற்படும் போது புரட்சியாளர்களும், தேசத்திற்கான போராட்டமும் தவிர்க்க முடியாத நிகழ்வாக உருவாகவே செய்யும். ஆனால் முதலாளித்துவ- தேசிய ஜனநாயகக் கட்டத்தைப் பற்றிய புரிதல் அற்ற கருத்துருவாக்கிகள் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான நீதி கேட்டு எழும் குரல்களை இனவாதமாகவும், குழப்பங்களை உண்டுபண்ணும் கருத்தாகவும் சித்திரிக்கின்றார்கள். தமிழ் தேசத்தின் உரிமை என்பது இனவாதமாக சிந்தரித்துக் கொண்டு பெருந்தேசியத்திற்கு துணையாக நிற்கின்றனர்.

புலிகள் அழிக்கப்பட்டார்கள் அவர்கள் மீளவும் வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றார்கள். இவ்வாறு பேசினால் வடக்கில் கைதுகள் அடிக்கடி இடம்பெறும், சிலர் காணாமல் போவார்கள் இராணுவ சோதனைகள் நடாத்தப்படும் ஒட்டுமொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், சர்வதேசம் மௌனம் காக்கும், இறுதியில் மக்கள்தான் அவதிப்படப் போகின்றார்கள் என்று பயத்தை ஊட்டும் செயற்பாட்டை மேற்கொள்கின்றார்கள். ஆயுதத்தால் அடக்குவது எவ்வாறு சாத்தியமோ அவ்வாறே கருத்துருவாக்கத்தின் ஊடாகவும் மக்களை பயமுறுத்தி வைக்க முடியும். இதுவும் ஒரு உளவியல் யுத்தமேயாகும். தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை உபதேசிப்பவர்கள் மாறாக ஜனநாயகத்தை மதிக்காத இலங்கை பேரினவாத அரசை அல்லவா எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். அதன்மீது அல்லவா விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

இங்கு மாறாக இந்த அரச ஒத்தொடிகள் என்ன செய்கிறார்கள் என்றால்… ஆண்டைகளுக்கு (ஆளும் சிங்கள பேரினவாத அரசிற்கு) அடிமையாக இரு என்று போதிப்பது,
இழப்புக்களுக்காக நீ வருந்தாதே
இழப்புக்களுக்காக நீ நினைவு கூறாதே,
இழப்புக்களை கடந்தகாலமாக விட்டுவிடு
இழப்புக்களை இட்டு சோக கீதம் பாடிக் கொண்டிருக்காதே என்ற வகையில் அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் மனங்களை ஒன்று சேரவிடாமல் அதாவது அதை அமைப்பு வடிவம் பெறவிடாமல் கருவிலேயே சிதைப்பதுவே இவர்களது மறைமுக பணியாகும். எனவே தமிழ் தேச மக்களாகிய நாங்கள் இதற்க்கு எதிராக முன்பைவிட உரக்க குரல் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். எனவே தமிழர் தேசமாகவும் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியை இறுதியாகக் கொள்ளாது முன்னெழ வேண்டும்.

balachandran_a
மாண்ட வீரமறவர்களே உங்கள் மரணம் முடிவல்ல தமிழ் தேசத்தின் உரிமைக்காக போராடிய உங்களை உலகவல்லரசுகள் சேர்ந்து முறியடித்தார்கள். தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தை நீங்கள் முள்ளிவாய்க்காலில் முடித்துக் கொண்டீர்கள். ஆனால் அதுவே முடிவல்ல. நீங்கள் விட்ட போராட்டத்தை தொடர வேண்டிய காலக்கட்டாயமாகும். இன்று சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தினை மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. ஊடகவியாபாரம், களிப்பாட்டங்கள் என்ற வியாபார முனைப்பாளர்கள் தமக்கு செல்லத்தைக் கொடுக்கும் அடிமைகளாக மக்களை மடைமாற்றுகின்றார்கள்.
நாங்கள் போராடுகின்றோம் நீங்கள் பார்வையாளர்களாகவும், நிதியையும் தந்தால் போதும் என்று பார்வையாளர்களாக வைக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்ட வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசத்தின் போராட்டம் எவ்வாறு வீழ்த்தப்பட்டது, அதேபோல நிலவியவுகின்ற அரை நிலமானிய (பிராமணிய, யாழ்சைவ வேளாள) சமூகச் சிந்தனையை உடைத்துக் கொண்டு முன்னேற வேண்டுமானால் எவ்வித விட்டுக் கொடுப்பும் இன்றி சமூக விஞ்ஞானப் பார்வையூடாக அறிவைப் பெறுவதன் ஊடாகவே முன்னோக்கிச் செல்லமுடியும்.

முள்ளிவாய்க்காலின் பின்னரான காலம்
தமிழர்களின் தேசக் கட்டுமானத்தினை மறுதலித்த வகையில் முன்னொடுக்கும்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. முன்னர் மகிந்த சிந்தனைக்கு வடிவமைத்துக் கொடுத்து தேசத்தின் அழிவில் இருந்து இன்று (1980களில் தமிழகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலையை) புலிகளின் பின்னான காலங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. இது இலங்கைக்கு புதிதாக இருக்கின்றது ஆனால் தன்னார்வ அரசியல் என்பது ஒன்றும் புதிதல்ல. தன்னார்வதொண்டு நிறுவனங்களும், சர்வதேச உளவு நிறுவனங்களும் அவர்களின் கருத்துக்களும் எமது சமூகத்தில் பல்வேறு தளங்களில் நுழைந்து கருத்துருவாக்கத்தினை மேற்கொள்கின்றது. இவைகள் அடையாள அரசியல், கனவான் அரசியல், அரசியல் நீக்கம், பயன்பாட்டுவாதம், கட்டமைப்பில் சீர்திருத்தவாதம், தீவிர தேசியவாதம், தமிழ் தேசிய இலக்கியவாதிகள், தமிழ் தேசிய எழுத்தாளர்கள் என்று பலவர்ண அரசியல் முலாம் பூசி மக்கள் முன் நிறுத்தப்படுகின்றது.

புலியாதரவு அமைப்புகள் பல்வேறு பிரிவுகளாக இருக்கின்றனர். இவர்கள் இன்றையப் பொழுதில் பெரும்பான்மை புலியாதவர்களார்கள் இணக்க, கனவான் அரசியலை சிரமேற் கொண்டு செயற்பட்டு யார் எம்மை அழித்தார்களோ அவர்களின் தயவையும், அவர்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக நடந்து கொள்வதில் போட்டி போட்டுச் செயற்படுகின்றார்கள். வருடாவரும் மாவீரர் தினம், விளையாட்டு என்று நிகழ்வுகளை நிகழ்த்தி உணர்ச்சியைப் பெருக்குவதும், புலிகளின் சின்னங்களை உள்ளடங்கிய நாட்காட்டி மற்றும் பொருட்களை விற்பனை செய்து பொருளீட்டும் முயற்சியில் தம்மை சுருக்கிக் கொள்கின்றனர். ஆடம்பரமான கூட்டங்கள், விழாக்களை நடத்துவதும், சிறார்களின் தமிழ் பள்ளிக்கூடங்களை வைத்தே சமூகத்தை தொடர்ந்தும் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்களாகும். இவர்களின் இன்னொரு பகுதியினர் முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுத்தவர்களுக்கு தகவல் வழங்கி காட்டிக் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் ஒரு பகுதியினர் ஆளும் வர்க்கத்துடனும் தூதரகங்களுடனான தொடர்புகள் ஒன்றும் பரமரகரியம் இல்லை. ஆனாலும் இவ்வாறான சக்திகளே புலம்பெயர்ந்த நாடுகளில் ஆழுமையைக் கொண்டுள்ளார்கள். இவை இரண்டு போக்குக்களும் பெரும் சமூக அவலமாகும். இந்த அவலத்தினைப் போக்கிக் கொள்ள மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்பு அடைவது அத்தியாவசியமான உடனடித் தேவையாகும்.

தமிழ் மக்களின் உரிமை என்ன என்பது பற்றிய போதிய புரிதல் இல்லை என்பதை தமிழ் அரசியல்வாதிகளின் உரையாடலை அவதானிக்கும் போது முடிவிற்கு வரமுடிகின்றது. தமிழ் தேசம் என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டுபிடித்தது போல பிரச்சாரப்படுத்தி முடிந்திருந்தார்கள். இந்தியா சென்ற சென்ற சம்பந்தர் தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து தாம் நகர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை இந்தியாவில் வைத்து தெரிவிக்க யார் இவருக்கு உரிமை கொடுத்தது? இவ்வாறான தன்னிச்சையான முடிவெடுக்க சம்பந்தருக்கு உரிமை இல்லை. இதனை பொதுவாக்கெடுப்பு நடத்தியே தீர்மானிக்கப்பட வேண்டும்.
அவர்களின் அரசியல் பாதையில் இருந்துதான் முடிவிற்கு வரமுடியும். கூட்டணியின் மிதவாதம் என்பது அடிப்படையில் மக்கள் நலன் கொண்டதல்ல. அது அன்னிய சக்திகளின் நலனுக்காக செயற்படுவதேயாகும். இவர்களின் திட்டமிட்ட அரசியல் செயற்பாடுகள் என்பது முள்ளிவாய்க்காலில் மாண்ட மனித உயிர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த யுத்தம் என்பது ஒரு தேச (nation) த்தினை வெற்றி கொண்டுதான் முடிவிற்கு வந்துள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வினை வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான குறைந்தபட்சத்தீர்வானது சுயநிர்ணயத்தின் அடிப்படையில் அமைந்தாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் படியாக தமிழ் அமைப்புக்களுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு ஏதும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். இவர்கள் புறவுலகத்திற்கு ஒன்றும் தமிழ் மக்களுக்கு ஒன்று என்றும் மக்களின் உரிமையை விலைபேசுகின்றார்கள். மக்களின் உரிமையை விலைபேசும் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி ஒதுக்குவதன் ஊடாகவே தமிழ் மக்களின் உரிமையை தோல்விக்குள்ளாகாது வெற்றி கொள்ள முடியும்.

தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டம் என்பது தனியே எல்லையை நிர்ணயிப்பதாக இல்லாது சமூக மாற்றத்தினை மாற்றும் வகையில் முன்னோக்கிச் செல்லப்பட வேண்டும். போராட்டம் என்றால் தனியே ஆயுதப் போராட்டம் தான் என்ற ஒற்றப் பார்வை மாற்றப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை போராட்டத்தின் ஊடாக வெற்றி கொள்ள முடியும்.

முள்ளிவாய்க்காலுக்கு வழிகாட்டியாக இருந்த பிற்போக்கு அரசியலை துடைத்தெறிந்து முன்னேறுவதன் ஊடாகவே வெற்றியை தமதாக்க முடியும். தமிழ் மக்களை தமிழ் தரப்பே ஏமாற்றுவது போல ஆளும் சிங்கள அதிகார வர்க்கமும் மூர்க்கத்துடன் தான் செயற்படுகின்றது. தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்க பல்வேறு நிலைகளில் செயற்படுகின்றார்கள். மொழி, காணி, அபிவிருத்தி என்றும் முள்ளிவாய்க்கால் நினைவை தமிழ் தேசத்தின் அழிவாக மக்கள் நினைவுகூர்வதை அனுமதிக்க தயாராக இல்லாது உள்ளது.

இது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலின் அழிவின் ஊடாக பொது அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும், நிலைப்படுத்தவும் எப்பவும் அதிகார வர்க்கம் எதிராகவே இருக்கும். இங்கு சின்னத்தை (குறிப்பான்- symbol) உருவாக்கிக் கொள்வதற்கும், சமூகத்தின் அடுத்த கட்டத்திற்கு கடத்துவதன் ஊடாக எதிர்மறை நிகழ்வைக் கொடுக்கும் என்பது ஒடுக்குமுறையாளர்களுக்கு தெரியும்.

இந்த நிலையில் தேசத்தின் அடையாளத்தின் அழிப்பிற்கு அவசியமாகின்றது. இதன் அடிப்படையில் இருந்து முள்ளிவாய்க்காலின் நினைவை திட்டமிட்டு சிதைக்கின்றது. தமிழ் தரகு அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அடையாளத்தை மறுக்கின்றது. சிங்கள ஆளும் வர்க்கம் உரிமையை தாம்பாளத்தில் வைத்து தரப் போவதில்லை. முள்ளிவாய்காலில் தான் இறந்த மக்களின் போராளிகளின் நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த நாட்டில் அல்ல.

முள்ளிவாய்க்கால் தியாகிகளின் மக்களின் உதிரத்தால் உறைந்த நாட்களை சம்பிரதாய ரீதியாக நினைவு கூர்வதல்ல. மக்களின் தியாகங்கத்தினை மதிப்பதாக இருந்தால் பிற்போக்கு அரசியலில் இருந்தும், பிற்போக்குச் சமூக அமைப்பை மாற்றுவதற்கான செயலில் இறங்குவதன் ஊடாகவே உண்மையான அஞ்சலியைச் செலுத்த முடியும்.
இழப்புக்கள் ஒன்றும் மறுப்பதற்கோ – மறப்பதற்கோ அல்ல!

Copyright © 4547 Mukadu · All rights reserved · designed by Speed IT net