எகிப்துஎயார் எம்.எஸ்.804 விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்த இடத்திலிருந்து பெறப்பட்ட மனித எச்சங்கள் அந்த விமானத்தில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளமையை எடுத்துக்காட்டுவதாகவுள்ளதாக எகிப்திய தடயவியல் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி ஏ.பி. ஊடகம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த விமானம் கடந்த 19 ஆம் திகதி 66 பேருடன் மத்தியதரைக் கடலில் விழுந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இதுவரை ஒரு கரம் அல்லது ஒரு கால் என்ற ரீதியில் சுமார் 80 உடல் பாகங்கள் துண்டு துண்டுகளாக சிதறிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது முழுமையாக எந்த உடலும் மீட்கப்படாத நிலையில் அவ்வாறு உடல்கள் சிதறியமைக்கு விமானத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும் மேற்படி தகவலுக்கு அந்நாட்டு நீதி அமைச்சின் தடயவியல் திணைக்களத் தலைவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேற்படி தகவல் வெளியாவதற்கு முதல் நாள் எகிப்திய அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் வானில் பறக்கும் விமானங்களின் இடத்தைக் கண்டறியும் வேவையை வழங்கும் ஸ்தாபனத்தின் தலைவர், அந்த விமானம் ஏற்கனவே கிரேக்க பாதுகாப்பு அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது போன்று திரும்பலடையவோ அல்லது சடுதியாக செங்குத்தாக விழவோ இல்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உடல் பாகங்களை அடையாளம் காண மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக க கூறப்படுகிறது