‘இனி மக்கள் நலக் கூட்டணி வேண்டாம்!’ -கேப்டனை மடைமாற்றும் தொண்டர்கள்

vijayakanthlong1aa
சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. ‘உள்ளாட்சித் தேர்தலில் கௌரவ வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்’ எனக் கட்சிக் கூட்டத்தில் வேதனைப்பட்டிருக்கிறார் அவர்.

தே.மு.தி.க.வைத் தொடங்கிய நாள்முதலாக சந்தித்து வரும் தேர்தல்களிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது இந்த சட்டமன்றத் தேர்தலில்தான். அதிலும், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வாங்கிய வாக்குகளும், கிடைத்த மூன்றாவது இடமும் தே.மு.தி.க தலைமையை அதிர வைத்தன. தேர்தல் முடிவில் அதிலும், கட்சியின் வாக்கு சதவீதம் இரண்டரை சதவீதம் அளவுக்குக் குறைந்துபோகும் எனவும் அவர் நினைத்துப் பார்க்கவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ‘நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். வரும்காலங்களில் எங்கள் கூட்டணி தொடரும்’ எனவும் பேட்டியளித்தனர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள்.

ஆனாலும், ‘ விஜயகாந்த் என்ன மனநிலையில் இருக்கிறார்?’ என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. “கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பார்த்தால், உள்ளாட்சித் தேர்தல் வரையில் மக்கள் நலக் கூட்டணி தொடர்வது சந்தேகம்தான்” என நம்மிடம் விவரித்த தே.மு.தி.க மாநில நிர்வாகி ஒருவர், தொடர்ந்து, ” ஐந்து ஆண்டுகளில் கட்சியின் தொண்டர் பலத்தை அதிகரித்தோம். கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் 54 லட்சத்திற்கும் மேல் இருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் பத்து லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது. இதைப் பற்றித்தான் கேப்டன் கவலைப்பட்டார். ‘தி.மு.க, அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் ஓட்டுக்களை அப்படியே வாங்குகிறார்கள். நம்மால் ஏன் முடியவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார்.

‘2006, 2011 தேர்தல்களில் நல்ல வாக்கு சதவீதத்தை எடுத்திருந்தோம். இந்தமுறை கௌரவமான வாக்குகள்கூட கிடைக்கவில்லை’ என வேதனைப்பட்டார் கேப்டன். ‘நாம் செய்த தவறு என்ன? மக்கள் மத்தியில் ஏன் எடுபடவில்லை? என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது’ என்றும் கேட்டார். எங்களில் பலரும், ‘மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணத்தை வாரியிறைத்தார்கள். நாம் எந்த இடத்திலும் பணத்தைச் செலவிடவில்லை. அதுதான் தோல்விக்குக் காரணம்.

2006 தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 400 கவுன்சிலர்களைப் பெற்றோம். தனித்துப் போட்டியிட்டே அவ்வளவு இடங்களை நம்மால் வாங்க முடிந்தது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே நம்மால் அரசியல் செய்ய முடியும். அதையடுத்து, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே அணியோடு நாம் இருந்தால், ஒரு எம்.பி சீட்கூட கிடைக்காது. கட்சி இன்னமும் மோசமான நிலைமைக்குப் போய்விடும். இப்போதே கட்சியின் தேர்தல் அங்கீகாரம் பறிபோய்விட்டது. தேர்தலில் வட்டிக்குப் பணம் வாங்கித்தான் செலவு செய்தோம். பலர் மீள முடியாத கடனாளியாகிவிட்டார்கள்’ என நேரடியாகவே சொன்னோம். நாங்கள் சொன்ன கருத்துக்களை அமைதியாக கேட்டுக் கொண்டார்.

ஒரு சிலர், ‘தி.மு.க.வோடுதான் நாம் கூட்டணி சேருவோம் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அதற்குத் தகுந்தவாறு தி.மு.க தலைவர்களும் பேசி வந்தனர். இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்போம். அவர்களோடு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என மீடியாக்களில் செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. அதற்கு மாறாக, நாம் மக்கள் நலக் கூட்டணியை ஏற்றுக் கொண்டதை மக்கள் விரும்பவில்லை’ என்றார்கள். மேலும், பல தொகுதிகளில் மாவட்ட செயலாளர்களின் பேச்சை மதிக்காமல், தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு வேலை பார்த்த கட்சி நிர்வாகிகள் பற்றியும் எடுத்துச் சொன்னோம். விரைவில் நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை செய்ய இருப்பதாகச் சொன்னார் கேப்டன். நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்” என்றார் நிதானமாக.

இதுவரையில், தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி வைத்த விஜயகாந்த், வரும் காலங்களில் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்தே தே.மு.தி.க.வின் எதிர்காலம் அமையப் போகிறது.
விகடன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net