ஜப்பானில் ஹிரோஷிமா நகரில், கடந்த 1945 ல் நடந்த அணு ஆயுத தாக்குதல் நடந்த நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.
சம்பவம் நடந்து 71 ஆண்டுகளில் முதன்முறையாக சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். ஜப்பானில் அணு ஆயுத தாக்குதல் நடந்த ஹிரோஷிமா நகரத்திற்கு ஒபாமா சென்றார் . அங்குள்ள நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த தற்போது வாழும் முதியோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் ஒபாமாவை ஆரத்தழுவி அழுதனர். ஒபாமாவும் அவர்களின் கவலையை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில்:
கடந்த 71 ஆண்டுகளுக்கு முன்னர் விடியும் வேளையில் மேகம் இல்லாத காலை நேரத்தில் வானில் இருந்து மரணங்கள் இங்கு விழுந்தன. இதனை தொடர்ந்து உலகமே மாற்றம் கண்டது. தீப்பிழம்பு எழும்பியது, நகரின் சுவர்கள் நாசமாகின. அத்துடன் மனித நேயம் அழிந்தது.
இதில் உயிரிழந்தோர் ஆன்மாக்கள் சாந்தி பெறட்டும். இது போன்ற கொடூர செயல் இனி நடக்க கூடாது. நாங்கள் அது போல் திரும்பவும் செயல்பட மாட்டோம். அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும் . நாங்கள் இங்கு இப்போது வந்துள்ளதற்கு காரணம் இந்த துயர சம்பவம் குறித்து எண்ணி பார்க்கவே. இவ்வாறு நடந்ததற்கு கவலைப்படுகிறேன். இவ்வாறு அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார்.
துயர நாள் ., ஓர் நினைவு: இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதலாக அமைந்தது. மேலும் அதன் பாதிப்பு இன்றளவும் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தின் போது, அமெரிக்கா, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய 2 நகரங்களில் அணுகுண்டு வீசியது. அமெரிக்க அதிபராக ஹாரி எஸ்.ட்ரூமன் இருந்தார். அமெரிக்காவின் இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
அணுகுண்டின் ஆரம்பம் ; உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. “லிட்டில்பாய்’ எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த “பி-29 ரக எனோலாகெய்’ என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் உயிரிழந்தனர். கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர்.(இதன் பாதிப்பு இன்னும் தொடர்கிறது) குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தெரியவந்தது.
மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது “பேட்மேன்’ என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதனையடுத்து 6 நாட்கள் கழித்து 1945 ஆக., 15ம் தேதி ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.