சம்பியன்ஸ் லீக்கை வென்றது றியல் மட்ரிட்

article_1464514486-LEADCldjrfj16fhnjdஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பினால் ஒழுங்கமைக்கப்படும் சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் சக மட்ரிட் நகர அணியான அத்லெட்டிகோ மட்ரிட்டை தோற்கடித்த றியல் மட்ரிட் 11ஆவது தடவையாக சம்பியன்ஸ் லீக்கை வென்றது.

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களான ஏ.சி.மிலான், இன்டர் மிலானின் கால்பந்தாட்ட அரங்கமான சன் சிரோவில் இடம்பெற்ற மேற்படி இறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றிருந்தது. மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாததையடுத்து வெற்றி பெறும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு பெனால்டி வழங்கப்பட்டிருந்தது.

பெனால்டியில், றியல் மட்ரிட்டின் லூகாஸ் வஸ்கூஸ், மார்ஷெல்லோ, கரித் பேல் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்த நிலையில், அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக அந்தோனி கிறீஸ்மன், கபி, சாவூல் நிகூஸ் ஆகியோரும் கோல்களைப் பெற்றிருந்ததனர். அடுத்த நான்காவது பெனால்டியில் றியல் மட்ரிட்டின் சேர்ஜியோ ராமோஸ் கோலைப் பெற, அத்லெட்டிகோ மட்ரிட்டின் ஜூவன்ஃபிறான் அடித்த பந்து கோல்கம்பத்தில் பட, சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது பெனால்டியை அமைதியாக கோல்கம்பத்துக்குள் செலுத்த, 5-3 என்ற கணக்கில் பெனால்டியில் சம்பியன்ஸ் லீக்கை றியல் வென்றது.

முன்னதாக போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ராமோஸ் பெற்ற கோலானது ‘ஓஃப் சைட்’ இலிருந்தே பெறப்பட்டிருந்தபோதும் அதை உதவி மத்தியஸ்தர் கண்டுபிடித்திருக்கவில்லை. இதன் காரணமாக மேற்படி கோலானது சர்ச்சைக்குரியதொன்றாக மாறியிருந்தது. எனினும் பின்னர் அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிறீஸ்மன் தவறவிட்டிருந்த நிலையில், மாற்று வீரராக களமிறங்கிய அத்லெட்டிகோ மட்ரிட்டின் யன்னிக் கர்ரஸ்கோ போட்டியின் 79ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலமே மேலதிக நேரத்துக்குச் சென்றிருந்தது.

2002ஆம் ஆண்டு வீரராக சம்பியன்ஸ் லீக்கை வென்றிருந்த தற்போதைய றியல் மட்ரிட்டின் முகாமையாளரான ஸினேடி ஸிடேனின் அணியானது முன்களத்தில் அழகாக செயற்பட்டிருந்ததோடு, அத்லெட்டிகோ மட்ரிட்டின் தாக்குதல் கூட்டணியான கிறீஸ்மன், பெர்ணான்டோ டோரஸுக்குகான பந்து பரிமாற்றங்களை நிறுத்தும் பொருட்டு றியல் மட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரர்களான கரித் பேல், ரொனால்டோவும் மத்திய களத்துக்கு வந்திருந்ததுடன் கரிம் பென்ஸீமாவும் தனது தடுப்பாட்ட கடமைகளையும் நிறைவேற்றி சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net