சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட்

ronaldo_2872219f
கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன.

அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது.

10 முறை சாம்பியன்ஸ்

அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. மிலன் நகரில் நடைபெறும் இன்றைய ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது.

போட்டி நடைபெறும் சான் சிரோ மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ரியல் மாட்ரிட் பட்டம் வென்றிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அட்லெடிகோ மாட்ரிட் அணி திட்டமிடக்கூடும். பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.114 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.80 கோடியும் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

ரொனால்டோ

ரியல் மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த தொடரில் 16 கோல்கள் அடித்துள்ளார். இன்று அவர் மேலும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில் ஒரே சீசனில் 17 கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார்.

ஆனால் சான் சிரா மைதானத்தில் நடை பெற்ற ஆட்டங்களில் ரொனால்டோ இதுவரை கோல்கள் எதுவும் அடிக்க வில்லை. இதுதொடர்பாக அவர் கூறும்போது, “சாதனையை சமன் செய்வதோ அல்லது கடக்கவோ நன்றாக தான் இருக்கும். ஆனால் நான் அந்த சிந்தனையில் இல்லை. ஏனெனில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம்” என்றார்.

கனவு நிறைவேறுமா?

அட்லெடிகோ மாட்ரிட் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் உள்ளது. அந்த அணி 1973-74 மற்றும், 2013-14ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தால் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லாத அணி என்ற மோசமான சாதனையை படைக்கும்.

இன்றைய ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. அந்த அணி அட்லெட்டிகோ அணியுடன் கடைசியாக மோதிய 10 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

இறுதிப்போட்டி குறித்து அட்லெட்டிகோ அணியின் மேலாளர் சிமியோன் கூறும்போது, ” நாங்கள் ஏற்கெனவே உலகின் சிறந்த 3 அணிகளில் இரு அணிகளுக்கு எதிராக விளையாடி உள்ளோம். தற்போது 3-வது ஒரு அணியுடன் மோத உள்ளோம். ரியல் மாட்ரிட் அணியானது பார்சிலோனா, பேயர்ன் முனிச் அணிகளில் இருந்து வேறுபட்டது. அவர்கள் பெரிய அளவிலான அச்சுறுத்தும் அணியாக செயல் படக்கூடியவர்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். வெற்றி பெற என்ன தேவையோ அதை களத்தில் சிறப்பாக செயல்படுத்துவோம்” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net