3 லட்சம் ராணுவ வீரர்களுக்கு மாற்றுவேலை: சீன அதிபர் உத்திரவாதம்

201606081024461272_China-s-Xi-says-laid-off-soldiers-will-be-found-work_SECVPF-300x171
சீனாவில் பணிநீக்கம் செய்யப்படும் 3 லட்சம் ராணுவ வீரர்கள் எதிர்காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் மாற்றுவேலை அளிக்கப்படும் என சீன அதிபர் க்சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது 23 லட்சம் படைவீரர்களை வைத்திருக்கும் சீனா, ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கென பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
அப்படி ராணுவ பலத்தை அதிகரித்துக்கொண்டிருந்த சீனாவில் 3 லட்சம் ராணுவ வீரர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அதிகர் க்சி ஜின்பிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

சீர்குலைந்த பொருளாதார மந்தநிலையை புனரமைக்கவும், வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாலும், தரமான வீரர்களை கொண்டு வலிமையான ராணுவத்தை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக லெப்டினண்ட் ஜெனரல், கர்னல் என ராணுவத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை வரும் 2017-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாய முறையில் ராணுவத்தை விட்டு வெளியேற்றப்படும் அனைவருக்கும் நியாயமான ஓய்வுக்கால இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சீன ராணுவத்தில் இப்படி ஆட்குறைப்பு செய்வது இது நான்காவது முறையாகும். இதற்குமுன், கடந்த 1987-ம் ஆண்டு 4.238 மில்லியனில் இருந்து 3.235 மில்லியனாக குறைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு 5 லட்சம், 2003 முதல் 2005 வரை 2 லட்சம் வீரர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 3 லட்சம் பேரை ராணுவ வேலையில் இருந்து வெளியேற்றுவதாக சீனா அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்கள் அளிக்கும் புதிய வேலைவாய்ப்பில் இப்படி பணிநீக்கம் செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சீன அதிபர் க்சி ஜின்பிங் முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய சீன அதிப க்சி ஜின்பிங், பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

‘பணீநீக்கம் செய்யப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் அனைவரும் இந்த நாடு மற்றும் நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொக்கிஷங்கள் போன்றவர்கள். அவர்களுக்கான மறுவேலைவாய்ப்பு அவர்களின் எதிர்கால வாழ்க்கை கண்ணியமான முறையில் கழியும் வகையில் அமைவதை அரசு உறுதிப்படுத்தும்’ என க்சி ஜின்பிங் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net