இவளதிகாரம் ( சிறுகதை ) – தெய்வீகன்

images4
பிசிறி அடித்த விந்துச்சளி அவள் முகத்தில் இளஞ்கூட்டின் தன்மை குன்றாமல் பாய்ந்து படர்ந்தது. காமத்தின் ஊழித்திரவத்தை தன்னவள் அற்ற எவள் முகத்திலும் ஏவித்தன் ஏக்கம் தீர்க்கும் சராசரி ஆணின் அந்த கலவிப்பொறிமுறை அவளுக்கு ஒன்றும் புதிதானது அல்ல. அவனது காமம் அடங்கிவிட்ட அந்த அறிவிப்பினை விளங்கிக்கொண்டவளாக இமைகளை திறக்கமுடியாமல் முகத்தில் தவழ்ந்துகொண்டிருந்த குற்றுயிர் குழந்தைகளுடன் தன் நிர்வாணத்தையும் சுமந்துகொண்டு கழிவறையை நோக்கி குத்துமதிப்பான ஓடினாள் வெறோனிக்கா.

நல்ல காலம் கதவு ஏற்கனவே திறந்திருந்தது, கையால் துலாவி பைப்பை கைப்பிடித்து தண்ணியை திறந்தாள். கை நிறைய அள்ளி எடுத்து முகத்தை அடித்து கழுவினாள். தான் விரும்பி தின்னக்கொடுத்த தனது அப்பாவி நிர்வாணத்தை கண்ணாடியில் பார்த்தாள். பாவமாக கிடந்தது. தெளிவாக துடைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஆதலால், அந்த வெள்ளை உடம்பில் சற்றுமுன்னர் விழுந்த கீறல்களும் அழுத்திப்பிடித்ததால் சிவந்துபோயிருந்து தசைகளும் அவனின் காமவேட்கையை காட்டிநின்றது. தலையெல்லாம் வியர்த்து தலைமுடி ஆங்காங்கே பிணைந்தும் கலைந்தும் கிடந்தது.

ஒவ்வொரு முறையும் இப்படித்தான் எல்லாம் முடிந்த பின்னர் சில விநாடிகள் கண்ணாடியில் தன்னை பார்த்து பாவப்படும் வெறோனிக்காவின், தன் மீதான மனிதாபிமானம் சற்று நேரத்திலேயே கரைந்துபோய்விடும். எல்லாம் ஷவரை திறத்து மென்சூட்டு தண்ணீரில் அடித்து முழுகும் வரைக்கும்தான். அதற்கு பிறகு, சாப்பிடுவது, குளிப்பது போன்ற அன்றாடக்கடமைகளில் ஒன்றாக அதையும் எண்ணிக்கொண்டு, உழைப்பாள். திளைப்பாள். பிழைப்பாள். இதுதான் அவள் வாழ்வு அல்ல. இதுவும் அவள் வாழ்வு.

வித்தியாசமான இந்த ஜீவனுக்கு இவளது வாடகை அறையில் ஒன்றாக இருக்கும் அனீட்டா அடிக்கடி வகுப்பெடுத்து களைத்துப்போய்விட்டாள். ஏன், இன்றுகூட இங்கு வருவதற்கு முதல் நாள் இரவு நீண்ட நேரம் பேசினாள். வெறோனிக்கா அப்படியே செவிமடுத்துவிட்டு சொன்ன பதில்கள் அவளை நோக்கிய அனீட்டாவின் மீதி கேள்விகளையும் ஒரேயடியாக காலி செய்திருந்தன.

“சும்மா சும்மா, நான் வேசித்தொழில் செய்யிறதப்போல எனக்கு அட்வைஸ் பண்ணாத. உனக்கு திரும்ப திரும்ப சொல்லிப்போட்டன். நாங்கள் பரஸ்பரம் எங்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்கிறம். அவ்வளவுதான். வாற போறவனிடம் நான் போய் படுக்கிறனா? இல்லையே. இஞ்ச பார். இண்டைக்கு நான் போகப்போறவன். மூண்டு மாதமா எனக்கு லைன் போட்டான். ரெண்டு மாதமாக டேட்டிங் போனம். அவன்ர விரல்கூட என்னில பட விடயில்லை. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக எங்களை பற்றி பேசத்தொடங்கினம். தாய்லாந்துக்கு என்னை கூட்டிக்கொண்டு போகப்போறன் எண்டான். போனன். அங்க ஓப்பினா தன்ர விருப்பத்தை சொன்னான்.

“தனக்கு கலியாணம் என்ட மேட்டரே விருப்பமில்லை. அதுக்காக லிவிங் டு கெதர் என்ற கென்ஸப்டிலையும் ஈடுபாடு இல்லை. விதம் விதமா வாழ்க்கைய அனுபவிக்கவேணும். வுழமையாக இருக்கிற பமிலி சிஸ்டத்தில தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று ஒளிவு மறைவின்றி பேசினான்;. என்னோட கொஞ்சக்காலம் இருக்கலாம் எண்டு தான் விரும்பிறதாகவும் அதுக்கு உபகாரமாக எனது பணத்தேவைகள் உட்பட சகலதையும் செய்து தர தனக்கு விருப்பம் எண்டும் தெளிவா தன்ர நிலைப்பாட்ட சொன்னான். அவ்வளவுதான்” என்று தோளைத்தூக்கி தலையை வலப்பக்கம் சரித்து “இது ஸிம்பிளான விஷயம்” என்பது போல சைகித்தாள் வெறோனிக்கா.

அப்பிடியே தொடர்ந்தவள் “ஓராயிரம் தரம் உனக்கு சொல்லிப்போட்டன். ஆஸ்திரேலியாவில எனக்கு ஒருத்தரும் இல்லை. ரோட்டில போகும்போது நாளைக்கே ஒரு அக்ஸிடண்ட் நடந்தாக்கூட ஆஸ்பத்திரியில வந்து பார்க்கிறதுக்கு நீ மட்டும்தான் ஒருத்தி இருக்கிறாய்” – என்றுவிட்டு –

“என்ன இருக்கிறாய்தானே?” என்று கண்ணை சிமிட்டிவிட்டினாள். அது அவளுக்கு ஒரு குசும்புக்கேள்வி. ஆனால், அதை ஜீரணிக்கிற அளவுக்கு அனீட்டாவுக்கு எந்த உணர்வும் வரவில்லை.

“நான் படிக்க வந்த செமஸ்டர் காசு எவ்வளவு எண்டு தெரியாமலே என்னை இஞ்ச அனுப்பிப்போட்டு பிள்ளை படிக்குது எண்டு எனக்கு ஊரில கலியாணம் பேசிக்கொண்டு திரியிற அப்பா – அம்மாவுக்கு இண்டை வரைக்கும் எனக்கு எவ்வளவு காசு அனுப்பவேணும் எண்டும் தெரியாது. அவயளால அனுப்பவும் முடியாது.

“விஸா இல்லாமல வேலை கேட்டுபோன இடங்களில ஓவர் ஸீஸ் ஸ்டுடன்ஸ் எண்டு பல்லை இளிச்சுக்கொண்டு சொல்ல அடிமாட்டு சம்பளத்துக்கு எத்தினை ஆக்கள் எங்களை உலைச்சு எடுக்கிறாங்கள் என்று உனக்கு தெரியும்தானே. இவ்வளவும் வேண்டாம். நானும் நீயும் கிளீனிங் வேலைக்கு எண்டு போனமே மஸிடோனியன்காரன். எவ்வளவடி தந்தவன்?” – கழுத்தை நீட்டி கேட்டாள்.

“பதினைஞ்சு டொலர்” – என்றாள் அனீட்டா.

“ம்..பதினஞ்சு டொலர் மணித்தியாலத்துக்கு. மாஞ்சு மாஞ்சு நாலு மணித்தியாலம் வேலை செய்து அறுபது டொலர் ஒருநாளுக்கு உழைச்சு அதை வச்சு நாக்கு வளிக்கத்தான் காணும். அப்படி உழைச்சுப்போட்டும் வீட்ட வந்து சமைச்சு படிச்சு, கம்பஸ_க்கு போய், அட்டன்டன்ஸ் ஒழுங்கா இல்லாட்டி இமிகிறேசனுக்கு அறிவிச்சு திரும்பவும் நாட்டுக்கு அனுப்பிப்போடுவானோ எண்ட பயத்தில அங்கையும் பாஞ்சு இஞ்சையும் பாஞ்சு. தூ….வாழ்க்கையாடி இது. நாங்கள் மனுசனா மெஷினா.

“உனக்கு பரவாயில்லை. கொண்ணர் லண்டனில இருக்கிறபடியால், செமஸ்டர் காசை அவன் அனுப்பிறான். இஞ்ச ஏதோ தென்தெட்டாக உழைக்கிற காசை வாடகைக்கு கட்டி காலத்தை ஓட்டுறாய். என்ர நிலைமைய யோசிச்சுப்பார். ஏலாதடி”

பேசுவதற்கு இடைவெளியே இல்லாமல் பொரிந்து தள்ளிவிட்டு காலை கொஞ்சம் நீட்டி தலைமுடியை பின்னால் இழுத்துவிட்டுவிட்டு பெரிய மூச்சொன்றை வெளியே தள்ளினாள்.

“இஞ்ச பார், வாழ்க்கையில நிம்மதி வேணும். நாங்கள் படிச்சு கிளிச்சு எடுக்கப்போற வேலைக்குப்பிறகு எங்களுக்கு அது கிடைக்குதோ தெரியேல்ல. ஆனா, என்னை பொறுத்தவரைக்கும் எனக்கு இப்ப அது நிறைவாக கிடைக்குது. இதைவிட என்னடி வேணும்”

பரம்பரை பரம்பரையாக செய்யும் தொழிலில் பெற்ற பாண்டித்தியத்தாலும் நம்பிக்கையாலும் கதைப்பதுபோல பேசிக்கொண்டுபோன வெறோனிக்காவின் எந்த விளக்கத்துக்கும் உடன்படாத அனீட்டா மீண்டும் ஆரம்பத்திலிருந்து அனுங்கத்தொடங்கினாள்.

“ஐயோ. இது பிழையடி. நாளைக்கே உனக்கொரு கலியாணம் எண்டு வரும்போது என்ன செய்யப்போறாய். வாறவனிட்ட போய் சொல்லப்போறியே. இத்தின பேரிட்ட படுத்தெழும்பித்தான் நான் என்ர டிகிரிய முடிச்சனான். படிக்கும்போது எனக்கு இதுதான் வேலையெண்டு உன்னால சொல்ல முடியுமே. கனக்க வேண்டாம். உதில உழைச்சு வீட்டுக்கு அனுப்பிறதா சொல்லிறியே, உன்ர அப்பா – அம்மா இதை கேள்விப்பட்டா தூங்கிச்செத்துப்போகுமடி”

“அடியேய், வெளிநாட்டுக்கு வந்த எத்தனையோ ஆம்பிளையள் தங்கட கலியாண வயதை தொலைச்சுப்போட்டு குடும்பத்துக்காக உழைச்சு குடுத்து குடுத்தே தங்கட வாழ்க்கைய அழிச்சுப்போட்டு பிரம்மச்சாரியளா இருந்துட்டு போறாங்கள். அப்பிடி, நானும் உந்த கலியாணக்கோதாரிக்க போகமலே இருந்திட்டுப்போறன். அந்த கண்றாவியில அப்பிடி என்னதான்டி இருக்கு. இல்லை கேக்கிறன். சுருக்கமாகச்சொன்னா, வெளிநாட்டுக்கு வாறவன் ஒருத்தனும் சென்டிமென்ட் பற்றி கதைக்கப்படாது. முக்கியமாக எங்களப்போல ஆக்கள், அப்பிடியெல்லாம் நினைச்சும் பாக்கக்கூடாது. அவன் இப்பிடி நினைப்பான், இவள் இப்பிடி கேப்பாள் எண்டால், உயர்சாதி எண்டு ஊரில சொல்லிக்கொண்டு திமிரெடுத்து திரிஞ்ச எத்தினை பேர் இஞ்ச கிளீனிங் எண்டு இங்கிலிசில சொல்லிக்கொண்டு பீ கழுவிக்கொண்டு திரியினம். அதுகளைப்பற்றி ஊரில தெரிஞ்ச யாரும் தூங்கிச்செத்துப்போனாங்களே? இன்னும் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறாங்கள்.”

“இஞ்ச பார். என்னட்ட வாறவன் எல்லாருமே படுக்க வாறது கிடையாது. யாரோடேனயும் லவ்வில விழுந்து முறிஞ்சவனும் எழும்பி வாறான். குடும்ப பிரச்சினையள சமாளிக்க முடியாமல் டிப்றஷனில ஆதரவாக ஒரு தோள் தேடுறவனும் வாறான். அப்படியான ஆக்களோட டேட்டிங் போறன். பழகுறம். என்னுடைய நட்பு அவங்கட வாழ்க்கையில மிகப்பெரிய சந்தோசத்தை குடுக்குது. தங்கட வாழ்க்கையில நடந்த கெட்ட சம்பவங்களில இருந்து வெளியில வாறத்து;கு நான் மனதளவில ஒரு மருந்துபோல இருக்கிறதா அவங்கள் நம்புறாங்கள். அதுக்காக காசை அள்ளித்தாறாங்கள். எங்களுக்கு இடையில அதை நாங்கள் எப்பவுமே காசாக பார்க்கயில்லை. எனக்கான தேவையாக அவங்கள் பாக்கிறாங்கள். அவங்களுக்கான தேவையாக நான் செய்யிறன். பழக முதலே என்ர நிலைமைய சொல்லித்தான் அவங்களோட பழகுறன். இந்த விஷயத்தில நான் பழகுறவனும் சரி படுக்கிறவனும்சரி எங்களுக்குள்ள இதுவரைக்கும் எந்த சிக்கலும் இருந்ததில்ல. நான் அந்த உலகத்துக்குள்ளையே வாழுறனான். உனக்கு இது சொன்னா விளங்காதடி. சொல்லுறன். கேள். ஊரில நல்லூர் கொடி ஏறினதுக்கு இஞ்ச விரதம் பிடிக்கிற மனநிலையிலதான் நீ இன்னும் இருந்துகொண்டிருக்கிறாய். உனக்கு என்ர வாழ்க்கை பிடிபடுகுpறது வலு கஷ்டம்” – என்று எழும்பி அறையினுள் போக வெளிக்கிட்டவள் –

“இஞ்ச பார், நான் அவனோட இவனோட போறன் எண்டு என்னப்பற்றி ஒவ்வொருநாளும் என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறியோ தெரியாது. நான் கடைசியா ஒருத்தனோட படுத்து 18 மாசமாச்சு தெரியுமா? நாளைக்குத்தான் கனநாளுக்கு பிறகு ஒருத்தனோட போறன். முதல் சொன்னமாதிரி, நல்லா பழகி, நட்பாகி, எங்களுக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டான்டிங்கோடதான், இப்பகூட இந்த நிலைக்கு நாங்கள் வந்திருக்கிறம். போறவன்கூட எல்லாம் படுத்துக்கொண்டு திரியிறன் எண்டு தேவையில்லாம நீ முதல் மனசைப்போட்டு குழப்பாதை” – என்றுவிட்டு உள்ளே போய்விட்டாள்.

எல்லோரும் தெய்வக்குற்றம் போல பேசும் காமத்தை வெறொனிக்கா கடதாசி மாதிரி கசக்கி எறிந்து பேசுகின்ற ஸ்டைல் இருக்கிறதே, அதை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் கேட்கும்போது எழும்பி “சப்” என்று அறையவேணும் போல இருக்கும் அனீட்டாவுக்கு. ஆனால், அது ஒரு காலம். இப்போதெல்லாம், இந்த விடயத்தை கதைத்தால் இதுதான் பதிலென்று தெரிந்தும் மனம் கேட்காமல் அவ்வப்போது வெளியே கொட்டிவிடுவாள்.

மொட்டை மாடியில் அதுவரை ஜில் என்று வீசிக்கொண்டிருந்த குளிர்காற்றை கிழித்துக்கொண்டு துவானங்கள் பொட்டுப்பொட்டாக அனீட்டாவின் முகத்தில் கோலம்போடத்தொடங்கின. முன்னிரவின் அழகை எப்படி ரசிப்பது என்று அப்போது அவளுக்கு எதுவுமே தெரியவில்லை.

தனது அறையிலிருந்துகொண்டு இப்படியொரு வாழ்க்கை வாழ்பவளால் தனக்கும் கெட்ட முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று ஒருபோதும் அனீட்டா கவலைப்பட்டது கிடையாது. ஆனால், இயலுமானவரையில், வெறோனிக்காவை இந்த பழக்கத்திலிருந்து வெளியில் இழுத்தெடுப்பதற்குத்தான் படாத பாடுபடுகிறாள். எப்போதாவது ஒருநாள் இரவு இப்பிடித்தான், இழுத்துவைத்து மண்டையை கழுவுவாள். ஆனால், காலங்கள் நகர நகர, வெறோனிக்கா தனது பழக்கத்துக்கு மேலும் மேலும் வலுச்சேர்க்கும் நியாப்படுத்தல்களை கூறி அனீட்டாவின் வார்த்தைகளை அடைத்துவிடுவாளே தவிர தன்னிலையில் மாறுவதற்கான எந்த அறிகுறியும் காண்பிப்பதில்லை.

“வாடி உள்ள. மழையில இருந்து கொண்டு” ஜன்னலை சாத்தும்போது அறையினுள் இருந்துகொண்டு மொட்டை மாடியில் நி;ன்றுகொண்டிருந்த அனீட்டாவை “உள்ளே வந்து படு” என்று முகத்தால் அழைத்தாள் வெறோனிக்கா.

மெல்லிய நீர்க்கோடுகளால் நனைந்த தனது முகத்தை கையால் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள் அனீட்டா.

“என்ன கோப்பி ஒண்டு போடவா”

“ம்” என்று தனது எல்லா களைப்பையும் ஒற்றை வார்த்தையால் காண்பித்தாள் அனீட்டா.

அவள் அப்செட்டாக இருக்கிறாள் என்று தெரிந்துதான் தொடர்ந்து கதை கொடுத்துக்கொண்டிருந்தாள் வெறோனிக்கா. அறையின் மூலையிலிருந்த துவாயை எடுத்து துடைப்பதெற்கென அனீட்டாவை நோக்கி மெதுவாக எறிந்துவிட்டு கோப்பி போடுவதற்கு குசினிப்பக்கம் போனாள்.

தலையை சாதுவாக துவட்டிவிட்டு அருகிலிருந்த கதிரையில் விரித்த அனீட்டா, கட்டிலில் சரிந்து தனது மடக்கிய வலதுகையில் தலையை வைத்துக்கொண்டு படுத்திருந்து வழித்த யோசித்துக்கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் இரண்டு கைகளிலும் பெரிய குவளைகளில் கோப்பியுடன் வந்த வெறோனிக்கா அனீட்டாவிடம் ஒன்றை நீட்டினாள். எழும்பி வாங்கிக்கொண்டு சுவர் பக்கமாக முதுகை தள்ளி சாய்ந்திருந்துகொண்டாள். முன்னாலிருந்த கதிரையில் அமர்ந்த வெறோனிக்கா மெல்லிய குரலில் –

“காதல், காமம், கோபம், வெட்கம், துக்கம் எல்லாம் மானிட வர்க்கத்தின் பொதுவான உணர்வுகள். அது எப்படியானது. ஓவ்வொருவருக்கும் எவ்வளவானது என்ற வடிவத்தையெல்லாம் கொடுப்பது நாங்கள்தான். நாங்கள் எண்டு நான் சொல்லிறது ஒவ்வொரு தனிமனிதனும்தான். அது எங்கோ இருந்து குதித்துவந்து எங்களுக்குள் இத்தனை கிலோ எடையுடன் வளர்றதுக்கு, உணர்ச்சிகள் ஒன்றும் கிட்னி ஸ்டோன் இல்லை. விளங்குதே..” – என்றாள்.

அப்போதுதான், அந்த இளஞ்சூட்டு கோப்பியை மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்த அனீட்டா “கிட்னி ஸ்டோன் இல்லையடி” என்று சொல்லி முடிக்கவும் குபீர் என்று சிரித்துவிட்டாள். குவளையிலிருந்த தேனீரில் கொஞ்சம் திமிறி வெளியே தெறித்தது. ஆனால், சிரிப்பை அடக்கமுடியாமல் தொடர்ந்து சிரிக்க, அவளை சிரிக்கவைத்துவிட்ட மகிழ்ச்சியுடன் அனீட்டாவுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளும் அந்த எக்ஸ்குளுசிவ்வான – போலியற்ற – சிரிப்பை அவிழ்த்துவி;ட்டாள் வெறோனிக்கா. சில்லறையை கொட்டிவிட்டதுபோல இருவரும் சேர்ந்தொலித்த சத்தம் அடங்க சில நிமிடங்கள் ஆனது.

அப்படி சிரித்த கணங்கள் தானாகவே கலைந்துகொள்ள பழையபடி மௌனம் அந்த அறையை ஆக்கிரமித்துக்கொண்டது.

“அன்பே” என்று சொல்ல “நாதா” என்று பதில் சொன்ன காவிய காதல் போய், இறுக்கமான குடும்ப பந்தத்தில் பெண் என்பவள் தெய்வமாக பார்க்கப்பட்ட கட்டுமானத்துக்குள் நாங்கள் கொஞ்சம் தளர்ந்தோம். பின்னர், வெளிப்படையான காதல் என்ற புதுக்கறையான் எங்கள் உறவுகளை சுகமாக அரித்து தின்று இன்னொரு இன்ப உலகை திறந்துகாண்பித்துவிட்டு எங்களுக்குள் சஞ்சாரம் செய்தது. அதை ரசித்தோம். அந்த காதலின் இன்னொரு புரட்சி வடிவமாக லிவிங் டு கெதர் என்ற திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் சப்ஜெக்ட் எல்லாருடைய பிரச்சினைக்கும் பனடோல் போல இலவச சிகிச்சை செய்கிறது எண்டு பார்த்தால், இப்ப வெறோனிக்காவின் உறவும் வெகுவிரைவில் சமூகத்தில் ஒரு அங்கமாகவிடும் என்பதுதான் இந்த நியாயப்படுத்தல்களில் எதிரொலிக்கிறது என்பதை அச்சத்துடன் தனக்குள் நினைத்துக்கொண்டாள் அனீட்டா.

கோப்பியை குடித்துவிட்டு அப்படியே சரிந்து படுத்து எந்த கவலையும் இல்லாத குழந்தைபோல மெல்லிய குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தாள் வெறோனிக்கா.

எழுந்து லைட்டை அணைத்துவிடக்கூட விருப்பமில்லாமல் அவளது அழகை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தாள் அனீட்டா. நெருங்கிய நட்பும் பாசமும் பரிதாபமாக மாறுவது எவ்வளவு கேவலமானது என்பதை நினைக்க அவளுக்கே வெறுப்பாக இருந்தது. தன்னைவிட்டு மிகவும் தொலைவாக சென்றுவிட்ட வெறோனிக்காவின் வாழ்வை நினைக்கும்போது அருகில் அவள் படுத்திருக்கும்போதுகூட பாரிய வெறுமை ஒன்று தனக்குள் ஏற்பட்டதுபோல உணர்ந்தாள்.

இனிமேல் பரிதாபத்தை நீக்கி நிறைந்தளவு நட்போடு பழகவேண்டும் என்ற உறுதியோடு துங்கினாள் அனிட்டா, அன்றிரவு அவளோடும் அதன் பின்னர் ஒரு மாதம் தனியாகவும்.
மலைகள் இணையம்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net