உள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை.. தீபச்செல்வன் உரை

vetty_CI
(வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள் ஓய்வின்றிப் போராடிய, தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டத்துடன் கழித்த முக்கியமான போராளிகளில் ஒருவராக வெற்றிச்செல்வி அக்காவினுடைய ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூல் வெளியீட்டு விழாவிலே உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நாங்கள் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலைப் போரைச் சந்தித்தோம். இன மேலாதிக்கத்தால், அதிகாரத்தால், இராணுவத்தால், உலக வல்லாதிக்கங்களால் நிகழ்த்தப்பட்ட, வேட்டையாடப்பட்ட ஒரு மாபெரும் இனப்போரை சந்தித்தோம். அந்தப் போரை, ஒடுக்குமுறை குறித்த வலிகளை, வேதனைகளை, அதன் வரலாற்றை, உறுதிப்படுத்தத்தக்க கதைகளை பதிவு செய்யக்கூடிய, பதிவுகளை செய்துகொண்டிருக்கும் போராளி எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் வெற்றிச்செல்வி.

மாபெரும் வதைமுகாம்களின் பின்னர் எழக்கூடிய கேள்விகள் என்பது, அந்த வதைமுகாம்களுக்குள் இருந்து எழுதப்படுகின்ற இரத்த சாட்சிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. மனித உரிமைகள் குறித்த தாக்கம் தரும் கேள்விகளாக எழுகின்றன. ஒரு மாபெரும் இனப்படுகொலை சார்ந்த அது குறித்த இலக்கியமென்பது வதைமுகாம்களிலிருந்து எழும் என்று கருதக்கூடியநிலையை, வெற்றிச்செல்வி அக்காவின் ஈழப்போரின் இறுதி நாட்கள் என்ற நூல் அவ்வாறுதான் கருக்கொண்டது. அந்த அடிப்படையில் இன அழிப்புப் போர் சார்ந்து அந்த நூல் மிக முக்கியமானதொருநூல்.

எங்களுடைய போராட்டத்திலே, போராட்டம் சார்ந்து முள்ளிவாய்க்காலுக்கு உள்ளும், முள்ளிவாய்க்காலுக்கு வெளியிலும் பல்வேறு புனைவுகள் எழுதப்படுகின்றன. பலரால் பல்வேறு நூல்கள் எழுதப்படுகின்றன. நடந்த இனப்படுகொலையை மறைப்பதற்காக, எங்கள்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை மறைப்பதற்காக, எங்களுடைய எதிர்கால இருப்பை இல்லாமல் செய்வதற்காக, பலபுனைவுகள் முள்ளிவாய்க்காலுக்கு வெளியிலிருந்து முள்ளிவாய்க்காலின் பேரில், போரின் சாட்சிகளின் பேரில் ஈழமக்களின் பேரில் உருவாக்கப்படுகின்றன.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னர் மெய்யை எழுதுவது என்பது ஒரு மாபெரும் தற்கொலையாக, ஒரு மாபெரும் தண்டணையாக, மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.முள்ளிவாய்க்காலின் குருதியிலிருந்து எழுதியவர்கள் ஒருசிலர்தான். அதில் வெற்றிச்செல்வி அக்கா குறிப்பிடத்தக்க ஒருவர். இங்கே அமர்ந்திருக்கக்கூடிய நா.யோகேந்திரநாதன் அவர்கள் நீந்திக்கடந்தநெருப்பாறு என்கிற நூலில் போரின் பதிவுசெய்திருக்கிறார். அது ஒரு முக்கியமான ஆவணம். இதைக்கடந்து இந்த மாபெரும் போரை, வதைமுகாமை கடந்து சென்று புலம்பெயர் வாழ்வில் தங்கியிருக்கும் கு.கவியழகன் விடமேறிய கனவு, நூலில் இந்த போரையும் வாதைகளையும் பதிவு செய்திருக்கிறார்.

நாங்கள் மனிதாபிமானப் போர் என்ற பெயரில் இன அழிப்புப் போரை எதிர்கொண்டோம். புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் கொடிய வதை முகாம்களை எதிர்கொண்டோம். நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் எங்கள் மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட முள்வேலி முகாம்களை எதிர்கொண்டோம். போரில் மனிதாபிமானம் இருக்காது. வதை முகாங்களில் புனர்வாழ்வு இருக்காது. முள்வேலிகளில் நலன்புரிகள் இருக்காது. இந்த உலகில், வாதைகளை, போரின் பெயராலும் நலன் பேணும் முகாங்கள் என்ற பெயராலும் எதிர்கொண்ட இனம் நாங்கள்.

உண்மையிலே வதை என்பது என்ன? ஒரு வதை முகாம் என்பது எப்படி இருக்கும்? ஒரு வதை முகாமினுடைய அடையாளம் வெறும் முட்கம்பிகளால் மட்டும் சூழப்பட்டதா? நிச்சயமாக இல்லை. நாங்கள் வரலாறு ரீதியாக வதைக்கு உள்ளாக்கப்பட்டோம். நாங்கள் புறக்கணிப்பு ரீதியாக வதைக்கு உள்ளாக்கப்பட்டோம். நாங்கள் அதிகார ரீதியாக வதைக்கு உள்ளாக்கப்பட்டோம். நாங்கள் மேலாதிக்கரீதியாக வதைக்கு உள்ளாக்கப்பட்டோம். உண்மையில் வதைமுகாம் என்பது முள்வேலிகளிலும் முட்களிலும் இருப்பதில்லை. குருதி சிந்துவது மாத்திரமல்ல வதை. உள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை. அந்த வதையைக்காட்டிலும் பெரிய வாதை வேறொன்றுமில்லை.

அப்படியொரு வாதையை சந்தித்த ஒரு இருண்டுபோன நாட்களினுடைய பதிவுதான் இந்த புத்தகம். தன்னுடைய இருண்டுபோன நாட்களை ஒவ்வொன்றாக, ஒவ்வொரு கணங்களாக இங்கே வெற்றிச்செல்வி அக்கா பதிவு செய்திருக்கின்றார். எங்களுடைய போராளிகள் பல்வேறு வதைமுகாங்களை எதிர்கொண்டார்கள். அந்த வதைமுகாங்களின் வரிசையில் பம்பைமடு என்ற ஒரு வதைமுகாமை போராளிகள் எப்படிக் கடந்தாா்கள் என்பதுதான் இந்த நூல்.

வதை முகாமினுடைய அறிவிப்பும் வாதை சாந்ததுதான். அந்த வதை முகாம்களில் வழங்கப்பட்ட உணவும் வாதை சாந்ததுதான். அந்த வதை முகாமினுடைய காற்றும் ஒவ்வொரு முள்ளும் வாதைசார்ந்ததுதான். அந்த வதை முகாமில் வழங்கப்பட்ட மருந்து, குளிசைகள் ஒவ்வொன்றும் வாதைகள்தான். அங்கிருந்த காற்று, சூழல் எல்லாமே வதைதான். அப்படிக் கட்டமைக்கப்பட்ட வதைமுகாமை எப்படிக் கடந்து வந்தேன், அந்த வதை முகாமினுடைய ஒவ்வொரு கணமும் எப்படி இருந்தது என்பதைத்தான் இந்த நூலில் சகோதரி வெற்றிச்செல்வி பதிவு செய்திருக்கிறார்.

இந்த வதை முகாம்கள் எங்களுடைய மக்களை என்ன செய்யும்? போராளிகளை என்ன செய்யும் என்பதன் பெறுபேறுகூட இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஓமந்தையிலே அவர் போராளியாக சரணடைகின்றபோது அவருடைய வாக்குமூலத்தை எவ்வாறு வழங்குகிறார் என்பதும் ஒரு இராணுவ விசாரணை அதிகாரி தன்னை விசாரணை செய்கின்றபொழுது தன்னுடைய வாக்குமூலத்தை அவர் எவ்வாறு வழங்குகிறார் என்பதும் விடுதலை ஆகிய பின்னர் நாளை காலை புலரத்தானே போகிறது என்ற நம்பிக்கை கொள்கின்ற அந்த இடத்திலும்தான் இந்த வதைமுகாம்கள் எம்மை எதுவும்செய்து விடப் போவதில்லை என்ற ஒரு செய்தி, முடிவு, எழுச்சி அல்லது ஆறுதல் வெளிப்படுகின்றது.

இந்த புனர்வாழ்வு முகாம்கள் என்று அழைக்கப்பட்ட இந்த வதை முகாம்கள் அல்லது தடுப்பு முகாம்கள் எங்களுடைய போராளிகளினுடைய சமூக, இன பற்றை இல்லாமல் செய்கின்ற ஒரு உளவியல்யுத்தத்தை செய்தது. உண்மையில் அதுதான் பின் யுத்தம். யுத்தத்திற்குப் பின்னரான ஒரு யுத்தம். அதுதான் பின் யுத்த இன அழிப்பு. முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு பிந்தைய இன அழிப்பு.

முள்ளிவாய்க்கால் போரின் பின் நடந்த ஒரு இன அழிப்பின் தொடர்ச்சியாக ஒரு இனத்தினுடைய இளைய சமுதாயத்திடமிருக்கக்கூடிய அந்த இனம் குறித்த சமூக, இன, தேச, உரிமைப் பற்றை அழிக்கின்ற ஒரு செயல்தான் புனர்வாழ்வு. இந்த இடத்திலே அனுகூலம் வெற்றியாகியதா என்று பார்க்கின்றபோது வெற்றிச்செல்வி அக்கா ஒரு இடத்திலே சொல்கின்றார். விசாரணை அதிகாரி ஒருவர் கேட்கின்றார் நீ எதற்காக போராட்டத்தில் இணைந்தீர்கள் என்று கேட்கின்ற போது தன் நியாயத்தை சொல்கின்றார். எங்களுக்கு என்று ஒரு நாடிருந்தால் சந்தோசமாக வாழமுடியும் என்று இணைந்தேன் என்று. அந்த அதிகாரி அந்த வேதனையின் வெளிப்படையை அங்கே அவர் ஏற்றுக்கொள்கின்றார் அல்லது நிராகரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்.

அப்பொழுது அவர் கேட்கின்றார் இப்பொழுது எல்லாம் சரிதானே என்று. அதற்கு வெற்றிச்செல்வி அக்கா கூறுகின்றார். இப்பொழுதும் நீங்கள் மேலே இருக்கிறீர்கள் நான் நிலத்தில் இருந்து பதில்சொல்கிறேன் என்று. அந்த சமத்துவமின்மை, உரிமை மறுப்பு, இரண்டாந்தரப் பிரஜையாக நடத்துகின்ற ஒடுக்குறை மனோபாவத்தை அவர் வேறு யாரிடமும் சொல்லவில்லை. இதில் எந்தத் தயக்கமும் எந்த அச்சமும் இல்லை. அந்த இராணுவ அதிகாரியிடமே அவர் கூறிகிறார். வெற்றிச்செல்வி அக்காவின் ஒடுக்குமுறைக்கு எதிரான மனப் போக்கை வதைமுகாங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை அந்த இராணுவ விசாரணை அதிகாரி ஏற்றமை இங்கு முக்கிய செய்தி.

எங்களுடைய போராளிகள் ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் பேனாவையும் ஏந்தியவர்கள். அவர்கள் கொடுமையான போர்க்களத்திலே எதிரிகளுக்கு எதிராக போர் செய்துகொண்டிருக்கக்கூடிய சூழலிலும் அந்தப் போரை வெறுத்தார்கள். எங்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டும், நாங்கள் இந்த இயற்கையை இரசிக்க விரும்புகிறோம், இந்த கந்தக புகை எங்களுக்குவேண்டாம்! என்றால் துப்பாக்கிகள் எங்களுக்கு வேண்டாம்! நாங்கள் வாழ்வையும் அந்த வாழ்வை எழுதவும் விரும்புகிறோம் என்று போர்க்களத்திலிருந்து பாடினர் போராளிக் கவிஞர்கள்.

எழுதுங்களேன் நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன் என்றார் ஆனையிறவு போர்க்களத்திலிருந்து வானதி. இதைப்போல கஸ்தூரி, அம்புலி, மலைமகள், தமிழவள் என்று எங்களதுஈழத்து இலக்கியத்திலே போராளிகளுடைய பங்களிப்பும் போராளிகளினுடைய குரலும் மிகவும் வலுவாக பதிவுசெய்யப்பட்டது. இந்த உலகும் இலங்கை அரசாங்கமும் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தி, எங்கள் இனத்தை ஒடுக்க, எங்களுடைய போராளிகளின் மனநிலை எப்படி இருந்தது என்பதற்கு போராளி எழுத்தாளர்களினுடைய எழுத்துக்கள் சாட்சியமாகின்றன.

இந்த உலக அரங்கிலே மனிதாபிமானம் உள்ளவர்களை நோக்கி, எங்களுடைய போராளிகளின் குரல்கள், மனிதாபிமானம் என்றால் என்ன? எங்களுடைய மனநிலை எப்படி இருக்கின்றன? என்றகேள்வியையும் பதிலையும் உலகம் உள்ளவரை உரைத்தபடியிருக்கும். அப்படியான வரலாற்றை பதிவுசெய்த போராளிகளின் வரிசையிலே இடம்பெறுகின்ற வெற்றிச்செல்வி அக்காவினுடைய இந்தநூல், உளவியல் ரீதியாக போராளிகள் எதிர்கொண்ட வன்முறையை அவர்கள் எதிர்கொண்ட வாழ்க்கையை பதிவு செய்திருக்கின்றது.

நிச்சயமாக இது ஒரே ஒரு முகாமினுடைய கதைதான். அந்த போராளிகளைச் சுற்றி மக்கள் இருப்பதை ஒரு மக்கள் அரணாக பதிவு செய்திருக்கிறார். புத்தகத்தின் ஓரிடத்தில். எங்களுடைய போரட்டத்தில் மக்கள் எவ்வாறு போராளிகளுக்கு அரணாக இருந்தார்களோ அவ்வாறே வதை முகாம்களிலும் அவர்கள் போராளிகளுக்கு அரணாக இருந்தார்கள் என்கிற வலிய செய்தியை இந்த நூல் பதிவு செய்துள்ளது. வதைமுகாங்களில் எங்களுடைய போராளிகள் எதிர்கொண்ட உளவியல் ரீதியான வன்முறைகள், அக புற வன்முறைகள், வரலாற்று ரீதியான வன்முறைகளை பதிவுசெய்யக்கூடிய வகையிலே இது அமைந்திருக்கிறது. நான் நினைக்கிறேன் விடமேறிய கனவு என்ற நூலுக்குப் பின்னர் ஒரு முக்கியமான நூல் இது. அது ஒரு நாவல், இது நினைவுக் குறிப்புகளாக வந்திருக்கிறது.

இன்றைக்கு வடகிழக்கிலும் உலகம் முழுவதிலும் பல்வேறு போராளி எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நிச்சயமாக ஒவ்வொரு போராளி எழுத்தாளர்களும் தாங்கள் வாழ்ந்த வதைமுகாமிகளுடைய நினைவுக் குறிப்புகளை பதிவு செய்ய வேண்டும். இது அவர்களுக்குரிய வரலாற்றுக் கடமை. பம்பைமடு குறித்த இந்தப் பதிவானது ஈழத்தில் எழுந்திருக்கக்கூடிய சிங்களப் பேரினவாத இன அழிப்பு வரிசையிலே இருக்கக்கூடிய, அறியப்படாத வதை முகாம்களை பதிவுசெய்யக்கூடிய ஒரு வழியினை திறந்துவிட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இன்று போராளிகள் புற்றுநோய் வந்து இறக்கிறார்கள், திடீரென்று மயக்கமிட்டு விழுந்து இறக்கின்றார்கள். இன்னும் அறியப்படாத மர்மங்களால் அவர்கள் இறந்து போகிறார்கள்.

எங்களுடைய போராளிகளை வதைமுகாம்களில் அவர்கள் என்ன செய்தார்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பது தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் எங்களுடைய மக்களுக்கு உண்டு. எனவே அவற்றை பதிவு செய்வதன் ஊடாக இந்த சந்தேகங்களை தெளிவுபடுத்துவதுடன் இனப்படுகொலை அரசொன்றினுடைய இரத்தக்கறைபடிந்த வதைமுகாம்களினுடைய நிஜமான கதைகளை வரலாற்றை பதிவுசெய்ய வேண்டும். அதற்கு இந்த நூல் ஒரு முன்னுதாரணமாக ஒரு முதல் படியாக அமைகிறது. எந்தவிதமான அச்சமுமின்றி துணிச்சலான சாட்சியாக தன்னுடைய குரலை வலுவாக பதிவு செய்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி விடை பெறுகின்றேன்.

நன்றி.
தீபச்செல்வன்
குளோபல் தமிழ்

Copyright © 2696 Mukadu · All rights reserved · designed by Speed IT net