தமிழ்நதி எழுதியுள்ள பார்த்தீனியம் இந்திய ராணுவம் ஈழமண்ணில் நடத்திய கொடுமைகளை விரிவாக எடுத்துச் சொல்கிறது. பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களால் இந்திய அமைதிப்படை குறித்து உருவாக்கப்பட்ட பிம்பங்களுக்கு எதிராக அதன் கோரமுகத்தை தமிழ்நதி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதனுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட பரணியின் வழியாகத் தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளும் அதை எதிர்கொள்ளும் பெண்களின் துயர உலகமும் முன்வைக்கப்படுகிறது.
பார்த்தீனியம் நாவல் காதல்கதையாகத் துவங்குகிறது. வசந்தன் பரணியாக உருமாறும் வரையான சிறிய பகுதியது. புலிகள் இயக்கத்தின் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளத் தனது பெயரை பரணி என மாற்றிக் கொள்கிறான் வசந்தன். அவர்கள் தமிழகம் வருகிறார்கள். தமிழகக் கேரள மலையோரப்பகுதியில் களப்பயிற்சி தரப்படுகிறது. அந்த இடத்தினைக் கம்மாபட்டி என்று சொல்கிறார். அது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கம்மாபட்டி என்று நினைக்கிறேன். மேற்குத்தொடர்ச்சி மலையடிவார ஊரது. அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சிமுகாம் நடைபெற்றதை அறிவேன். அதைத்தான் தமிழ்நதி குறிப்பிடுகிறாரா எனத்தெரியவில்லை.
அங்கு நடைபெறும் ராணுவப் பயிற்சிகள்.
எம்.ஜி.ஆர் விடுதலைபுலிகளுக்கு உதவி செய்த விபரம். கழுதைகளில் கொண்டுவரப்படும் உணவு. அவர்களின் உறைவிடவாழ்வு என முகாம் வாழ்க்கை விரிவாக விளக்கப்படுகிறது. இந்திய ராணுவம் இலங்கையில் நுழைந்தபோது அவர்கள் இறைச்சிக்காகக் கொண்டுவந்த ஆடுகளிலிருந்து பரவியதாகச் சொல்லப்படும் பார்த்தீனியம் என்ற செடி ஒரு குறியீடாகப் பயன்படுத்தபடுகிறது. நிலத்தின் சத்தை எல்லாம் அந்தச் செடி உறிஞ்சிவிடக்கூடியது. தனக்குப் பக்கத்தில் எந்தச் செடியும் வளரவிடாமல் பார்த்துக் கொள்ளக்கூடியது. வெண்ணிறப்பூக்களைக் கொண்ட மோசமான செடி. நாவலின் 379வது பக்கத்தில் பார்த்தீனியம் செடி இந்தியாவுடன் ஒப்பிடப்படுகிறது. இந்திய ராணுவத்தினை அமைதிப்படை என ஏற்றுக் கொள்ளவே முடியாது எனத் தணிகாசலம் அய்யா கூறுகிறார்.
இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது இந்திய சிப்பாய்கள் ஒன்றும் தேவன்களில்லை. வன்புணர்வு எல்லா இடங்களிலும் நடக்கிறது. மேற்கிலும் கூட என பிரிகேடியர் கலோனின் கூறுகிறார். இது ஒப்புதல் வாக்குமூலம் போலவே சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ்நதியின் எழுத்து, வட்டார வழக்கு மொழியைக் கொண்டது. சொலவடைகளும் கவித்துவமான நுண் அவதானிப்புகளும் கொண்டது.
நாவலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களின் பெயர்கள் அப்படியே இடம்பெறுகின்றன, ஈழவிடுதலைப்போரின் சம்பவங்களையும் அதன் பின்னுள்ள அரசியல் நிலைப்பாடுகளையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறார் தமிழ்நதி, நாவலில் இடம்பெற்றுள்ள திலீபனின் மரணம் மறக்க முடியாத வரலாற்றுசோகம், அந்தப் பக்கங்களைக் கடக்கமுடியாதபடி மனத்துயரம் ஏற்படுகிறது. சமகால ஈழத்தமிழ் நாவல்களில் தமிழ்நதியின் பார்த்தீனியம் மிகவும் முக்கியமானது.