பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, நாடெங்கிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த அனுப்பிவிட்டனர்.
உள்துறை அமைச்சர் தெரெசா மே, தற்போதைய பிரதமர் மற்றும் கட்சித் தலைவராக உள்ள டேவிட் கேமரனுக்கு அடுத்து வரவிருக்கும் வேட்பாளர்களில் முன்னணியில் இருக்கிறார். அவர் 199 வாக்குகளைப் பெற்றார்.
அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் – இறுதிப் போட்டி இரு பெண்களிடையே
எரிசக்தித் துறை அமைச்சர் ஆண்ட்ரியா லீட்சம் 84 வாக்குகளைப் பெற்று இந்தத் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
நீதித்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் 46 வாக்குகளுடன் மூன்றாவதாக வந்ததை அடுத்து அவர் தேர்தலில் இருந்து அகற்றப்பட்டார்.
இறுதி முடிவு செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும்.
கடந்த மாதம் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டுமா என்பது குறித்த பிரிட்டிஷ் மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பில், வெளியேறவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் வாக்களித்ததை அடுத்து, பிரதமர் பதவிலிருந்து விலக டேவிட் கேமரன் முடிவெடுத்ததை அடுத்து கன்சர்வேடிவ் கட்சியின் இந்தத் தலைமைப் பதவிக்கான தேர்தல் தூண்டப்பட்டது.
பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்குக் கிடைத்திருக்கும் நிலையில், கட்சியை ஒற்றுமைப்படுத்த முடியும் என்று தெரெசா மே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்ற அணிக்கு ஆதரவாக தெரெசா மே பிரசாரம் செய்து வந்தார். லீட்சம் மற்றும் கோவ் ஆகிய இருவரும், பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற அணிக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்தனர்.
BBC