எத்தனை பேரைக் கொல்ல முடிந்ததோ
அத்தனை பேரையும் கொன்ற
ஒப்பற்றதொரு பயங்கரம்
உலக அமைதியின் வெள்ளைப் புறாக்களுக்கு
கரணம் கற்பிக்கும்
ஐ.நாவின் கைகளில்
பல்லாயிரம் பாலச்சந்திரன்களின் விலா எலும்புகள்
யுத்த வலயத்தில் ஊதிப்பெருத்த கால்நடைகளின்
துர்நாற்றமே உலக அமைதி
போர்க்காயங்களோடு மரவாளால் அறுக்கப்பட்ட
உடற்பாகங்களின் இறைச்சியைப் போல்
மேன்மையானது நந்திக்கடல்
என் சவக்குழியின் மேல் சாட்சியமற்றுலவும்
சர்வதேசக் கால்களை
வீதியின் புழுதியைப் போல முள்ளிவாய்க்காலின் குடல்கள்
மூடுகின்றன
இறந்தவர்களை எண்ணிக்கையிடும்
கொன்றவர்களின் புதியதொரு இழிவை
உருமாறி நிகழ்த்தும் வினோத அக்கிரமத்தை
பான் கீ மூனின் கண்கள் தயாரிக்கும்
பொன்னிற மணலில் காயமறுக்கும்
லட்ச மக்களின் ரத்தம்
நீதிக்காய் முழங்கி
போருக்காய் வெடிக்கும்
அதுவொரு ஒப்பற்ற பயங்கரத்தை
பழிவாங்கும்
விடுதலையின்
பேரலையாய் எழும்பும்.
கடலை இரத்தமாக்கிய அநீதியை
அலைகளால் கொல்லும்
அடையாளமற்ற ஆயுதத்தை
நாம் இன்னும் புதைக்கவில்லை.
அகரமுதல்வன்
07.08.2016