தமிழ் உலகை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று (17.08.2016) மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் – ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த வணக்க நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கெடுத்து தங்களது மரியாதை வணக்கத்தினை செலுத்தினர்.
வணக்க உரைகள், பாடல்கள், கவிதை, விவரணக்காட்சி என நா.முத்துக்குமாரன் அவர்களது நினைவுகளைத் தாங்கியதாக நிகழ்வு அமைந்திருந்தது.
நா.முத்துக்குமார் படைத்த பாடல்களுக்கும், கவிதைகளுக்கும், படைப்புகளுக்கும் பின்னால் இருந்த அறமும், மனித நேயமும், அன்புமே அவனை தமிழ்உலகம் கொண்டாட வைத்தது. அதானல்தான அவனின் மறைவுக்காக கண்ணீர் வடிக்கிறது, இதுவே ஈழத்தமிழர் திரைப்பட சங்கமும் அப்பெரும் கவிஞனுக்கு மரியாதை வணக்கம் செலுத்துகிறது என சுதன்ராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
மிக எளிமையான மனிதனாக, எளிமையான வரிகள் ஊடாக தனது கவிதை ஆளுமையினை பாடல்களில் நா.முத்துக்குமார் படைத்திருந்தார் என வணக்க உரையினை வழங்கியிருந்த கவிஞர் மாணி. நாகேஸ் அவர்கள், ஜெயமோகன் போன்ற இந்திய தேசியவாத இந்துத்துவாதிகள் தமிழினப்படுகொலையினை மூடிமறைக்க முனையும் இவ்வேளையில், தமிழினப்பற்றாளன் நா.முத்துக்குமார் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என குறிப்பிட்டிருந்தார்.
நாயகர்களை மையப்படுத்தி நட்சத்திர பிம்பங்களுக்குள் மத்தியில் பாடல் எழுதியவர்களின் பெயர்கள் கொண்டாடாத ஓரு சமூகத்தில், ஓர் கவிஞனை முன்னிலைப்படுத்தி நடக்கின்ற இவ்வணக்க நிகழ்வு முக்கியமானது என சமூகச் செயற்பாட்டாளர் முகுந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
மிகுந்த ஆளுமை மிக்க ஒரு கவிஞனாக, சமூகத்தை நேசித்த நா.முத்துக்குமார் தனது உடல் நலத்தில் நேசம் கொள்ளாது இடைநடுவில் விட்டுச் சென்றது குறித்தான தனது வருத்த்தினை கருத்தாளர் அசோக் அவர்கள் முன்வைத்திருந்தார்.
இந் நிகழ்வில் தமிழக ஊடகப்பரப்பில் நா.முத்துக்குமார் தொடர்பில் வெளிவந்திருந்த காட்சித்தொகுப்புகள் திரையிடப்பட்டிருந்தது.
நா.முத்துக்குமார் அவர்களுக்கு இந்திய தேசிய விருதுகளை பெற்றுத் தந்த இரு பாடல்களையும் ஜெய்க்கிசன் மற்றும் சோனா ஆகியோர் பாடி அரங்கிணை கவிஞனின் நினைவில் மூழ்கச்செய்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.