ஒக்ரோபர் 2இல் பாரிஸ் லாச்சப்பலில் த ஜெயபாலனின் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில் அந்நூல் தொடர்பான விமர்சனத்தை வைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதன் ராஜ் நூல் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். ஜிரிவி இல் படலைக்குப் படலை மற்றும் கோணல் மாணல் போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் சுதன் ராஜ் தற்போது ஐபிசி தொலைக்காட்சியின் பாரிஸ் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் தேசிய அரசியல் ஆதரவாளராக இருந்து இளைய தலைமுறை அரசியல் இலக்கிய ஆர்வலராகி வரும் வண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நூல் ஆய்வரங்க நிகழ்வை ‘நண்பர்கள் பிரான்ஸ்’ ஏற்பாடு செய்திருந்து. அரசியல் செயற்பாட்டாளர் விமர்சகர் அசோக் யோகன் கண்ணமுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் தேசிய ஆதரவாளராக இருந்து தற்போது முகடுகள் சஞ்சிகைக் குழுவில் செயற்படும் யோகு அருணகிரி, நாடுகடந்த தமிழீழ அரசின் ஊடகத்துறை அமைச்சர் சுதன் ராஜ் ஆகியோர் நூல் விமர்சனத்தை மேற்கொண்டனர்.
தனது தலைமையுரையில் வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை என்ற இந்நூல் யுத்தத்தின் உச்சமான 2008 முதல் 2009 வரையான காலப்பகுதியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த வண்ணன், பல்வேறு தகவல்களையும் சர்வதேச ஒப்பீடுகளையும் இந்நூல் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் அதிகம் பேசப்பட்டு உள்ளது என்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சமநிலை பேணப்பட்டதா என்றும் ஆய்வாளர் அசோக் யோகன் கண்ணமுத்து கேள்வி எழுப்பினார். இந்நூல் மிக முக்கியமான தரவுகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இந்நூல் நடந்து முடிந்த வன்னி யுத்தம் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என்றும் தெரிவித்தார்.
யோகு அருணகிரி, இந்நூல் அனைத்து தவறுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களைச் சுட்டுக்கொன்றார்கள், மனிதக் கேடயங்களாக மக்களைப் பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட விடயங்கள் என்றும் தெரவித்தார். இந்நூல் புதிதாக எதனையும் வெளிப்படுத்தவில்லை, இது புலி எதிர்ப்பையே முன்வைக்கின்றது என்றும் யோகு அருணகிரி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டார். இந்நூலின் தலைப்பிற்கும் உள்ளடககத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்ட யோகு அருணகிரி, புலிகளை எதிர்த்தவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு என்ன செய்கிறார்கள்? என்றும் யுத்தம் முடிந்து எழு வருடங்களாகியும் என்ன செய்தனர்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக தனது நீண்ட விமர்சனத்தை முன்வைத்த சுதன் ராஜ் நூலாசிரியரது நிலைப்பாட்டுடன் நேரெதிரான அரசியல் நிலைப்பாட்டை தான் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நூல் பொது நன்மைகருதி எழுதப்படவில்லை, தேசியத் தலைவரது நல்லுணர்வுகளை கொச்சைப்படுத்தி உள்ளது, இன்று எங்களையும் துரோகிககள் என்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையே இன்று இல்லை ஆனால் இன்னும் சுயவிமர்சனம் செய் சுயவிமர்சனம் செய் என்கிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சகோதரப் படுகொலைகளுக்குப் பின்னால் இந்தியா செயற்பட்டது போன்றவற்றை நூலாசிரியர் கவனத்திற்கெடுக்கவில்லை, சர்வதேச மன்னிப்புச்சபை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு என்பனவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஆதாரமாக நூலாசிரியர் வைக்கிறார் ஆனால் அந்த அமைப்புகளுக்குப் பின்னுள்ள சர்வதேச அரசுகளின் பின்னணி பற்றியும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டிய சுதன் ராஜ், இவர்கள் ஜனநாயகத்தை கோருவதே புலியெதிர்ப்பைச் செய்வதற்கே என்றும் குற்றம்சாட்டினார். தனது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து இந்நூல் பற்றிய கடுமையான விமர்சனங்களை சுதன் ராஜ் முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் த ஜெயபாலன் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஊடகவியலாளனாக இந்நூல் காத்திரமான பதிவை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அராஜகங்களை மறைப்பது முழுப் பூசனிக்காயை சோற்றினுள் மறைக்கும் முயற்சி என்றார். படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதன் அடிப்படையிலேயே இந்நூலின் கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த த ஜெயபாலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச தீர்வைக்கூடப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் வே பிரபாகரனுடைய முட்டாள்தனமான அரசியலே இத்தனையாயிரம் மக்கள் கொல்லப்பட்ட வழிவகுத்தது என்றும் தெரிவித்தார்.
எதிரியான இலங்கை அரசிலும் பார்க்க தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு அதிகம் என்று தெரிவித்த த ஜெயபாலன் சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தான் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த முடியும் என்றும் உங்களுக்கு விருப்பமான போது அந்த அமைப்புகளை ஏற்றுக்கொள்வதும் வேண்டாத போது நிராகரிப்பதும் சரியான அணுகுமுறையாகாது என்றும் சுட்டிக்காட்டினர்.
வட்டுக்கோட்டை தமிழீழப் பிரகடனமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளியாகவும், முள்ளிவாய்க்கால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் – ஆயுதப் போராட்டத்தின் இறுதிப் புள்ளியாகவும் வைத்து இந்நூலுக்கு தலைப்பிடப்பட்டதாகத் தெரிவித்த த ஜெயபாலன் அது மிகப்பொருத்தமான தலைப்பே எனத் தெரிவித்தார். சகோதரப் படுகொலைகளுக்கும் தங்களது ஏனைய தவறான அரசியல் அணுகுமுறைகளுக்கும் இந்திய என்றும் மற்றையவர்கள் து}ண்டுதல் என்பதும் வெறும் தப்பித்தல் அரசியல் என்றும் த ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.
த ஜெயபாலன் நூல் மீது வைக்கப்பட்ட ஒவ்வொரு விமர்சனத்திற்கும் தனது ஏற்புரையில் தெளிவான பதிலை முன்வைத்து நூலின் எழுத்துக்களுடன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
நூல்வெளியீட்டைத் தொடர்ந்து இலங்கைத் தேசிய இனப்பிரச்சினையும் அதனை நோக்கிய தீர்வுகளும் என்ற தலைப்பில் வி சிவலிங்கம் உரையாற்றினர். அவரைத் தொடர்ந்து தமிழ் முஸ்லீம் இனத்துவ உறவுகளும் அது எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் எம் பெளசர் உரையாற்றினார். அவ்வுரைகளைத் தொடர்ந்து அது பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பன்முகப்பட்ட அரசியல், இலக்கியத் தளஙகளில் இருந்தும் 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். லண்டனில் யூலை 23 இலும் கிளிநொச்சியில் ஓகஸ்ட் 14 இலும் நடைபெற்ற இந்நூல் வெளியீடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தியலை ஆதரித்தவர்கள் விமர்சனங்களை வைத்த போதும் முற்றுமுழுதாக அக்கருத்தியலை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. லண்டனில் ஒரு பேப்பர் பத்திரிகையின் ஆசிரயர் கோபி ரட்ணம் கிளிநொச்சியில் பொன் காந்தன் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப புலிகளின் கருத்தியலை ஆதரிப்பவர்களாக இருந்தனர்.
மாறாக பாரிஸ் நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தியலை ஏற்றுக்கொண்டு அந்த அரசியல் தளத்தில் நிற்பவர்கள் தங்கள் விமர்சனத்தை வைத்திருந்தமை நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்தது. மேலும் முற்றிலும் நேர்எதிர் அரசியல் நிலைகளில் இருந்து நூல் விமர்சனமும் அதற்கான பதிலுரையும் அமைந்திருந்ததால் நிகழ்வு விறுவிறுப்பாகவும் இருந்தது.
பரிஸ் லாச்சப்பல் எப்போதும் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் ஜனநாயகக் கலந்துரையாடலுக்கும் ஆபத்தான இடமாக இருந்த போதும் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ நூல் ஆய்வு முற்றிலும் முரண்பட்ட இரு அரசியல் கருத்துநிலைகளின் விவாதமாக விறுவிறுப்பாக ஆனால் முற்றிலும் அமைதியாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தேசம் இணையம்