“எங்க போகுது எங்கட நாடு” யாழ் மதீசனின் “அதிர்ச்சி” தந்த பாட்டு

Matheesan
துறை தேர்ந்த இசைக் கலைஞர் காட்டாறு மாதிரி அவர், தான் கற்ற வித்தையின் அடியாழம் வரை சென்று சேரும் துடிப்போடு இயங்குபவர்.
ஒரு நல்ல இசை இயக்குநருக்கோ தன்னுடைய இசைத் திறனைத் தாண்டிய தகமை தேவையாய் இருக்கிறது. தான் எடுத்துக் கொண்ட படைப்பைச் சனங்களிடம் கொடுக்கும் போது அதை எந்த நிறத்தில் கொடுக்க வேண்டும், அதன் உள்ளடக்கத்தின் சாரம் எப்படித் தான் எடுத்துக் கொண்ட கருவுக்கு நியாயம் விளைவிக்கும் வண்ணம் அமைய வேண்டும் போன்ற அடிப்படைகளில் கவனம் செலுத்தினாலேயே ஒரு படைப்பின் வெற்றியின் பாதி இலக்கு முன் கூட்டியே நிர்ணயமாகி விடுகிறது. அந்த வகையில் யாழ்ப்பாண மண்ணின் மைந்தன், சகோதரன் மதீசன் திறன் படைத்த இசை இயக்குநருக்குரிய இலட்சணங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் “அதிர்ச்சி” என்ற தனிப்பாடலைக் கேட்ட போது உணர்ந்தேன்.

போருக்குப் பின்னான ஈழ சமூகத்தில் நிகழும் கலாசார மாற்றம் என்பது கலாசார அதிர்ச்சியாகவே வெளி உலகத்தாரால் நோக்கப்படுகிறது. ஆனால் அங்கு நிகழும் பண்பாட்டு மாற்றத்தில் நல்லது எது தீயது எது என்ற விசாரங்களைத் தாண்டி மேம்போக்காக் கல்லெறியும் சமூகத்தை நோக்கி நீட்டிப் பிடிக்கும் பூமராங் தான் இந்த “அதிர்ச்சி” பாடலின் உட்பொருள்.
பூமராங் என்ற பதத்தை நான் இங்கே உபயோகப்படுத்தியதன் காரணம் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற நோக்கில், இந்தப் பாடல் வழி நெடுக எடுத்துக் காட்டும் சமூகப் பிறழ்வுகளோடு ஈற்றில் தன் சமூகத்தில் நடக்கும் நல்லதையும் சீர்தூக்கிப் பார், அங்குமிங்கும் நடக்கும் சமூகச் சீர்கேட்டை ஒட்டு மொத்த மக்களின் வாழ்வியலின் அறுவடையாகக் பார்க்காதே என்ற தன் வழி நியாயத்தோடு எறிந்ததையே திரும்ப வாங்கும் உத்தி கையாளப்படுகிறது. அதனால் இந்த “அதிர்ச்சி” பாடல் பிரசாரக் கூக்குரல் என்ற அந்தஸ்தை இழந்து விட்ட சிறப்பைப் பெறுகிறது.

இசையமைப்பாளர் மதீசன் தானே எழுதித் தயாரித்து இசையமைத்ததோடு அங்குசனுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடலின் குரல் பங்காளிகள் யார் என்றே அறியாமல் தான் கேட்டேன் முதலில். மூன்று விதமான குரல் வடிவங்கள். ஒன்று கட்டியக்காரன் போலவும் இன்னுமிரண்டு குரல்கள் விமர்சன ரீதியாகப் பேசவும் பயன்படும் பாங்கில் இயங்கியிருக்க, நானோ மூன்று பேர் பாடியிருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இருவரும் வெகு கச்சிதமாக அந்த மூன்று வடிவங்களிலும் துணை போயிருப்பது வெகு சிறப்பு.
மதீசனின் தேவை உணர்ந்து இயங்கியிருக்கும் அங்குசனுக்கும் விசேடமான பாராட்டுகள்.
அந்த வகையில் பாடலைத் தூக்கி நிறுத்துகிறது குரல் தேர்வு.
வரிகளோடு இழையும் மதீசனின் இசையமைப்பைப் பற்றித் தனியாக என்ன சொல்ல வேண்டும்? முதல் பந்தியில் சொன்னது போல இந்தப் படைப்புக்கு எந்த விதமான இசையுணர்வைப் பிரதிபலிக்க வேண்டுமோ அதைத் தான் செய்திருக்கிறார்.
தேவையான அளவு பாடல் வரிகள், யாழ்ப்பாணத்து மொழியாடல் இவை வெகு சிறப்பு.

எனக்குக் குறையாகப் பட்டது பாடலின் தலைப்பு “அதிர்ச்சி”. இது மொட்டையாக அமைந்திருக்கிறது. பாடலில் பயன்படுத்தப்பட்ட பேச்சு வழக்கின் ஒரு நீண்ட சொற் தொடரைத் தலைப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
உதாரணமாக “எங்கை போகுது எங்கட நாடு” என்ற வரிகளே நிறைவாக இருந்திருக்கும்.
“அதிர்ச்சி” என்ற தலைப்பைப் பார்த்தே எனக்கு எதுக்கு வீண் வம்பு என்று ஒதுங்கிப் போக நாம் ஏதுவாக இருக்கக் கூடாதல்லவா?
அத்தோடு இந்தப் பாடல் காணொளி வடிவம் பெறுவதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது இசைக் கோப்பு.

ஈழத்துச் சமூகத்தின் இன்றைய வாழ்வியலை ஒரு சில சீர்கேடுகளை வைத்துச் சாயம் பூசக் கூடாது என்று எழுந்த இம்மாதிரியான படைப்புகள் தான் அங்கு நல்ல சிந்தனையும், தெளிவும், ஆற்றலும் மிக்க இளைய சமுதாயம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் பிரதிபலிப்பு.

மதீசனுக்கு வாழ்த்துகள்
பாடலைக் கேளுங்கள் பகிருங்கள்
நன்றி..கானா பிரபா

http://beta.doopaadoo.com/…/ta/athirchi-video/lyric-video

Copyright © 4351 Mukadu · All rights reserved · designed by Speed IT net