கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

f26111_11543
கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது.

பிடல் காஸ்ட்ரோ பற்றி ‘தி இந்து’ நாளிதழில் ஜி.எஸ்.எஸ். எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள் இங்கே:

யாருக்கும் இல்லாத ஒரு பெருமை பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர்.

1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.

படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில்தான். படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.

அரசியலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாராம். பிறருடன் எளிதில் பழகமாட்டார். ஆனால் இந்தக் கூச்சமெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.

1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.

பிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria என்பதாகும். இந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ மீது சரியாகவோ தவறாகவோ சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்பது. பரவலாகப் பேசப்பட்டா லும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.

கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை.

என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.

ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினி கன் குடியரசை ஆண்டு வந்தார் (மேற் கிந்தியத் தீவுகளில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது). இவரது அரசின் அடக்கு முறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் காஸ்ட்ரோ.

இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். (இப்போதெல்லாம் பணியிலிருந்து சிறிது காலம் விலகி மீண்டும் அதில் சேரும் sabbatical என்ற வசதி சில நிறுவனங்களில் இருப்பதுபோல் அப்போது ஹவானா பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்க வேண்டும்!)

ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று `இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.

அப்போது பிடல் காஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார். அந்தப் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் என்பதும் இந்தத் தகவல் பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதற்கு அடுத்த ஆண்டு பிடல் காஸ்ட்ரோ பலவித செயல்களில் ஈடுபட்டார். அந்தச் செயல்களைப் புரட்சி என்று கூறி சிலிர்ப்பதோ, வன்முறை என்று கூறி வெறுப்பதோ அவரவர் பார்வையைப் பொறுத்தது.

கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜார்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது. அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் பிடல் காஸ்ட்ரோ. தெருக்களில் வீடுவீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.

கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூபா மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர். பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் காஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார்!

பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.

கியூபாவில் அப்போது ஆர்டொடாக்ஸோ கட்சி என்ற ஒன்று இருந்தது. நாட்டிற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்றது அந்தக் கட்சி. சமூக நீதியை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்பது தன் தலையாய பணி என்றது. பிடல் காஸ்ட்ரோ இந்தக் கட்சியின் சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டார்.

*

அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்).

அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவரை அழிக்க அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்ததாகக் கூறுவார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக்கூட ஒரு முயற்சி நடந்ததாகக் கூறுவார்கள். ஆனால் பலிக்கவில்லை.

Copyright © 4298 Mukadu · All rights reserved · designed by Speed IT net