திடுமென கொடுக்கப்படும் சுதந்திரம் சர்வாதிகாரத்தின் தந்திரம்..கார்வண்ணா

20161202_235411பூமிப்பந்தில் தோற்றம் பெற்ற உயிரினங்களுள் பகுத்துணரும் தன்மை, சிந்திக்கும் ஆற்றல், பேசும் திறன் என்பவைகளை கொண்டு விளங்குவதால் மனித இனம் பூமிப்பந்தில் முதன்மை மிக்க இனமாக விளங்குகிறது. தனது ஆற்றல்,ஆளுமைகளால் பிற உயிரினங்களை தன் கட்டுக்குள் கொண்டுவந்த மனிதன் தனக்குள்ளேயும் ஒருவர்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தவும் கட்டுப்படுத்தவும் தலைப்பட்டான்.இவ்வாதிக்க மனோநிலையானது தனிமனிதன்,சமூகம்,இனம்,நாடுகளென விரிவாக்கம் பெற்றது.உடற்பலம், ஆயுதபலம் மூலம் பிறரை நேரடியாக கட்டுப்படுத்தி சர்வாதிகாரம் செய்த மனிதன் அச் சர்வதிகாரத்திற்கெதிராக அடக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தபோது சர்வாதிகார பீடங்கள் ஆட்டம் காணத் தொடங்கின. ஆட்பலம்,ஆயுதபலத்தை மட்டுமே கொண்டு நேரடியாக சர்வாதிகரம் செலுத்தமுடியாதென உணர்ந்த பின்னர் நவீன உலகில் சர்வாதிகாரமானது அரசியல்,பொருளாதாரம் என பற்பல வடிவங்களில் பல்வேறு நிலைகளிலும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

1950 களில் நுழைந்த நுகர்வு கலாச்சாரமும், 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமயமாக்கலும் தேசங்களின் எல்லைகளை மட்டுமல்லாது மக்களின் கலை,கலாச்சாரம்,பண்பாடு என்பவைகளையும் தகர்த்தெறிந்து பொருளாதாரம் என்ற நேர்கோட்டில் உலகமக்கள் அனைவரையும் இணைத்தது.இதனால் மக்கள் தமது தொன்மை,பாரம்பரியம் என்பவைகளை இழந்து புதியதோர் உலகிற்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

90 களின் உலகமயமாக்கலானது உலகை மிகச்சுருக்கி திறந்த சந்தைப்பொருளாதாரத்தை ஏற்படுத்தியதுடன் பல்தேசிய நிறுவனங்களை அசுர வளர்ச்சியடையச்செய்து மக்களையும் ஆட்சியாளர்களையும் தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப இயங்குபவர்களாக மாற்றின.இதன்மூலம் பல்தேசிய நிறுவனங்களின் மறைமுகமான சர்வாதிகாரம் நாடுகளின் அரசுகள் மேலும் மக்கள் மீதும் பிரயோகிக்கப் பட்டது , இதன் விளைவாக நாடுகளில் தமக்குச்சார்பான அரசுகளை இவர்களே உருவாக்குமளவிற்கு சக்தி பெற்றவர்களாகினர்.

அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமக்களை ஒருவரோடொருவர் நெருக்கமாக்கியதுடன் தகவல் பரிமாற்றங்கள் மிகத்துரிதமாக நிகழக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.இத்தகைய வளர்ச்சி நிலைகள் மூலம் அதிகார வர்க்கத்தினர் மக்களை மறைமுகமாய் கட்டுப்படுத்தி அவர்களை கண்காணிக்கத் தலைப்பட்டது மட்டுமன்றி,மக்களிடையே காணப்பட்ட சுதந்திரவெளியில், தனிமனிதசுதந்திரம்பெண்ணியம் ,தாராளவாதம்சமூகம்,கருத்துருவாக்கம், போன்ற நிலைகளில் தம் கருத்துகளையும், முடிவுகளையும் மெல்லமெல்லமாய் ஊடுருவ விட்டு மக்களை ஒரு தளம்பல்நிலைக்குள் தள்ளித் தீர்மானங்களை எடுக்க முடியாதவர்களாக குழப்பங்கள் நிறைந்தவர்களாக மாற்றிவிடுகின்றனர்.

அரசியல் விடுதலை வேண்டிப் போராடும் சமூகங்கள் மீது ஒடுக்கு முறையாளர்கள் என்றென்றும் சகலமட்டங்களிலும் பாரிய ஒடுக்குமுறையினையே மேற்கொண்டு வருகின்றனர் .நீண்டகால ஒடுக்குமுறையின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு சமூகம் தளர்வுநிலையெய்தும் பொழுதில் அச்சமூகத்திலிருந்து தமக்கு இயைந்து நடக்கக் கூடியவர்களை தேர்ந்தெடுத்து அவர்களினூடாக தமது கருத்துக்களை முற்போக்கான, சமத்துவமான எண்ணக்கருக்கள் போல் ஒடுக்கப்படும் சமூகத்தினுள் மெல்லமெல்ல திணிக்க முற்படுவர்.இவ்வூடுகாவிகளும் இக்கருத்துக்களை தம் கருத்துகள் போலவும் நீண்டகாலமாக நீடித்து வரும் சிக்கல்களுக்கு நிலையானதோர் முடிவைப் பெற்றுத்தரும் தீர்வாகவும் மக்கள் மத்தியில் விதைக்க முயல்வர்.
15310515_1365628986782878_364872946_n
ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்படும் மக்களின் கருத்துக்களை கேட்க விரும்புவது போலவும் நீடித்துச் செல்லும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை வழங்கத் தயார் போலவும் காண்பித்துக்கொண்டு இயல்புநிலையை அம்மக்களுக்கு வழங்குவதாக கூறி இதுவரை காலமும் அம்மக்களுக்கு வழங்க மறுத்திருந்த,இலகுவில் மக்களை ஈர்த்துக் கொள்ளக்கூடிய சில வழிகளை திடீரெனத் திறந்துவிடுவர், மறுமுனையில் திறந்துவிடப்பட்ட இவ்வழிகளினூடாகவே அம்மக்களின் இருப்பு, பண்பாடு,கலாச்சாரம், எண்ணம்,சிந்தனைப் போக்குகளை இல்லாதொழிக்கும் காரணிகளையும் ஊடுருவவிடுவர். ஊடுருவும் பெரும்பாலானவை, பொருளாதாரம்,நாகரீகம்,சமூகச் சீரழிவு சார்ந்தவையாகவே இருக்கும்.

இவற்றை நாம் நோக்குவோமெனில்,

இலங்கைத்தீவில் கடந்த ஆறு தசாப்தங்களாக சுயநிர்ணய உரிமைகளுக்காக அரசியல்,இராணுவ வழிகளில் போராடி வரும் தமிழீழ மக்களின் ஆயுதப் போராட்டமானது 2009 ல் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தி,மக்களின் வாழ்க்கைத்தரம் என்பவைகளை உயர்த்துவதாக கூறி ஓர் திறந்த பொருளாதாரச் சந்தையை ஏற்படுத்தி அங்கு வங்கிகள்,நிதி நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள் என மக்களுக்கு பல சலுகைகளை காட்டி அவர்களின் ஆசையைத் தூண்டி வகைதொகையின்றி கடன்களையும்,உயர் வட்டியில் கடனடிப்படையிலான பொருட்கள் கொள்முதல்முறைகளையும்(லீசிங்) அறிமுகப்படுத்தி மக்களை கடனாளிகளாக்கி அதற்குள்ளேயே அவர்களை முடக்க முனைகின்றனர். வங்கியில் இருந்து பெற்ற கடனில் ஒரு தொழிலை ஆரம்பித்தாலும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாரிய நிறுவனங்கள்,தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவரும் வியாபாரிகள் முன் இவர்களால் எதிர்கொண்டு நிற்க முடியாமல் நட்டமடைகின்றனர்இதன்மூலம் விரக்திநிலையடைந்து வாழ்வினை முடித்துக் கொள்ளும் நிலைவரையும் பலர் செல்கின்றனர். மிக அண்மையில் வவுனியாவில் ஒரு பெண் மாதாந்த தவணை அடிப்படையில் பொருட்கள் கொள்முதல்செய்த கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

அவ்வாறே நிதி நிறுவனங்கள்,வங்கிகள் என்பனவும் தாம் கடன் கொடுத்த பயனாளிகள் கடன்களை மீளச் செலுத்துவதில் சிறிது தாமதமானால்கூட அவர்கள் மேல் வன்முறைசார்ந்த வழிமுறைகளை பிரயோகிக்கின்றனர்.இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் மென்மேலும் அதிகரிக்கலாம்.

அவ்வாறே நாகரீகம்,முன்னேற்றம் என்ற பெயரில் புதுப்புதுக் கலாச்சாரங்கள், நடையுடை பாவனைகள்,பழக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள்,விழாக்கள் என்பன அறிமுகம் செய்யப்பட்டு அவற்றிற்கு மக்களை அடிமையாகி அவைகளின் பின்னே அவர்களை அறியாமல் இழுத்துச் செல்ல முற்படுகின்றனர்.
இவ்வூடுருவல்கள் பெரும்பாலும் அடக்கப்படும் சமூகத்திலுள்ள நடுத்தர, கீழ்மட்ட,மற்றும் இளந்தலைமுறை நிலையினரை நோக்கியதாகவே இருக்கும்.மேலும் இவை வர்க்கங்களிடையே பொருளாதார சமச் சீரின்மையை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

சமூகத்தின் இளந்தலைமுறையினரான மாணவர்கள்,இளைஞர்களுக்கு மது,போதைப்பொருள்,விபச்சாரம் போன்ற சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் மீது தணியாத வேட்கையை உண்டாக்கி,அவற்றை அவர்கள் தாராளமாக பற்றுக் கொள்ளக்கூடியதான வழிவகைகளை திட்டமிட்டு உருவாக்கிய முகவர்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுத்து வேறெதனையும் சிந்திக்காத ஒரு சமூகப் பிரக்ஞையற்ற உளப்பாங்கை அவர்களுள் ஏற்படுத்தி வருகின்றனர்.இவ்வாறான இளந்தலைமுறையினர் சமூகநெறி ஒழுங்கு சார்ந்த கட்டமைப்புக்களிலிருந்து விலகி கொலை,கொள்ளை போன்ற விரோதச் செயல்களில் நாட்டம் கொள்கின்றனர்.

திடீரென ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான அதிமீறிய கட்டுப்பாடற்ற சுதந்திர நிலையால் நீண்டகாலம் ஒடுக்குமுறையை மட்டுமே சந்தித்து வாழ்ந்து வந்த சமூகம் அதனை சரிவர எதிர்கொள்ள முடியாது திணறித் தடுமாறி இதுவரை தான் கட்டிக் காத்து வந்த பாரம்பரியம்,விழுமியங்களைத் தொலைத்தும், தனக்குள் தானே முரண்பட்டும் எதிர்த்தும்,தனிமனித வாழ்வியலிலிருந்து சமூகம் என்ற கட்டமைப்பு வரை அத்தனையையும் தொலைப்பது மட்டுமல்லாது தனக்கான அரசியல்,விடுதலைப் பாதையிலிருந்தும் வழிதவறி ஒடுக்குமுறையாளன் தெரிவுசெய்து விட்டிருந்த பாதைக்குள்ளே தன்னை அறியாது பயணித்து மெல்ல மெல்ல தன் இருப்பை இழந்து அடையாளமற்றதாகி. அடக்குமுறையாளர்களின் எதிர்பார்ப்பு போலவே தானாகவே தணிந்து அணைந்து விடும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net