எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1
யாராவது ஒரு படைப்பை வெளியிட்டு அது தனிப்பட என் கரம் சேர்ந்தாலன்றி இது வரை ஒருவரை குறிப்பிட்டு, அவதானத்தில் வைத்து அவர்கள் பற்றிய பதிவொன்றை நான் பதிவிட்டதில்லை . அப்படிப் பதிவிடத் தூண்டிய முதற் பதிவிது.
.
அவரவர் பார்வையில் பலர் பேனாக்கரங்கள் பற்றிய தங்கள் கணிப்பீடுகளைப் பதிவிட்டிருக்கிறார்கள். அதில் பிரபலங்கள் எனக் குறிக்கப்பட்ட பலபெயர்கள் என் பார்வையைக் கூடக் கவர்ந்ததில்லை. அது என் பார்வை கோளாறாகவும் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால் நேரத்தை ஒதுக்கி ஆழ்ந்து வாசிக்கவேண்டிய பக்கங்களாக சிலர் பக்கங்களைக் கணித்துவைத்து ஓய்வு நாளுக்குக் காத்திருந்து வாசிக்கும் வழக்கம் எனக்குண்டு, அதில் அனேகமாக என்னை விட வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தேரே அதிகம். அவர்களுக்குள் வருடங்களாக மிக இளம் படைப்பாளிகள் சிலரும் உள்ளடக்கம். அவர்களுள் முதலில் ஈர்த்தவர் பற்றிய பதிவே இது.
.
பெயர் அவர் முகநூலில் குறிப்பிட்டது தான் அறிவேன்
முகம் முகநூலில் கண்ட முகம் தான்
ஊர் மேலும் அவர்பற்றிய எந்த விடயங்களும் தெரியாத போதும் எழுத்துக்களால் மெது மெதுவாக தன் மீதான கவனயீர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே, முகநூலில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளர்ந்து கொண்டிருந்த அந்தத் திறமைக்குள் கவிதை , கதை என்று எல்லாமே அடக்கமாகி இருந்தது. இரண்டுக்குள்ளும் கடந்து முடிந்த போரும் கண்ணீரும் செந்நீரும் அவைகளைத் தாண்டிய ஆத்மா உருகிவடித்த உயிர் வலியும் தாராளமாகப் பதிவாகியிருந்தன.
.
களமுனைக் காவியங்களை பலரும் புனைந்து கொண்டிருக்க, அதற்கு அப்பால் வந்து பொது மக்களின் சின்னச்சின்ன உணர்வுகளையும், சின்னச்சின்னக் குழந்தைகளின் பெரிய பெரிய வலிகளையும் மிக இயல்பாக கண்முன்னே நடக்கும் பாவனையில், அந்தந்தக் கதாபாத்திரங்களாக மாறிப் பேசிக்கொண்டிருந்த எழுத்து வடிவம் இவருடையது.
.
அவரது எழுத்துக்கள் பேசிய மொழியில் போர் தாண்டிய சாதாரண மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், அவற்றை அவர் பதிவு செய்த விதம், சம்பவங்களுக்கும் மனிதர்களுக்கும் ஏற்ப அவர் கையாண்ட சொற்பிரயோகங்கள், குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டு அவ்வளவே உலகம் என்று கூறிக் கொண்டிருக்கும் பலர் மத்தியில் அவரது பரந்த பன்மொழி வாசிப்பை அதன் மூலமான மொழிவிருத்தி, கணிப்பீடுகளின் விரிந்த பார்வைகள் என்பவற்றை எப்போதும் பறைசாற்றிக் கொண்டு மேலுமான வளர்ச்சியின் நம்பிக்கைப் பாதைகளை தன் முனையில் கொண்டிருக்கிறது அவரது பேனா.
.
முகநூல் மூலம் வாசிக்க முடிந்த அவரது எழுத்து வடிவங்களை மட்டும் கொண்டு கணிக்கப்பட்டதே எனது இப்பதிவு எனினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தெரியும், அப்படித் தன் சொற்ப எழுத்து வடிவங்களால் திரும்பிப் பார்க்க வைத்து, வளர்ந்து செல் என இப் புதிய வருடத்தில் இதயபூர்வமாக வாழ்த்தி எழுதத் தோன்றிய இந்தப் பதிவுக்கு உடமையானவர் ‘ஆதி பார்த்தீபன் ‘
**************
மாலினி