பண்பாட்டு விழாவாக கட்டமைக்கப்பட்டிருந்த பாரீஸ் பொங்கல் விழா – பேராசிரியர் சி.மௌனகுரு


புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றது. சமய விழாவாக அன்றி ஒரு பண்பாட்டு விழாவாக, ஒரு கருத்தியலின் பின்னணியில் பாரீஸ் பொங்கல் விழா கட்டமைக்கப் பட்டிருந்ததாக இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்த பேராசிரியரும் அரங்கியல் ஆய்வாளரும் நெறியாளருமான சி.மௌனகுரு அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த அவரது அவதானிப்புகளிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்தினை இங்கே தருகிறோம்:

பாரீசி ல் உள்ள சிலம்பு அமைப்பினர் அண்மையில் (14.10.17) பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். என்னை பிரதம விருந்தினருள் ஒருவராக அழைத்திருந்தனர். மற்றைய விருந்தினர் தமிழ் நாட்டின் திறன் மிகுஓவியரான ரொட்ஸ்கி மருது. கடும் குளிரின் மத்தியில் வெளிநிகழ்வுகள் வெளியே அழகாகப் போடப் பட்டிருந்த கோலம், பொங்கலுக்கான தோரண அலங்காரங்கள், வெளியே அடுப்பு மூட்டி விறகு வைத்து அழைக்கப்பட்டிருந்த தமிழர்களும், தமிழரல்லோதோரும் நெருப்புமூட்டி, பாலைப் பொங்க வைத்தமை – தமிழரல்லாத பரிஸின் முக்கிய பிரமுகர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டமை என அன்றைய பொங்கல் காட்சியினை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழரல்லாதவர்களுக்கும் தமிழர்களுக்கும் “தீதும் நன்றும் பிறர்தரவாரா” என்று அச்சிட்ட போர்வையும் பனம் பூவினால் அமைந்தது போன்ற மாலையும் அணிந்து வரவேற்றமை

அவர்கள் அவற்றை களற்ற மனமில்லாமல் முழு நாளும் அவற்றோடு அமர்ந்திருந்த அழகு!

பறை ஒலியும், பாடல்களும், கும்மியும் எனப் பால் பொங்கும் வரை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக வெளியே நடைபெற்ற அமர்க்களம் மகிழ்ச்சி பொங்கும் முகங்கள், ஓடிஆடித் திரிந்த குழந்தைகள், பாரம்பரிய உணவுக் கண்காட்சிகள், பாரம்பரியக் கலைப் பொருட் கண்காட்சிகள், ஓவியக் கண்காட்சிகள் என பொங்கல் விழா வடிவமைக்கப்பட்டிருந்தது.

இன்னிய வாத்தியங்களான பறை கொம்பு முழங்க, கரகாட்டம், காவடி ஆட்டத்துடன் மண்டபத்துள் கொண்டு வரப்பட்டபொங்கல் பானை,

படையலின்றி நடந்த பொங்கல் பகிர்வு, தொடர்ந்து நடைபெற்ற கலாசார நிகழ்வுகள் என ஒரு வித்தியாசமான பொங்கல் விழாவைக் காணமுடிந்தது

ஒரே கொண்டாட்டம் தான். அது ஒரு கலாசாரக் கொண்டாட்டம்!!

புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றன

இவ்வருடம் பரீஸ் சிலம்பு அமைப்பினர் நடத்திய பொங்கல் விழாவில் எனைக் கவர்ந்த சில அம்சங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

1. சமய விழாவாக அன்றி அதனை ஒரு கலாசார விழாவாக அவர்கள் கட்டமைத்துக் கொண்டாடியமை

தமிழர் மாத்திரமன்றிப் பிரான்ஸிய மக்களும், பிரான்ஸ் வாழ் ஏனைய இனத்தவர்கள் சிலரும் கலந்து கொண்டு மகிழ்ந்தமை,பாராட்டுக்களைத் தெரிவித்தமை
3. தமிழர் பாவித்த பண்டைய அரும் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை

4. தமிழரின் பாரம்பரிய உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைத்திருந்தமையுடன் அதனை வந்திருந்தோருக்கும் அளித்தமை

தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் ஓவியர் மருதுவின் ஓவியக் கண்காட்சி, விசேடமாக ஜல்லிக்கட்டு காட்சி இடம் பெற்றமை
தமிழரின் பண்டைய வாத்தியமான பறைமேள ஒலியுடன் பொங்கல் பொங்கியமை
பொங்கல் பானைக்குள் வந்திருந்தோர் அனைவரும் ஒவ்வொரு பிடி அரிசி இடும் வகையில் அரிசி போடலை ஒழுங்கு செய்திருந்தமை
பொங்கல் பானையை கரகாட்டம், காவடியாட்டம் ,பறைமேள முழக்கம் என்ற இன்னியஅணியுடன் மேடைக்குக் கொணர்ந்தமை
9. பொங்கலைப் படைக்காமல் அனைவர்க்கும் பகிர்ந்தமை. படையல் அங்கு வந்த மக்களுக்கே

10. மதிய உணவாக வெண் பொங்கலும், அதிருசிமிக்க சாம்பாரும் வழங்கியமை

11. நோர்வேயிலிருந்து தனது நாட்டியக் குழுவினருடன் வந்து ஆற்றுகை செய்த கவிதாலக்சுமியின் மாணவிகளின் ஆற்றுகைகள் வழமையான பரத உருப்படிகளிலிருந்து மாறுபட்டிருந்தமை (கவிதாலக்சுமிபற்றித் தனியாக எழுத வேண்டும்)

12. பழம் பெரும் நாடக நடிகரான ரகுனாதன் நடக்க முடியாத நிலையிலும் சக்கரம் பூட்டிய தள்ளுவண்டியில் இருந்தவண்ணம் நாடகம் நடித்தமை

13. அரங்கேறிய சிறார்களின் துடிப்பான ஆற்றுகைகள். முக்கியமாக நரிக்கு நடித்த அந்தச் சிறுமியின் அபார நடிப்பு

பொங்கல் நாளை குழந்தைகளின் வித்தியாரம்ப ( எழுத்துஆரம்ப) நாளாக்கி பங்குகொண்ட என்னிடமும் நண்பர் மருதுவிடமும் வித்தியாரம்பம் பண்ணும் பொறுப்புகளை ஒப்படைத்தமை (நம் நாட்டில் வித்தியாரம்ப நாள் சரஸ்வதி பூசையன்று தான் இடம் பெறுவது வழமை)
15. வெற்றி பெற்றோர்க்கு பரிசுப் பொருளாக வள்ளுவர் சிலைகளை வழங்கியமை

16. பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட எனக்கும் மருதுவுக்கும் தமிழர் சிற்பக் கலையின் குறியீடுகளில் ஒன்றான மரத்தில் செதுக்கப்பட்ட யாளி வழங்கியமை

பொதுவாகச் சொன்னால் மிகத் திட்டமிட்டு ஒரு கருத்தியலின் பின்னணியில் இவ்விழா அமைக்கப் பட்டிருந்தது. இவ்விழா ஆண்டுதோறும் இவ்வண்ணம் கொண்டாடப் படுவதாக அறிந்தேன். பிரான்ஸில் திக்காலுக்குத் திக்கால் தமிழ் மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறையினர் தமிழைபேச முடியாத நிலைக்கும், தமிழர் பண்பாட்டை மறக்கும் நிலைக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள். அது அவர்களது பிழையுமன்று.

இந்நிலையில் அங்கு வாழும் பெற்றோரும் மற்றோரும் தம் அடையாளங்களைத் தம் குழந்தைகள் பேணும் வகையிலும் மறக்காது இருக்கும் வகையிலும் பலபல எத்தனங்களில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய ஆர்வலர் அங்கு வாழும்

பெரும் பணக்காரர்கள் அல்ல. சாதாரண தமிழ் மக்களே. கடும் குளிருக்குள்ளும், கஸ்டநிலையிலும் அவர்கள் தம்மையும் தம் தலைமுறையையும் தக்கவைத்துக் கொள்ளப் படும் பாடு எமக்கு அவர்கள் பால் ஓர் பெருவிருப்பையே ஏற்படுத்தியது.

இதன் பின்னணியாக இருந்து பலர் செயற்படுகிறார்கள். முகுந்தன் மூலவிசையாகச் செயற்படுகிறார். முகுந்தன் சிறந்த வாசகர். அவர் வீட்டில் ஒரு நூல் நிலையமேயுண்டு. அந்த நூல்களை மேலோட்டமாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இலக்கியம், சமூகவியல், மானிடவியல், தத்துவம், அரசியல், பொருளியல், சமயம் எனப் பல் தரப்பட்ட நூல்களை அங்கு நான் கண்டேன்.

தமது உழைப்பின் பெரும் பகுதியை அவர் நூல்கள் வாங்கச் செலவிடுவது புரிந்தது.

12 மணிநேரம் விமானப் பிரயாணம் செய்து 14 ஆம் திகதி காலை 8.00 மணிக்குப் பாரீஸ் விமான நிலையத்தில் இறங்கினேன்.

அப்படியே விழா நடைபெறும் மண்டபத்துக்கு அழைத்து சென்று சிரமபரிகாரம் செய்ய உதவினர். காலை 9.00 மணிக்கு ஆரம்பமான விழா இரவு 8.00 மணிக்குத்தான் முடிந்தது.

விழாவும் அதன் தன்மையும்,மக்களின் உற்சாகமும் உபசரிப்பும் எனக்கு எந்தவித களைப்பையோ, சோர்வையோ தரவில்லை. விழாவின் வெற்றி அது.

முகுந்தனுக்கும் விழாஅமைப்பிலீடுபட்ட அவரது நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நன்றி புதினபலகை

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net