மே18.வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம்.குணா கவியழகன்


மே18. வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம் .
ஈழத்தமிழ் மக்களின் வரலாற்று துயராக அமைந்த முள்ளிவாய்க்கால் நினைவை தமிழ் மக்கள் எவ்வாறு கால வழியில் எடுத்துச்செல்லப் போகிறோம். தமிழ் மக்களின் இருப்பு இலங்கைத்தீவில் தங்கள் வரலாற்றை பேணிக்கொள்வதில்தான் உறுதியடைய முடியும். சிங்களபௌத்த இனவாத அரசு தான் புரிந்த இனப்படுகொலை வரலாற்றை நினைவழிப்பு செய்யும் வஞ்சகத்தை நாசூக்காக நிறைவேற்றி வருகிறது. இந்த நினைவழிப்புக்கு எதிர் செயலை எவ்வாறு முன்வைக்கப் போகிறோம் என்பது எமது எதிர்கலதிற்கும் முக்கியமானது.

வைகாசி விசாகம் புத்தன் ஞானமடைந்ததன் பெயரால் இலங்கை தீவு முழுவதும் அரச ஆதரவோடு கொண்டாடப் படுகிறது. புத்தனின் போதனைகளுக்கு எதிரான செயல் கொண்டவர்கள் மதத்தையும் தமது வஞ்சக அரசியலுக்கு கருவியாக்க தவறியதில்லை. பௌத்தர்கள் வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரதேசங்களில் வைகாசி ‘வெசாக்’ பெரும் கோலாகலமாக முள்ளி வாய்க்காலின் பின் கொண்டாடப் படுவதை காணலாம். வீதியெங்கும் ஒளிகளால் வர்ணித்து இம்மாதத்தில் கொண்டாட்ட மனோபவத்தை விதைக்கும் அரசாங்கத்தின் செயலின் பின்னால் நாசகார நோக்கம் இருக்கிறது. அது முள்ளிவாய்கால் இனக்கருவறுப்பின் நினைவழிப்புக்கான நுண் திட்டத்தினுடைய மிகக் கூரான ஆயுதம். எங்கள் சந்ததியையே அக்காலத்தை கொண்டாட்ட மனோபாவத்திற்குள் தள்ளும் நச்சு செயல். வைகாசி என்பது எமக்கு ஒளியான மாதமல்ல. எமது தீரா துயரின் இருள் சூழ் மாதம். வைகாசி தமிழருக்கு விசாக மாதமல்ல அது நாச மாதம். இதனை நாம் எவ்வாறு முன்னிறுத்த போகிறோம் என்பது எமது அரசியலை மக்கள் எப்படி செப்பனிட விரும்புகிறார்கள் என்பதை அடுத்தவருக்கு அறிவிப்பதுமாகும். மேலும், தமிழ் அரசியல் தலைவர்களை மக்களின் விருப்புக்கு தலைமை ஏற்க வேண்டுமே தவிர மக்களின் நலனுக்கெதிரான சக்திகளுக்காக தரகு பார்பதல்ல தலைமைத்துவம் என்பதை இடித்துரைக்க வைப்பதுமாகும்.

நவம்பர் 27 மாவீரர் நாளாக ஒளியேந்தி எமக்காக உயிரை ஈகம் செய்தவர்க்கு மதிப்பளிக்கும் பண்பாட்டு நாளாக வடிமவமைத்துக் கொண்டோம். வராலாற்றின் சுவடுகளை காவும் நாளாக உருமாற்றிக் கொண்டோம். ஆனால் இனவழிப்பின் அடையாள நாளை நினவழிப்பு செய்யும் திட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?

அன்பினிய தமிழ்மக்களே ! நாமும் இந்த உலகில் மற்றயவர்கள் போல சுதந்திரம் கொண்ட சக மக்கள் சமூகமாக, எமது பண்பாட்டை பாதுகாத்து வளர்க்கவும் பரிமாறவும் விரும்பும் மக்களாக , எமது மொழியை பேச விரும்பும் மக்களாக , எமது பூர்வீக நிலத்தில் நாமே வாழ்வதில் பெருமையுள்ள மக்களாக , எமது பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏனைய உலக சமூகங்களின் பொருளாதரத்தில் பங்களிக்க விரும்பும் மக்களாக இருக்கக்கேட்டோம். ஆனால் அதற்கு மறுக்கப் பட்டோம் மேலும் சிதைக்கப்பட்டோம் .எம்மைக் காக்க போராடினோம். போர் கண்ணீரைத் தந்தது எங்கள் குருதியை விலையாய் கேட்டது எங்கள் உயிரை பலியாய் கேட்டது . கொடுத்தோம். எமக்கு வேறு வழியில்லை . வேறு தெரிவை விதிக்கப் பட்ட வாழ்வும் எமக்கு தரவில்லை . கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு , குருதி கொட்டி குருதி கொட்டி , ஊனமுற்று ஊனமுற்று ,உயிர் விதைத்து உயிர்விதைத்து போராடினோம் . பல பத்தாண்டுகளாய் போராடினோம். முன்னேறினோம் . புயலில் சுழன்றாலும் தீயில் வெந்தாலும் மீண்டும் நிமிர்ந்து மீண்டும் உயிர்த்து முன்னேறினோம். எம்மை நாமே காத்துக்கொள்ள சக்திகொண்டு முன்னேறினோம்.

எமது வலிமையை அநீதியும் அதர்மமும் வஞ்சகமும் கொண்டு சிங்கள தேசம் உலக சக்திகளுடன் கூடி அழித்தது. எமது நீதிக்குரல்கள் கேக்கதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்து கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களை பொத்திக் கொண்டது . அறத்தை பேச மறுத்து வாயை கட்டிக் கொண்டது. உலக நாடுகளின் நாடாளு மன்றங்கள் முன் தவாமாய் கிடந்தோம். எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை . நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப் படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மை கருவறுத்தது .

மே 18- தமிழினக் கருவறுப்பின் அடையாள நாள். குருதி கொட்டி விடுதலைக்கு காத்திருந்த காலப் பொழுதொன்று இருளிய நாள். இந்நாளை , இந்த நூற்றாண்டின் மனித நாகரிகத்தினது அவமான நாளாக உலகுக்கு உணர்த்துவோம். ஜனநாயக உலகு கொண்டுள்ள வஞ்சகத்தின் நாளாக உணர்த்துவோம். மனித அறத்தின் அழுக்கு நாளாக உணர்த்துவோம் . தர்மத்தின் நிந்தனை நாளாக உணர்த்துவோம். நீதியின் இழி நாளாக இந்நாளை உணர்த்துவோம்.

அதற்காக தமிழர் வாழும் இடமெங்கும் இரவு ஏழு மணியிலிருந்து -மேற்கு நாடுகளில் ஒன்பது முப்பதிலிருந்து பத்து நிமிடங்கள் எங்கள் மின் விளக்குகளை அணைத்து எங்கள் சூழலை சுற்றி இருளாக்குவோம். இறந்த உயிர்களை நினைவுகூர சிறு கைவிளக்கேற்றி அந்த சிற்றொளியில் நம் தேவைகளை நிறைவு செய்து கடப்போம். அரசியல் கட்சிகளற்ற மக்கள் இயக்கமாக இதனை நிறைவேற்றுவோம்.

இந்தநாளை, மனித நாகரிகத்தின் , நீதியின் , அறத்தின் , ஜனநாயகத்தின் , தர்மத்தின் கரிய நாளாக , இருள் நாளாக உலகுக்கு அறிவிப்போம். இருளேந்தி அறிவிப்போம் . இருளால் சூழ்வோம் நகரங்களையும் எமை சுற்றிய உலகையும் .எம்மை இனக்கருவறுப்பு செய்த உலகுக்கு இந்நாளின் எம் செய்தியாகட்டும் அது . உணரட்டும் உலகு . விளக்கேந்தி வீரரை வணங்கும் பண்பாடுள்ள நாங்கள் இருளேந்தி அநீதியை அறிவிப்போம்; இந்த உலகுக்கும் எம் சந்ததிக்கும்.

I B C பத்திரிகை
நன்றி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net