சவுதியில் உயிரிழந்த கணவரின் சடலத்தை கொண்டுவர உதவுங்கள்!

சவுதியில் உயிரிழந்த கணவரின் சடலத்தை கொண்டுவர உதவுங்கள்!

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தனது கணவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர உதவுமாறு, உயிரிழந்தவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த தவராஜா கோமளன் என்பவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரேபியாவில் உயிரிழந்த போதிலும், அவரது சடலம் இதுவரையில் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையிலேயே, அவரது மனை கண்ணீர் மல்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படைச்சேனையை சேர்ந்த 28 வயதுடையவர் தவராஜா கோமளன்.

இளம் குடும்பஸ்தரான இவர், குடும்ப வறுமைக் காரணமாக சவூதியில் தொழிலுக்கு சென்ற நிலையில் மாரடைப்பால் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

எனினும், அவரது சடலம் சவூதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தனது கணவர் உயிரிழந்து 43 நாட்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் அவரது சடலத்தினை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையென உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வவுணதீவு பிரதேச செயலகம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் உட்பட பல்வேறு இடங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் யாரும் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net