அனுராதபுரம் வைத்தியசாலையில் தமிழ் மருத்துவர் செய்த சாதனை!
எக்ஸ்ரே பரிசோதனையின் பின்னர் நோயாளி ஒருவரின் இடது பக்க சிறுநீரகத்தில் உருவாகியிருந்த சுமார் இரண்டு கிலோ கிராம் எடை கொண்ட பெரிய கல்லொன்றை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
கடந்த 2ம் திகதி இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
பாம்பு தீண்டிய காரணத்தினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை எக்ஸ்ரே பரிசோதனை செய்த போது, அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டது.
நொச்சியாகம, காலதிவுல்வெவ, 8 கிராமத்தை சேர்ந்த 41 வயதான ஜீ.ஜீ. காமினி ராஜபக்ச என்ற நோயாளிக்கு இந்த சத்திர சிகிக்சை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சை குறித்து கருத்து வெளியிட்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் ரி.அரவிந்தன்,
“ நோயாளியின் சிறுநீரகம் ஒன்றில் இவ்வளவு பெரிய கல் இருந்ததை நான் தற்போதுதான் முதலில் பார்த்துள்ளேன். சிறிய கல் உருவாகி நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
நான் உட்பட மருத்துவ குழுவினர் உடனடியாக நோயாளியை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தினோம்.
சிறுநீரகத்தில் இருந்த இரண்டு கிலோ கிராம் கல்லை அகற்றுவது சுலமான காரியமல்ல.
நாங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்த கல்லை துண்டு துண்டாக அகற்றினோம்.
நோயாளி உடல் நலத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சத்திர சிகிச்சைக்கு மூன்று நேரம் சென்றது. அனுராதபுரத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே இப்படியான கற்கள் உருவாகின்றன.
அனுராதபுரம் மக்கள் தண்ணீரை அதிகளவில் பருக வேண்டும். இதன் மூலம் சிறு நீர் குழாய், சிறுநீரகங்களில் கல் உருவாவதை தடுக்க முடியும்.
சிறுநீரகத்தில் சிறிய கல் உருவாகினாலும் நோயாளிக்கு அதிகமான வலி ஏற்படும். எனினும் இந்த நோயாளிக்கு அப்படியான வலி இருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.