இலங்கை கிரிக்கெட்டில் மற்றுமொரு நிதி மோசடி!
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இடம்பெறவிருந்த மற்றொரு நிதி மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
சமீபத்தில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான தொடரிற்கான தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த நிதியை மோசடி செய்ய சிலர் முயன்றுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கண்டுபிடித்துள்ளது.
தொடரை ஒலிபரப்பு செய்த சொனி நிறுவனத்திடமிருந்து 1.1 மில்லியன் டொலர் தொடர்பிலேயே மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
தொலைக்காட்சி உரிம தொகையை சொனி நிறுவனம் மூன்று தவணைகளில் வழங்குவதற்கு இணங்கியிருந்ததாகவும் முதல் இரண்டு தவணைப்பணங்களும் ஒழுங்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் மூன்றாவது தவணைப்பணம் இலங்கைக்கு கட்டுப்பாட்டுச்சபைக்கு வந்து சேரவில்லை மாறாக அந்த பணம் அமெரிக்காவில் உள்ள வங்கியொன்றிற்கு சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திலேயே இது குறித்து தெரியவந்தது,இங்கிலாந்து தொடர் குறித்த போலியான ஆவணத்தை தொடர்ந்து நாங்கள் முன்னைய பணப்பரிமாற்றங்கள் குறித்து ஆராய்ந்த வேளை இதனை கண்டுபிடித்தோம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கிரிக்கெட் ஈடுபட்டுள்ளது.
கடந்த மாதம் இங்கிலாந்து தொடரிற்கான தொலைக்காட்சி உரிமப்பணத்தில் இடம்பெறவிருந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது