எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு
இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் காணப்படும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக நாட்டில் நிலவும் மழைக்கான நிலை, எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசத்தில், பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடமேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், தென் மற்றும் வட மாகாணங்களின் கடற்கரையை அண்டிய பிரதேசங்களின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் உள் பிரதேசங்களிலும் சப்ரகமுவ வடமத்திய மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் காலை வேளையில் பனிமூட்ட நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் இடி மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.