கிளிநொச்சியில் பிடிக்கப்பட்ட 7 சிறுவர்கள்! மூவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட ஏழு சிறார்கள் இன்று பிடிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து நான்கு சிறுவர்களை சான்றுபெற்ற பாடசாலையில் தங்க வைக்குமாறும் ஏனைய மூன்று சிறுவர்கள் எச்சரிக்கப்பட்டு பெற்றோர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் பாடசாலைகளுக்கு செல்லாது அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட நிலையில் காணப்பட்ட சிறுவர்களை மீளக்கற்றலில் இணைக்கும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரி உள்ளிட்டோர் கிளிநொச்சி நகரை அண்மித்த ஆனந்தபுரம் , சாந்தபுரம் போன்ற பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலின்போது இன்று மேற்படி ஏழு சிறுவர்கள் பிடிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட ஏழு சிறுவர்களும் இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே நான்கு சிறுவர்களை சான்றுபெற்ற பாடசாலையல் தங்க வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், ஏனைய மூன்று சிறுவர்களும் அவர்களது பெற்றொர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.