யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம்..
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிலத்தடி நீரை நம்பிவாழும் யாழ். குடாநாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டு, நன்னீர் தேக்கங்கள் மற்றும் குளங்களை பாதுகாப்பது அவசியமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
சுமார் 40 குளங்கள் காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் 4 குளங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் ஏனைய குளங்களும் அழிவடைந்து வருவதாகவும் பொறியிலாளர் இராமதாசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், உரிய அதிகாரிகள் தலையிட்டு இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய அனர்த்தத்திற்கு யாழ்ப்பாணம் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோத கட்டடங்களால் வாய்க்கால்கள் மூடப்பட்டு நீர் வழிந்தோட முடியாமல் உள்ளதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக, உரிய நியமங்கள் இன்றி இவ்வாறு பல கட்டடங்கள் கட்டப்படுதால் இந்த நிலை ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.