இதுவே எனது நோக்கம்!
மக்கள் இயக்கத்தினை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து செயற்படுவதே எனது நோக்கம் என அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரனிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன் வடமாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக சந்திப்பு நீடித்தது. சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க அரசாங்கம் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பதில் தூதுவர் என்னிடம் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருந்தாலும், தாம் கொண்டு வந்த இணக்கப்பாடுடைய பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்த சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும், அருகில் இருந்து சகல நடவடிக்கைகளையும் அவதானித்துக்கொண்டிருப்போம் என்றதுடன், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கின்றார்களோ அவர்கள் ஒன்று இணைந்து செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
அதனை நானும் ஏற்றுக்கொண்டதுடன், 2015 ஆம் ஆண்டு மக்கள் ஒன்றிணைந்த காரணத்தினால் தான் வேறு சிந்தனையுடைய மக்களை முறியடிக்க முடிந்தது.
மக்களிடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இருந்தால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் ஏற்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டுமென்பது என்பதே எனது விரும்பம் என்ற கருத்தினை அவரும் ஏற்றுக்கொண்டதுடன், தமது விருப்பமும் அதே தான் என்பதனை சுட்டிக்காட்டினார்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள், இலங்கை அரசாங்கம் உரிய பதிலைத் தருவார்கள் என பதில் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டதுடன், அதற்கான அழுத்தங்களை அமெரிக்க அரசாங்கம் கொடுக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் கட்டாயமாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் உரியவற்றினை செய்வார்கள் என்றும், கால அவகாசம் கொடுப்பதனால், அரசு சரியானவற்றினை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கின்றார்கள்.
ஆகையினால், மக்கள் இயக்கம் ஒன்றினை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து செயற்படுவதே உத்தேசம் என வலியுறுத்தியுள்ளேன்.
அதனை பதில் தூதுவர் ஏற்றுக்கொண்டதுடன், மக்களின் பிரதிநிதித்துவம் சபையில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் நன்மை கிடைக்குமென்றும், முதலமைச்சர் பதவி இழந்தபின்பும், சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்றும் பதில் தூதுவர் றொபேட் கில்ரன் நம்பிக்கை வெளியிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.