அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் நான் மாத்திரமே!
அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் தான் மாத்திரமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப முன்னெடுக்கப்படும் வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘இவ்வாறான சுற்றாடல் மாநாடுகளை நாட்டின் பல மாவட்டங்களிலும் நடாத்தி வருகின்றோம்.
அதே போன்று போதைவஸ்துக்கு எதிரான மாநாடுகளையும் பல மாவட்டங்களிலும் நடாத்தி இருக்கின்றோம்.
சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான பல மாநாடுகளையும் நடாத்தி இருக்கின்றோம்.
அந்த அனைத்து வேலைத்திட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்று கொண்டமை குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
எனக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே முதல் முதலாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது நிதி அமைச்சினையே தெரிவு செய்து கொண்டனர்.
ஆனால் நான் நிதி அமைச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகள் அனைவரும் அதிசொகுசு வாழ்கையை வாழ்ந்தனர். ஆனால் நான் அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகனாகவே இருக்கின்றேன்.
எனக்கு பணம் தேவையில்லாத காரணத்தினாலேயே தான் நான் நிதி அமைச்சைக்கூட பெற்றுக்கொள்ளவில்லை.
இன்னும் ஒரு வருடங்களுக்கு பிறகு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கு எனக்கு இருக்கும் அதிகாரங்கள் கூட இருக்க போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.