அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்!
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘வனரோபா’ தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘இலங்கையில் யுத்தம் நடை பெற்றது. அந்த யுத்தத்திலே தமிழ் மக்களுக்காக எங்கள் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக ஆயுத போராட்டம் இடம் பெற்றது.
குறித்த ஆயுத போராட்டத்திற்கு உதவி செய்தார்கள் என்ற காரணத்தினால் இலங்கை சிறைகளில் தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக இருக்கின்றனர்.
அரசியல் கைதிகளாக தற்போது 107 இருகின்றார்கள். அதில் 52 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் தண்டனை அழித்தவர்களாக 55 பேர் இருக்கின்றனர்.
தமிழ் மக்களுக்காக அவர்களுடைய உரிமைக்காக, உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் தான் ஆயுத போராட்டத்திற்கு ஒரு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அதற்குறிய வகையில் பத்து வருடத்திற்கு மேல் சிறையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.
அவர்கள் கேட்பது ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ தங்களுக்கு புணர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் குடும்பங்களோடு இணையவேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர்கள் தற்போது சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
எனவே இந்த நிகழ்வில் அவர்கள் சார்பாக கேட்டு கொள்வது அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புணர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே’ என தெரிவித்துள்ளார்.