இலங்கையில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை உள ரீதியாக காயப்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் உளவியல் சுகாதார பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கோருகையில்,
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் உரிய அடைவினை பெற்றுக் கொள்ள தவறிய மாணவர்களை பெற்றோர் திட்டக்கூடாது.
அடுத்து வரும் பரீட்சைகளில் சித்தி எய்த முடியும் என அவர்களை தைரியமூட்ட வேண்டும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சில மாணவர்கள் சித்தி எய்தியிருப்பார்கள். மேலும் ஒரு தொகுதி மாணவர்கள் சித்தி எய்த தவறியிருப்பார்கள்.
பரீட்சையில் சித்தி எய்த தவறியமைக்காக தங்களது பிள்ளைகளை பெற்றோர் திட்டித் தீர்க்கக் கூடாது.
“ஏன் புள்ளிகளை பெற்றுக் கொள்ளவில்லை, பாருங்கள் எத்தனை வகுப்புக்களுக்கு நாம் உங்களை அனுப்பியிருக்கின்றோம்” என கூறக்கூடாது.
ஏனைய பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பீடு செய்வதனை தவிர்த்து கொள்ளவும். பரீட்சையில் சித்தி எய்திய மற்றும் எய்த தவறிய மாணவ மாணவியரை உள ரீதியாக வீழ்த்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிள்ளைகளை தூற்றுவதனால் அவர்கள் பிழையான முடிவுகளை எடுப்பதற்கான வாயப்பும், அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக அவர் பெற்றோரை எச்சரித்துள்ளார்.