இலங்கையை அண்மித்து ஏற்பட்ட தாழமுக்கம் வலுவடைவதாக எதிர்வுகூறல்!
அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் சாத்திய கூறுகள் தென்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(சனிக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்க நிலை வடமேல் திசையாக ஓமானை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
களுத்துறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோர பகுதிகளில் அலையின் சீற்றம் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயருவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்காரணமாக கடல்சார் தொழில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.