சீரற்ற வானிலையால் 8 இலட்சம் பேர் பாதிப்பு! – நால்வர் பலி!

சீரற்ற வானிலையால் 8 இலட்சம் பேர் பாதிப்பு! – நால்வர் பலி!

நாடுமுழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வறட்சியில், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் குறித்த எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் 8 இலட்சத்து மூவாயிரத்து நானூற்று தொன்னூற்று ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வட மேல் மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பெய்துவரும் அடைமழை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையம் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net