முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமம் மற்றும் கைலாயவன்னியன் மாதிரிக்கிராமம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளிடம் கையளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமத்தில் 30 வீடுகளும், கைலாயவன்னியன் மாதிரிக்கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தம் 55 வீடுகள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினால் நிர்மாணிக்கப்பட்டன.
இவ்வாறு அமைக்கப்பட்ட 132 வது மற்றும் 133 வது மாதிரிக்கிராமங்களின் 55 வீடுகளையும் காலை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச நாடாவை வெட்டி திறந்து மக்களிடம் கையளித்தார்.
அதனை தொடர்ந்து வீடுகளுக்கான ஆவணங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுக்கடன்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழிவில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கலேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் ஐக்கியதேசிய கட்சி வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.