நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – மின்சாரமும் தடை!
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட மற்றும் வெலிபன்ன வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட செயலாளர் யூ.டி.சி. ஜயலால் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, களுத்துறை – வல்லாவிட, லேதொல பகுதி நீரில் மூழ்கியதில் நேற்றிரவு பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன குறித்த பெண்ணைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக வல்லாவிட பிரதேச செயலாளர் எம். ரஞ்சன் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், புத்தளம் – மன்னார் வீதியின் எழுவான்குளம் பகுதியும் நீரில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக, 6 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 85 வீதமாக அதிகரித்துள்ளதாக மஹாவெலி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90 வீதமாக அதிகரித்துள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ரன்தெனிகல மற்றும் விக்டோரியா ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் முறையே 86 வீதமாகவும் 85.5 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
அத்துடன், ஏனைய நீர்நிலைகளின் நீர்மட்டமும் 50 வீதமாக அதிகரித்துள்ளதாக மஹாவெலி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
களுத்துறையில் 3500 வீடுகளுக்கும், கண்டியில் 750 வீடுகளுக்கும் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.