ரணிலுக்கு பதிலாக பிரதமராக மஹிந்த?
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பத்தரமுல்ல இல்லத்தில் இடம்பெற்றதாகவும், பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இதில் பங்கேற்றனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தச்சந்திப்பின் போது இடைக்கால பரந்த கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் இருதலைவர்களும் இணக்கம் கண்டுள்ளதாகவும் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
இதன்போது, பரந்துபட்ட, கூட்டணி மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இந்தப் பேச்சுக்களில், பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார்.
இந்தப் பேச்சுக்கள் வெற்றியளித்தால், மேற்பார்வை அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார்.
அடுத்த சுற்றுப் பேச்சுக்கள், இரண்டு வாரங்களின் பின்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை சீஷெல்ஸ் நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர் போலந்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணங்களின் பின்னர், இரண்டு வாரங்களில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை ஜனாதிபதி சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பான வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சதித்திட்டம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியாத பல விடயங்களை, மைத்திரிபால சிறிசேனவிடம், மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகி, கூட்டு எதிரணியுடன் இணைந்து மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள சூழலிலேயே இந்த இரகசியச் சந்திப்பு பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.