5ஆம் தர மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தங்களை பிரயோகிக்க கூடாது!
ஐந்தாம் தர மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தங்கள் பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின்போது உரையாற்றிய அவர், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போது பெற்றோர் விடுக்கும் அழுத்தங்களால் பிள்ளைகள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளதாகக் அவர் கூறியுள்ளார்.
இது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சையில் எவ்வாறான பெறுபேறுகள் கிடைத்தாலும் பிள்ளைகளை தொந்தரவுகளின்றி அரவணைப்பது எவ்வாறு என்பது தொடர்பில், ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயார்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து கடந்த காலங்களில் நாட்டின் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது குறித்து அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.