இந்தோனேசியாவில் மேலும் சில உடல்கள் கண்டெடுப்பு!
இந்தோனேசியாவில் சுலவெசி தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,944ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பலு நகரில் தரைமட்டமாகிய 8 மாடி கட்டடம் அமைந்திருந்த இடத்தில் இடம்பெற்று வந்த மீட்புப் பணிகள் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்துள்ளன.
இன்றைய தகவலின் பிரகாரம் 1,944 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் எம்.தோஹிர் தெரிவித்துள்ளார்.
எனினும், சுமார் 5000 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை பற்றிய எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
அவர்கள் எங்கேனும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாமென இன்னும் நம்பப்படுகிறது.
எவ்வாறெனினும், எதிர்வரும் 11ஆம் திகதியுடன் மீட்புப் பணிகள் நிறைவடையவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி 7.5 ரிச்டர் அளவில் சுலவெசி தீவை தாக்கிய குறித்த நிலநடுக்கம், இந்தோனியாவை உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் பாதிக்கப்பட்ட சுமார் 200,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.